×

ஜிஎஸ்டிக்கு பிறகு மொத்தமாக படுத்தது பிசினஸ் 300 ஆட்டோமொபைல் ஷோரூம்களுக்கு மூடுவிழா

* வாடகை, சம்பளம் கொடுக்க முடியாமல் திணறல்
* விற்பனை சரிவு; 3,000 ஊழியர்கள் வேலையிழப்பு

புதுடெல்லி: பண மதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி அமலாக்கம் போன்றவற்றால் ஆட்டோமொபைல் தொழில் கடும் நெருக்கடிைய சந்தித்து வருகிறது. நஷ்டம் காரணமாக சுமார் 300 ஷோரூம்கள் மூடப்பட்டு விட்டன. ஏராளமான ஊழியர்கள் வேலை இழந்து விட்டனர். இந்திய ஆட்டோமொபைல் தொழில் கடந்த சில ஆண்டுகளாகவே தள்ளாட்டத்தில் உள்ளது. கருப்பு பணம் மற்றும் கள்ள நோட்டை ஒழிக்க, பழைய ரூ500, ரூ1,000 நோட்டு செல்லாது என 2016 நவம்பர் 8ம் தேதி பிரதமர் நரேந்திரமோடி அறிவித்தார். இதன்பிறகு பணப்புழக்கம் அடியோடு சரிந்ததால் பல தொழில்கள் பாதிக்கப்பட்டன. இதில் ஆட்டோமொபைல் தொழிலும் தப்பவில்லை. வழக்கமாக ஆட்டோமொபைல் நிறுவனங்கள் ஆண்டு இறுதியில் தள்ளுபடிகளை அள்ளித்தந்து விற்பனையை உயர்த்தும். பணமதிப்பு நீக்கம் இதற்கு வேட்டு வைத்து விட்டது. இதை தொடர்ந்து ஜனவரிக்கு பிறகும் விற்பனை சோபிக்கவில்லை. ரிசர்வ் வங்கி கெடுபிடிகளால் வங்கிகளில் கடன் வழங்குவதும் குறைந்து விட்டது.

இதுதவிர, மத்திய அரசு அறிவித்த கட்டாய பாதுகாப்பு அம்சங்கள் காரணமாக கார்களின் விலையை உயர்த்த வேண்டிய நிலைக்கு நிறுவனங்கள் தள்ளப்பட்டுவிட்டன. இதுவும் விற்பனையை பாதித்தது. இதில் இருந்து மீண்டு வருவதற்குள் ஜிஎஸ்டி அமலானது. இதன் காரணமாகவும் ஆட்டோமொபைல் துறை பாதிக்கப்பட்டுள்ளது.  இதுகுறித்து ஆட்டோமொபைல் டீலர்கள் கூறியதாவது: கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் ஆட்டோமொபைல் டீலர்களுக்கு சுமார் ரூ2,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. கார், டூவீலர், கனரக வாகன ஷோரூம்கள் உட்பட சுமார் 300 ஷோரூம்கள் மூடப்பட்டு விட்டன. இதில் பணியாற்றி வந்த சுமார் 3,000 ஊழியர்கள் வேலை இழந்து விட்டனர். கார் டீலர்களுக்கு லாபம் சராசரியாக 2.5 சதவீதம் முதல் 5 சதவீதம்  வரைதான் அளிக்கப்படுகிறது. ஆனால், வெளிநாடுகளில் 8 சதவீதம் முதல் 12 சதவீதம் அளிக்கின்றனர். இதனால் லாபம் குறைந்து விட்டது. ஜிஎஸ்டி அறிமுகம் செய்த பிறகு இன்சூரன்ஸ் மற்றும் நிதி நிறுவனங்கள் கூட, தாங்கள் வழங்கும் லாப சதவீதத்தை குறைத்து விட்டன. இதனால் தொடர்ந்து தொழிலை நடத்த முடியாத நிலை ஏற்பட்டு விட்டது.

அதோடு, பெரிய நகரங்களில் புதிதாக ஷோரூம்கள் திறக்கப்பட்டன. ஏற்கெனவே விற்பனை மந்தமாக உள்ளது. இந்த சூழ்நிலையில், புதிய ஷோரூம்கள் வருகை விற்பனையை மேலும் மந்தமாக்கி விட்டது. புதிதாக ஷோரூம் திறந்தவர்கள் மட்டுமின்றி, ஏற்கெனவே உள்ள டீலர்களும் பாதிப்புக்கு ஆளாகினர் என தெரிவித்தனர். ஆட்டோமொபைல் டீலர்கள் சங்க தலைவர் ஆசிஷ் காலே கூறுகையில், பணப்புழக்கம் குறைந்து, ஜிஎஸ்டி ஆகியவையே ஆட்டோமொபைல் டீலர்களை வெகுவாக பாதித்துவிட்டது என்றார். இன்சூரன்ஸ், நிதி நிறுவனங்கள் லாபம் குறைந்ததால், டீலர்களுக்கு ஒட்டு மொத்தமாக வாகன விற்பனையில் சுமார் 3 சதவீதம் முதல் 5 சதவீதம் வரைதான் கிடைக்கிறது. அதோடு ரியல் எஸ்டேட் மற்றும் ஊழியர் சம்பளம் ஆகியவை கடந்த சில ஆண்டுகளில் 100 சதவீதம் அதிகரித்து விட்டது. இதனால் சமாளிக்கவே முடியவில்லை. பல டீலர்கள் வங்கிகளில் கடன் வாங்கி தொழில் தொடங்கியுள்ளனர். கடனை செலுத்த முடியாததால் பல வராக்கடன்களாக மாறி விட்டன என்று டீலர்கள் கவலையுடன் தெரிவித்தனர்.

* ஆட்டோமொபைல் டீலர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளில் சுமார் ரூ2,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
* சுமார் 300 ஷோரூம்கள் மூடப்பட்டு விட்டன. இதில் பணியாற்றிய 3,000 ஊழியர்கள் வேலை இழந்து விட்டனர்.
* டீலர்கள் லாபம் சரிவு, ஜிஎஸ்டி அமலாக்கம் போன்றவற்றால் ஷோரூம் நடத்தவே முடியவில்லை.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : GST ,Automobile Showrooms , GST, Business, Automobile Showroom, Closing Festival
× RELATED கடந்த ஏப்ரல் மாதத்துக்கான ஜிஎஸ்டி வசூல் ரூ2.1 லட்சம் கோடி