×

தூய்மை இந்தியா திட்டத்தில் இணைத்து கட்டப்படும் தனிநபர் கழிவறைகள்

* ஆத்தூர் ஒன்றிய மக்கள் அதிருப்தி * தண்ணீர் இல்லாததால் ‘நோ யூஸ்’


செம்பட்டி :  ஆத்தூர் ஒன்றியத்தில் தனிநபர் கழிவறைகளை இணைத்து கட்டியுள்ளனர். இவற்றிற்கு தண்ணீர் வசதி இல்லாததால் மக்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. ஆத்தூர் ஒன்றியத்தில் ஆத்தூர், அக்கரைப்பட்டி, என்.பஞ்சம்பட்டி, போடிக்காமன்வாடி, காந்திகிராமம், கலிக்கம்பட்டி உட்பட 22 கிராம ஊராட்சிகள் உள்ளன. தூய்மையான இந்தியாவை உருவாக்க தனிநபர் கழிப்பறை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சுகாதாரம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 1999ம் ஆண்டு மத்திய அரசு நிர்மல் பாரத் அபியான் என்ற திட்டத்தை உருவாக்கியது.

இத்திட்டத்தின்கீழ் கழிப்பறைகள் கட்டுவது குறித்தும், கழிப்பறையின் அவசியம் குறித்தும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. திறந்தவெளி மலம் கழிப்பு இல்லாத கிராமங்களுக்கு மத்திய அரசின் நிர்மல் புரஸ்கார் விருதை வழங்கி கவுரவித்தது. தற்போது தூய்மை இந்தியா திட்டம் மூலம் தனிநபர் கழிப்பறை திட்டம் கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்மூலம் கழிப்பறை இல்லாத வீடுகளுக்கு ரூ.12 ஆயிரம் மானியத்தில் கழிப்பறைகள் கட்டிக்கொடுக்கப்பட்டு வருகிறது.

ஆத்தூர் ஒன்றியத்தில் ஆத்தூர், பாளையங்கோட்டை, போடிக்காமன்வாடி, தொப்பம்பட்டி ஊராட்சிகளில் தனிநபர் கழிப்பறைகள் கூட்டுக் கழிப்பறைகளாக மாறி வருகிறது. பத்து கழிப்பறைகளை மொத்தமாக ஊர் பொது இடங்களில் கட்டி அவற்றில் பயனாளிகள் பெயர்களை எழுதி வைத்துள்ளனர். இவ்வாறு கட்டப்படும் கழிப்பறைகள் தரமில்லாமல் இருப்பதாலும், தண்ணீர் வசதி, மின்வசதி இல்லாததாலும் பொதுமக்கள் பயன்படுத்த தகுதியில்லாமல் போய்விடுகிறது. இதுதவிர இரவு நேரங்களில் யாரும் அந்த கழிப்பறைகளை பயன்படுத்துவது இல்லை.

கட்டி திறப்பு விழா காண்பதற்கு முன்பே பாதி கழிப்பறைகள் இடிந்தும், கதவுகள் பெயர்ந்தும் இருப்பதால், இத்திட்டம் தோல்வியடைந்துள்ளது. குறிப்பாக தொப்பம்பட்டி ஊராட்சியில் பயனாளிகளின் பெயரை எழுதி அவற்றை அழித்தும் வைத்துள்ளனர். இதனால் முறைகேடுகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு இருப்பதாக கிராம மக்கள் கூறுகின்றனர்.
மக்கள் கூறுகையில், ‘‘தனிநபர் கழிப்பறை திட்டம் ஆத்தூர் ஒன்றியத்தில் தோல்வி அடைந்த திட்டமாக உள்ளது. அரசுபணமும் வீணாகி வருகிறது. எனவே மாவட்ட ஆட்சியர் மற்றும் திட்ட இயக்குநர் தகுந்த நடவடிக்கை எடுத்து தனிநபர் கழிப்பறை கட்டும் திட்டத்தை கண்காணிக்க வேண்டும்’’ என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Bathrooms ,Clean India India , Clean India,Bathrooms ,sempatty ,aathur
× RELATED ஜூன் முதல் ஆகஸ்ட் வரை வருங்கால வைப்பு...