×

ஒகேனக்கல் வனப்பகுதியில் தேடும் பணி தீவிரம் வாலிபரை சுட்டுக்கொன்றது வேட்டை கும்பல்: உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மறியல்

தர்மபுரி: ஒகேனக்கல் வனப்பகுதியில், துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்ட வாலிபர் உடலை வாங்க மறுத்த உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர். வாலிபரை சுட்டுக்கொன்றது வன விலங்கு வேட்டைக்கும்பல் என்று தெரியவந்துள்ளது. தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே, ஜருகு குரும்பட்டியான் கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் முனுசாமி(27). டிப்ளமோ படித்துள்ள இவர், கோவை சங்கோதிபாளையத்தில் உள்ள தனியார் லாரி உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

வேலை விஷயமாக, கடந்த வாரம் கொல்கத்தா சென்றிருந்த முனுசாமி, நேற்று முன்தினம் மே தின விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தார். பின்னர், ஈரோடு கருங்கல்பாளையத்தில் உள்ள சகோதரியின் 15 வயது மகளை (10ம் வகுப்பு மாணவி), டூவீலரில் ஒகேனக்கல்லுக்கு அழைத்துச் சென்றார்.

அங்கிருந்து மாலையில் திரும்பும் போது, பண்ணப்பட்டியில் தனிமையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது, 4 பேர் கொண்ட மர்ம கும்பல், சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்றனர். அதை தடுத்த முனுசாமியை, துப்பாக்கியால் சுட்டு கொலை செய்தனர். அந்த கும்பலிடம் இருந்து தப்பி வந்த சிறுமியை, அவ்வழியாக வந்த சுற்றுலா பயணிகள் மீட்டனர்.

இதுகுறித்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட எஸ்பி ராஜன், பென்னாகரம் டிஎஸ்பி மேகலா ஆகியோர் விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக, ஒகேனக்கல் போலீசார் வழக்குப்பதிந்து, தப்பியோடிய மர்ம கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர். இதனிடையே, விசாரணையில் வாலிபரை சுட்டுக்கொன்றது வேட்டைக்கும்பலாக இருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது.

பண்ணப்பட்டியைச் சேர்ந்த ஒருவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அந்த நபர் மீது, வனவிலங்குகளை வேட்டையாடி இறைச்சியை விற்பனை செய்ததாக வழக்கும் உள்ளது. மேலும், நாட்டுத்துப்பாக்கிகளை வாங்கி, வேட்டைக்காரர்களுக்கு விற்பனை செய்தும் வந்துள்ளார். இதையடுத்து, அவரது வீட்டிற்கு போலீசார் சென்ற போது, அவரை காணவில்லை.

தொடர்ந்து அவர் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த நபருக்கு சுமார் 35 வயது இருக்கும் என்றும் திருமணமாகி மனைவி, குழந்தைகள் உள்ளனர் என்றும் போலீசார் தெரிவித்தனர். அவர்தான் கொலையாளி என்றும் அவருடன் இருந்தவர்கள் அவரது கூட்டாளிகள் என்றும் அவர் சைகோ போல எப்போதும் போதையில் இருப்பார் எனவும் போலீசார் கூறுகின்றனர். அவரை தனிப்படை அமைத்து போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.

இதனிடையே, முனுசாமியின் உடலை வாங்க மறுத்து, அவரது உறவினர்கள் நேற்று மாலை தர்மபுரி-சேலம் மெயின்ரோட்டில், அரசு மருத்துவமனை முன்பு மறியலில் ஈடுபட்டனர். இதையறிந்த போலீசார், சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் கொலையாளிகளை கைது செய்யும்வரை கலைந்து செல்ல மாட்டோம் என்று மறுத்ததால், வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தகவல் அறிந்த மாவட்ட எஸ்பி ராஜன் வந்து சமரசம் செய்தார்.

ஒகேனக்கல்லில் பாதுகாப்பு இல்லை

முனுசாமியின் உறவினர்கள் கூறுகையில், ‘விரைவில் முனுசாமிக்கும், அக்கா மகளுக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்திருந்தோம். ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் ஒகேனக்கல்லில், பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தால், இதுபோன்ற அசம்பாவிதம் நடந்திருக்காது. கொலையாளிகளை கைது செய்யும்வரை, முனுசாமியின் உடலை வாங்க மாட்டோம்’ என்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Honeymoon ,forests ,forest ,hunter hunt ,strangers , Hogenakkal forest, searching work, intensity, hunting mob
× RELATED மூணாறு சாலையில் உலா வந்த காட்டு யானை