×

இடைத்தேர்தல் நடைபெறும் சூலூர், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம் தொகுதிகளில் மு.க.ஸ்டாலின், எடப்பாடி, தினகரன் சூறாவளி பிரசாரம்: இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று மாலை வெளியீடு

சென்னை: தமிழகத்தில் வருகிற 19ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் சூலூர், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம் ஆகிய 4 தொகுதிகளில் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, டி.டி.வி.தினகரன் ஆகியோர் நேற்று முதல் தங்களது சூறாவளி பிரசாரத்தை தொடங்கினர். இந்த 4 தொகுதியில் போட்டியிடும் இறுதி வேட்பாளர்கள் பட்டியலை தேர்தல் ஆணையம் இன்று மாலை 3 மணிக்கு வெளியிடுகிறது. தமிழகத்தில் 38 நாடாளுமன்ற தொகுதிக்கும், 18 சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் கடந்த மாதம் 18ம் தேதி நடைபெற்றது. வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் மட்டும் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், தமிழகத்தில் மேலும் காலியாக இருந்த சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் மே 19ம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் கடந்த மாதம் 9ம் தேதி அறிவித்தது.

இந்த 4 தொகுதியில் போட்டியிட திமுக, அதிமுக, அமமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் ஆர்வமுடன் வேட்புமனு தாக்கல் செய்தனர். வேட்புமனு தாக்கல் முடிவடைந்துள்ளது. இடைத்தேர்தல் நடைபெறும் 4 சட்டமன்ற தொகுதியிலும் மொத்தம் 256 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் மனுக்கள் மீது பரிசீலனை நடைபெற்றது. வேட்புமனு பரிசீலனையின் முடிவில் நான்கு தொகுதியிலும் மொத்தம் 152 பேர் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. முறையான ஆவணங்கள் இல்லாததால் 104 பேர் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.

அதன்படி சூலூர் தொகுதியில் 22 மனுக்கள், அரவக்குறிச்சி தொகுதியில் 68 மனுக்கள், திருப்பரங்குன்றம் தொகுதியில் 44 மனுக்கள், ஓட்டப்பிடாரம் தொகுதியில் 18 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இரண்டு நாட்கள் மனுக்களை வாபஸ் வாங்க அனுமதிக்கப்பட்டது. நேற்று அரசு விடுமுறை (மே 1ம் தேதி) என்பதால் வேட்பு மனுக்களை வாபஸ் வாங்கப்படவில்லை. இன்று மாலை 3 மணி வரை வாபஸ் வாங்கலாம். பின்னர் இன்று (2ம் தேதி) மாலை 3 மணிக்கு இறுதி வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக வெளியிடும்.

இன்று மாலையே சுயேச்சை வேட்பாளர்களுக்கு சின்னமும் ஒதுக்கீடு செய்யப்படும்.இந்த 4 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவுக்கு இன்னும் 16 நாட்களே உள்ளதால், அரசியல் கட்சி வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். தற்போது 4 தொகுதிகளிலும் திமுக, அதிமுக, அமமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் உள்ளிட்ட 5 அரசியல் கட்சிகள் இடையேதான் போட்டி உள்ளது. அதிலும், குறிப்பாக முக்கிய கட்சிகளான திமுக, அதிமுக மற்றும் டி.டி.வி.தினகரனின் அமமுக ஆகிய மூன்று கட்சிகள் இடையே பெரிய அளவில் போட்டி ஏற்பட்டுள்ளது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் நேற்று முதல் 4 சட்டமன்ற தொகுதியையும் முற்றுகையிட்டு தேர்தல் பிரசாரத்தை தொடங்கி உள்ளனர். அதன்படி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று ஓட்டப்பிடாரம் தொகுதியில் முகாமிட்டு வீதி வீதியாக சென்று பிரசாரம் செய்தார். முன்னதாக, அவர் நேற்று முன்தினமே தூத்துக்குடிக்கு சென்று நாடாளுமன்ற வேட்பாளர் கனிமொழியுடன் ஓட்டப்பிடாரம் தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களுக்கு சென்று வீடு வீடாக வாக்கு சேகரித்தார்.

இன்றும் மு.க.ஸ்டாலின் ஓட்டப்பிடாரம் தொகுதியில் தீவிர பிரசாரம் செய்கிறார்.அதேபோன்று அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் நேற்று முதல் பிரசாரத்தை தொடங்கினார். இதற்காக நேற்று மதியம் சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை சென்றார். நேற்று மாலை 5 மணிக்கு சூலூர் தொகுதியில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து அவர் பிரசாரம் செய்தார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று திருப்பரங்குன்றம் தொகுதியில் தனது பிரசாரத்தை தொடங்குகிறார்.

அமமுக கட்சி தலைவர் டி.டி.வி.தினகரனும் நேற்று திருப்பரங்குன்றம் தொகுதியில் பிரசாரத்தை தொடங்கினார். மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமலஹாசனும் விரைவில் பிரசாரத்தை தொடங்குகிறார். கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் அரசியல் கட்சி தலைவர்கள் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறும் 4 தொகுதிகளை முற்றுகையிட்டு சூறாவளி பிரசாரத்தை தொடங்கியுள்ளதால் தமிழகத்தில் தேர்தல் களம் மீண்டும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இந்த நான்கு தொகுதிகளிலும் வருகிற 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதையடுத்து 38 நாடாளுமன்ற தொகுதி, 22 சட்டமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை மே 23ம் தேதி நடைபெற்று, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : election ,Ettapadi ,Dinakaran ,constituencies ,Aravakurichi ,hurricane campaign ,Ottapidaram ,Sulur , By-election, volume, mkstallin, edapadi, dinakaran, hurricane, campaign
× RELATED மக்களவை தேர்தல் பரப்புரையில் ‘டீப்...