×

டெட் தேர்வு தேர்ச்சி பெறாத 1500 ஆசிரியர்களுக்கு இறுதி ‘கெடு’

* தேர்வு பெறாவிட்டால் பணி கிடையாது * பள்ளிக் கல்வி இயக்குநர் விளக்கம்

சென்னை: தமிழகத்தில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் ஆசிரியர்களாக பணியாற்ற விரும்புவோர் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி வேண்டும் என்று கடந்த 2009ம் ஆண்டு மத்திய அரசு சட்டம் கொண்டு வந்தது. 2011ம் ஆண்டில் வேலை வாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பணி நியமனம் செய்யப்பட்டனர். இந்த நிபந்தனையின் அடிப்படையில் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் தற்போது பணியாற்றி வரும் 1500 ஆசிரியர்கள், தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெறவில்லை என்றுகூறி, ஏப்ரல் மாதச் சம்பளம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் 1500  ஆசிரியர்கள் மன உளைச்சலில் உள்ளனர். இவர்களின் ஏப்ரல் மாத சம்பளம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.  இதையடுத்து பள்ளிக் கல்வி இயக்குநர் ராமேஸ்வரமுருகன் இந்த பிரச்னை தொடர்பாக விளக்கம் அளித்து நேற்று வெளியிட்ட அறிக்கை:கடந்த 2009ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் பிரிவு 23(1)ல்  மத்திய அரசின் அதிகாரம் பெற்ற கல்வி அமைப்பினால் நிர்ணயம் செய்யப்படும் குறைந்தபட்ச கல்வித் தகுதிகளை பெற்றுள்ள நபர் மட்டுமே ஆசிரியராக நியமனம் செய்ய தகுதி பெற்றவர்.  அத்தகைய அங்கீகாரம் பெற்ற கல்வி அமைப்பாக மத்திய அரசால் நியமிக்கப்பட்ட தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம்(NCTE) வரையறுத்துள்ள வழிமுறைகளின்படி  மாநில அரசுகளால் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில்(TET) தேர்ச்சி பெற்றவர்களை மட்டுமே பள்ளிகளில் ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும் என்று என்சிடிஇ 2010ம் ஆண்டில் தெரிவித்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக அரசு நிதியுதவி பெறும் உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளிகளில் 2010 ஆகஸ்ட் 23ம் தேதிக்கு பின்னர் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாமல் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் 5 ஆண்டுக்குள் தகுதித் தேர்வில் தேர்ச்சி  பெற வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டது.   இதையடுத்து, தமிழகத்தில் இதுவரை 3 முறை தகுதித் தேர்வுகள் நடத்தப்பட்டன. இந்நிலையில், மேற்கண்ட தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாமல் அரசுநிதியுதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் தங்களை ஏற்பளிப்பு செய்ய வேண்டும் என்று பல வழக்குகள் தொடர்ந்தனர். அதற்கு பிறகு அரசு தரப்பில் மேல் முறையீட்டு வழக்கு தொடரப்பட்டது. அந்த வ ழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம், மேலும் ஒரு வாய்ப்பு வழங்கும் வகையில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்த வேண்டும் என்றும், அதன் முடிவுகள் வெளியாகும் வரை அவர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும் என்று தெரிவித்தது.

இதையடுத்து, 2017ம் ஆண்டு நான்காவது முறையாக ஆசிரியர் தகுதித் தேர்வை, ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தியது. மேலும், நீதிமன்ற உத்தரவின் பேரில்,நிதியுதவி பெறும் பள்ளிகளில், டிஇடி தேர்ச்சி பெறாமல் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு மானியம் பெற்று வழங்க அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டது. இதையடுத்து, கட்டாய கல்வி உரிமைச் சட்டத்துக்கு மத்திய அரசு திருத்தம் செய்து கொடுத்தது. இதன் பேரில் மேலும் நான்கு ஆண்டு கால அவகாசம் நீட்டித்து மார்ச் 2019ம் ஆண்டு வரை வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில், மேலும் இரண்டு ஆண்டு நீட்டிக்க வேண்டும் என்று மத்திய மனித வள மேம்பாட்டுத்துறையிடம் கேட்கப்பட்டது. அவகாசம் வழங்க அந்த துறை மறுப்பு தெரிவித்துவிட்டது.
அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் நியமனம் வழங்கப்பட்ட ஆசிரியர்கள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வழங்கப்பட்ட கால அவகாசத்துக்குள்ளும், நீதிமன்ற உத்தரவின்படியும் மொத்தம் நான்கு முறை தமிழக அரசு வாய்ப்பு வழங்கியது. அப்படி இருந்தும் 1500 ஆசிரியர்கள் இதுவரை தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை. இந்நிலையில் தற்போது ஆசிரியர் தேர்வு வாரியம் இந்த ஆண்டுக்கான தகுதித் தேர்வை நடத்த உள்ளது. இவ்வாறு இயக்குநர் ராமேஸ்வரமுருகன் தனது அறிக்கையில் கூறியுள்ளார். இதன்படி, இந்த ஆண்டுக்கான தகுதித் தேர்வு ஆகஸ்ட் மாதம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்விலும் மேற்கண்ட 1500 ஆசிரியர்கள் தேர்ச்சி பெறவில்லை என்றால் அவர்கள் வேலையை இழக்க வேண்டிய நிலை ஏற்படலாம். இந்த தகுதித் தேர்வே 1500 ஆசிரியர்களுக்கு இறுதி கெடுவாக உள்ளது.
   


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : TED , Dead, did ,pass 1500 teachers, 'final'
× RELATED கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் மறியல்