×

ஹோமியோ, சித்தா படிப்புக்கு நீட் தேர்வு உண்டா, இல்லையா? குழப்பத்தில் மாணவர்கள்

திருமங்கலம்: எம்பிபிஎஸ் மருத்துவ படிப்பிற்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டது போல் ஹோமியோபதி, சித்தா உள்ளிட்ட பாரம்பரிய மருத்துவப் படிப்புகளுக்கும் நீட் தேர்வு உண்டா, இல்லையா என்பதை தமிழக அரசு தெளிபடுத்த வேண்டும் என மாணவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
நாடு முழுவதும் எம்பிபிஎஸ் மருத்துவ படிப்பிற்கு நீட் தேர்வு கட்டாயம் என மத்திய அரசு அறிவித்தது. இதற்கு தமிழகத்தில் பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பிய போதும் கடந்தாண்டு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டது. பிளஸ் 2 தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்த மாணவர்கள் பலரும் தங்களது மருத்துவ படிப்பை கைவிடும் நிலைக்கு நீட் தேர்வு காரணமாக அமைந்தது.

இந்தநிலையில் பாரம்பரிய மருத்துவ படிப்புகளான சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி உள்ளிட்டவைக்கும் நீட் தேர்வு கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்து வடமாநிலங்களில் அமல்படுத்தியுள்ளது. ஆனால் தமிழகத்தில் கடந்தாண்டு வரை இந்த மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வு கொண்டு வரப்படவில்லை. பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையிலேயே இட ஒதுக்கீடு செய்யப்பட்டு மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

ஆனால் நடப்பு ஆண்டில் தமிழகத்திலும் சித்தா, ஹோமியோபதி உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்படும் என எதிர்பார்ப்பு உருவாகியுள்ளதால் மாணவ, மாணவியர் அச்சமடைந்துள்ளனர். இதுகுறித்து தமிழக அரசு ஒரு தெளிவான அறிவிப்பை வெளியிட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து கல்வியாளர்கள் கூறுகையில், ‘‘தமிழகத்தில் அரசு ஹோமியோபதி கல்லூரி மதுரை மாவட்டம், திருமங்கலத்திலும், அரசு சித்தா கல்லூரி நெல்லை பாளையங்கோட்டை மற்றும் சென்னையிலும், அரசு ஆயுர்வேதா கல்லூரி கன்னியாகுமரி கோட்டாரிலும், யுனானி அரசுகல்லூரி சென்னையிலும் அமைந்துள்ளது.

கடந்தாண்டு நீட் தேர்வில் தோல்வியடைந்த தமிழக மாணவர்கள் பலரும் இந்த பாரம்பரிய மருத்துவ படிப்புகளை எடுத்து படித்து வருகின்றனர். இந்தாண்டு நீட் தேர்வு சித்தா, ஹோமியோபதி உள்ளிட்ட படிப்புகளுக்கு கொண்டு வந்தால் தமிழக மாணவர்களின் மருத்துவ கனவு மேலும் சிதைவடையும். எனவே தமிழக அரசு உரிய விளக்கத்தை துரிதமாக அளிக்க வேண்டும்’’ என்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : home , Homeowna, Siddha Study, Need Selection, Students
× RELATED நக்சல், தீவிரவாதத்தை ஒழிக்க மோடிதான்...