×

நிலவை ஆய்வு செய்ய சந்திராயன்-2 ஜூலை 2வது வாரத்தில் ஏவப்படும்: இஸ்ரோ தகவல்

சென்னை: நிலவை ஆய்வு செய்யும் சந்திராயன்-2 விண்கலம் ஜூலை 2வது வாரத்தில் விண்ணில் ஏவப்படும் என இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ தெரிவித்துள்ளது. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) பி.எஸ்.எல்.வி. மற்றும் ஜி.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகளை தயாரித்து அவற்றில் உள்நாடு மற்றும் வெளிநாட்டு செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி வருகிறது. இந்தியா முதன்முறையாக சந்திராயன்-1 விண்கலத்தை கடந்த 2008ம் ஆண்டு அக்டோபர் மாதம் விண்ணில் அனுப்பியது. இந்த விண்கலம் நிலவின் தரைப்பகுதியில் இருந்து 100 கிலோ மீட்டர் உயரத்தில் சுற்றி வந்தது. இது நிலவில் உள்ள சூழல்கள், கனிமங்களை எடுத்து ஆய்வு செய்து வந்தது. இதையடுத்து இந்த விண்கலம் 2009ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அதன் ஆயுள்காலத்தை நிறைவு செய்தது. இதையடுத்து, இந்தியா மீண்டும் நிலவுக்கு சந்திராயன்-2 விண்கலத்தை அனுப்ப திட்டமிட்டது. இது விண்வெளி ஆய்வின் மிக முக்கியமான திட்டம் என்பதால் இஸ்ரோ இதில் அதிக கவனம் செலுத்தி வருகிறது.

ஜூலை 9ம் தேதியில் இருந்து 16ம் தேதிக்குள் சந்திராயன்-2வது விண்கலம் விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது. சந்திராயன்-2 விண்கலத்தில் குறிப்பாக 3 முக்கிய தொழில்நுட்பங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. அவை, ஆர்பிட்டர், லேண்டர்(விக்ரம்), ரோவர்(பிரக்யாண்) ஆகியவை ஆகும். ஆர்பிட்டர் மற்றும் லேண்டர் இரண்டும் இணைக்கப்பட்டு ஜி.எஸ்.எல்.வி மார்க்-3 ராக்கெட் மூலம் ஏவப்படும். லேண்டரினுள் ரோவர் பொருத்தப்படும். சந்திராயன்-2 விண்ணில் ஏவப்பட்ட உடன் ஆர்பிட்டரானது நிலவை சென்றடையும். அதன்பிறகு லேண்டர் மற்றும் ரோவர் தனியாக பிரிக்கப்பட்டு நிலவின் தென்துருவ தரைப்பகுதியில் லேண்டர் இறங்கும். ஜூலை 2வது வாரத்தில் விண்ணில் ஏவப்படும் சந்திராயன்-2 விண்கலம் செப்டம்பர் 6ல் நிலவில் தரை இறங்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. நிலவில் தரை இறங்கியதும் ரோவர் தன்னுடைய ஆய்வு நடத்தும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Chandraayan ,ISRO , Chandraayan-2, ISRO
× RELATED சென்னையை சேர்ந்த ஸ்டார்ட்அப்...