×

இரு இடங்களில் வாக்குரிமை இருந்ததால் சர்ச்சை: அ.தி.மு.க வேட்பாளரின் மனுவை ஏற்க திமுக, அமமுக வேட்பாளர்கள் எதிர்ப்பு: திருப்பரங்குன்றம் தொகுதியில் பரபரப்பு

திருப்பரங்குன்றம்: மதுரை திருப்பரங்குன்றம் தொகுதிக்கு மே 19ம் தேதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடக்கிறது. 63 பேர் மனு தாக்கல் செய்த நிலையில் நேற்று வேட்புமனு பரிசீலனை, திருப்பரங்குன்றம் தாலுகா  அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் பஞ்சவர்ணம் தலைமையில் நடந்தது. அப்போது அதிமுக சார்பில் போட்டியிடும் முனியாண்டிக்கு திருப்பரங்குன்றம் தொகுதிக்குள் இரண்டு இடங்களில் வாக்குரிமை  உள்ளது.  எனவே  அவருடைய வேட்புமனுவை சட்டப்படி ஏற்கக்கூடாது என ஆதாரத்துடன் தேர்தல் அலுவலரிடம், திமுக வேட்பாளர் சரவணன் புகார் தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து அமமுக மற்றும் சுயேச்சை வேட்பாளர்களும், அதிமுக  வேட்பாளரின் வேட்புமனுவை ஏற்கக்கூடாது என தெரிவித்தனர்.

ஆனால் தேர்தல் அதிகாரி அதை ஏற்கவில்லை. மேலும் அதிமுகவினர் ரகளையில் ஈடுபட்டு தேர்தல் அதிகாரியை மிரட்டும்விதமாக, ‘‘மனுவை ஏற்க வேண்டும். வழக்கு போட்டால்  நாங்கள்  சந்தித்து கொள்கிறோம். மனுவை  ஏற்றுக் கொள்ளுங்கள்’’ என்று கூச்சலிட்டனர். பதற்றமான சூழல் நிலவியதால் திருப்பரங்குன்றம் போலீசார், கட்சியினரிடம் பேசி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் அங்கு ஒரு மணி நேரத்திற்கும் மேலாக  பதற்றமான சூழல் நிலவியது. இது குறித்து திமுக வேட்பாளர் டாக்டர் சரவணன் கூறும்போது, ‘‘மீண்டும் திருப்பரங்குன்றம் தொகுதியில் ஜனநாயக படுகொலை நிகழ்கிறது. அதிமுக வேட்பாளருக்கு அவனியாபுரம் மற்றும்  பெருங்குடி ஆகிய இரு இடங்களிலும் வாக்கு உள்ளது.

இதற்கான உரிய ஆதாரத்தை தேர்தல் அதிகாரியிடம் கூறி, அவரது மனுவை ஏற்க கூடாது என கோரிக்கை வைத்தேன். ஆனால் அதிமுகவினர் தேர்தல் அதிகாரியை மிரட்டி  மனுவை ஏற்க வைத்து விட்டனர். ஏற்கனவே  ஏ.கே.போஸ் வேட்புமனு தாக்கலில் இதேபோன்ற குளறுபடி இருந்ததை அப்போதைய தேர்தல் அதிகாரியிடம் சுட்டிக்காட்டியும், அவர் கண்டுகொள்ளவில்லை. பின்னர் நீதிமன்றம் சென்று வெற்றி பெற்றோம். தேர்தல் ஆணையம்  நடுநிலையோடு செயல்பட்டு அதிமுகவினர் மீது வழக்கு பதிய வேண்டும். இல்லையெனில் நாங்கள் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்வோம்’’ என்றார்.

தேர்தல் பார்வையாளர் முன் ரகளை: அதிமுகவினர் தேர்தல் அதிகாரியை மிரட்டி மனுவை வாங்க வைத்த நேரத்தில், தேர்தல் பார்வையாளர் ஓம்பிரகாஷ் ராய், திருப்பரங்குன்றம் தாலுகா அலுவலகத்தில் வேட்புமனு  பரிசீலனையை ஆய்வு செய்து கொண்டிருந்தார். அவர் முன்னிலையிலேயே இந்த பிரச்னை நடந்தது. அவர் தலைமை தேர்தல் ஆணையத்திற்கு இந்த பிரச்னையை கொண்டு செல்ல வேண்டுமென எதிர்க்கட்சியினர்  வலியுறுத்தினர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : DMK ,candidate ,constituency ,Opposition , Voting, AIADMK, Manu, DMK, Ammokh Candidates, Tiruparankundram Block
× RELATED நாடாளுமன்ற தேர்தலுடன் விக்கிரவாண்டி...