×

19ம் தேதி நடக்கும் 4 தொகுதிக்கு நடைபெறும் இடைத்தேர்தலில் 137 பேர் போட்டி: அதிகபட்சமாக அரவக்குறிச்சியில் 63 வேட்பாளர்கள்

சென்னை: தமிழகத்தில் வருகிற 19ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் சூலூர், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம் ஆகிய 4 சட்டமன்ற தொகுதியில் மொத்தம் 137 பேர் போட்டியிடுவதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக நேற்று அறிவித்தது. இதில் அதிகப்பட்சமாக அரவக்குறிச்சி தொகுதியில் மட்டும் 63 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தமிழகத்தில் 38 நாடாளுமன்ற தொகுதிக்கும், 18 சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் கடந்த மாதம் 18ம் தேதி நடைபெற்றது. வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் மட்டும் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், தமிழகத்தில் மேலும் காலியாக இருந்த சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் மே 19ம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் கடந்த மாதம் 9ம் தேதி அறிவித்தது. இந்த 4 தொகுதியில் போட்டியிட திமுக, அதிமுக, அமமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் ஆர்வமுடன் வேட்புமனு தாக்கல் செய்தனர். வேட்புமனு தாக்கல் கடந்த 29ம் தேதியுடன் முடிவடைந்தது.

இடைத்தேர்தல் நடைபெறும் 4 சட்டமன்ற தொகுதியிலும் மொத்தம் 256 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். இதைத்தொடர்ந்து கடந்த 30ம் தேதி மனுக்கள் மீது பரிசீலனை நடைபெற்றது. வேட்புமனு பரிசீலனையின் முடிவில் நான்கு தொகுதியிலும் மொத்தம் 152 பேர் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. முறையான ஆவணங்கள் இல்லாததால் 104 பேர் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. மனுக்களை வாங்க நேற்று (2ம் தேதி) மாலை 3 மணி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டது. இதில் 4 தொகுதியிலும் மொத்தம் 15 பேர் மட்டுமே தங்கள் மனுக்களை வாபஸ் பெற்றனர். இதையடுத்து, நேற்று மாலை 3 மணிக்கு இறுதி வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. அதன்படி, சூலூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த 61 மனுக்களில் 39 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு 22 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. நேற்று மாலை வரை இந்த தொகுதியில் ஒருவர் கூட வாபஸ் பெறவில்லை. அதன்படி, இறுதியாக இங்கு 22 பேர் களத்தில் உள்ளனர்.

அதேபோன்று திருப்பரங்குன்றம் தொகுதியில் 63 பேர் வேட்புமனு செய்ததில் 19 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு 44 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. நேற்று 7 மனுக்கள் வாபஸ் பெற்றப்பட்டது. இறுதியாக இங்கு 37 பேர் களத்தில் உள்ளனர். சூலூர் தொகுதியில் 41 பேர் வேட்புமனு செய்ததில் 23 பேர் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு 18 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. நேற்று 3 பேர் தங்கள் மனுக்களை வாபஸ் பெற்றனர். இறுதியாக 15 பேர் களத்தில் உள்ளனர். அரவக்குறிச்சி தொகுதியில் 91 பேர் வேட்புமனு தாக்கல் செய்ததில் 23 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு, 68 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. நேற்று 5 பேர் தங்கள் மனுக்களை வாபஸ் வாங்கினார். இங்கு அதிகப்பட்சமாக 63 பேர் களத்தில் உள்ளனர். நேற்று மாலை இறுதி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, சுயேச்சை வேட்பாளர்களுக்கு சின்னமும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. சுயேச்சை வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், இடைத்தேர்தல் நடைபெறும் 4 தொகுதிகளில் இன்று முதல் தேர்தல் பிரசாரம் இன்னும் தீவிரமடையும்.

இந்த நான்கு தொகுதிகளிலும் வருகிற 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதையடுத்து 38 நாடாளுமன்ற தொகுதி, 22 சட்டமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை மே 23ம் தேதி நடைபெற்று, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும். தமிழகத்தில் 4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவுக்கு இன்னும் 15 நாட்களே உள்ளதால், அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த இரண்டு நாட்களாக ஓட்டப்பிடாரம் தொகுதியில் முகாமிட்டு சூறாவளி பிரசாரம் செய்தார். பல கிராமங்களில் அவர் வீடு வீடாகவும், திண்ணை பிரசாரத்திலும் ஈடுபட்டு வருகிறார். நேற்றும் மு.க.ஸ்டாலின் ஓட்டப்பிடாரத்தில் பிரசாரம் செய்தார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று திருப்பரங்குன்றம் தொகுதியில் தனது பிரசாரத்தை தொடங்கினார். அமமுக கட்சி தலைவர் டி.டி.வி.தினகரனும் நேற்று திருப்பரங்குன்றம் தொகுதியில் பிரசாரம் செய்தார். நேற்று மாலை இறுதி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, சுயேச்சை வேட்பாளர்களுக்கு சின்னமும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : constituencies ,nominees , 4 constituencies, by-elections, by-elections, 63 candidates
× RELATED கேரளாவில் ராகுல் போட்டியிடும் வயநாடு...