×

தண்ணீர் பஞ்சத்தை போக்க சென்னையில் தண்ணீர் லாரிகளுக்கு கட்டுப்பாடுகள் தளர்வு: 24 மணி நேரமும் இயங்கும்

சென்னை: சென்னையில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடி வருவதை சமாளிக்கும் வகையில் 24 மணி நேரமும் மாநகரப் பகுதிக்குள் தண்ணீர் லாரிகளை இயக்க விதிகளை தளர்த்தி போலீசார் அனுமதி வழங்கியுள்ளனர். சென்னையை பொறுத்தவரை குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடி வருவதால் மாநகர பகுதிக்குள் வசிப்பவர்கள் பலர் வீடுகளை காலி செய்து வெளிப்புற பகுதிகளில் குடியேறி வருகின்றனர். சென்னைக்கு குடிநீர் ஆதாரமான ஏரிகளில் தண்ணீர் இல்லாமல் வறண்டுவிட்ட நிலையில் மாற்று ஏற்பாடுகள் மூலம் கிடைக்கும் தண்ணீரை பகிர்ந்தளித்து வருகின்றனர். குழாய்களில் தண்ணீர் விடுவதை நிறுத்திவிட்டு, தற்போது அனைத்து பகுதிகளுக்கும் லாரிகள் மூலம் தண்ணீர் சப்ளை செய்து வருகின்றனர்.   சென்னை மாநகர பகுதிக்குள் தற்போது 8000க்கும் மேற்பட்ட குடிநீர் வாரிய ஒப்பந்த லாரிகள் மூலம் தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது.

தண்ணீர் தேவை அதிகமாக இருக்கும் இந்த சூழ்நிலையில், குடிநீர் வாரிய ஒப்பந்த லாரிகள் மற்றும் தனியார் தண்ணீர் லாரிகள் போக்குவரத்து விதிப்படி சென்னை மாநகர பகுதிகளுக்குள் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை மட்டுமே இயக்க வேண்டும். குறிப்பிட்ட நேரத்துக்குள் மட்டுமே லாரிகளை இயக்க வேண்டிய கட்டாயத்துக்குள் இருப்பதால் பதிவு செய்தவர்களுக்கு உரிய நேரத்தில் தண்ணீர் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதை சமாளிப்பதற்காக, சென்னை குடிநீர் ஒப்பந்த லாரி உரிமையாளர்கள் மற்றும் தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என்று மாநகர போக்குவரத்து கூடுதல் கமிஷனர் அருணை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.  
இதையடுத்து, போக்குவரத்து கூடுதல் கமிஷனர் அருண் அறிவுறுத்தலின்படி சென்னை முழுவதும் உள்ள குடிநீர் வாரிய ஒப்பந்த தண்ணீர் லாரி உரிமையாளர்கள் மற்றும் தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் ஆலோசனை கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

அதன்படி, நேற்று இந்த ஆலோசனை கூட்டம் ெசன்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில், கோடை காலத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு இல்லாமல் தடையின்றி கிடைக்கும் வகையில், சென்னையில் இயங்கி வரும் சென்னை குடிநீர் வாரிய தண்ணீர் லாரிகள் மற்றும் தனியார் லாரிகள் பகல் நேரங்களில் பயணிக்க சென்னை மாநகர போக்குவரத்து காவல் துறை நேரக்கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளது.
கோடைகாலத்தை முன்னிட்டு 24 மணி நேரமும் தண்ணீர் லாரிகளை இயக்க அனுமதி வழங்கப்பட்டது. அதேநேரம், மிகுந்த கவனத்துடன் வாகனங்களை இயக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது. மேலும், தண்ணீர் பிரச்னை ஓரளவு குறையும் என்றாலும் பொதுமக்கள் சாலைகளில் மிகவும் கவனமுடன் செல்ல போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Water. Chennai. Water lorries
× RELATED ₹621 கோடி மதிப்பீட்டில், 3...