×

27 துணை கண்காணிப்பாளர்கள் பயிற்சி நிறைவு விழா: பெண்கள் சார்ந்த குற்றங்களை கண்டிப்போடு கையாள வேண்டும்...டிஜிபி டி.கே.ராஜேந்திரன் அறிவுரை

சென்னை: சென்னை அடுத்த வண்டலூர் அருகே ஊனமாஞ்சேரியில் உள்ள தமிழ்நாடு காவல் உயர் பயிற்சி மையத்தில் கடந்த ஆண்டு மே மாதம் துணை காவல் கண்காணிப்பாளர் 27 பேருக்கு பயிற்சி தொடங்கியது. இதன்  நிறைவு விழா நேற்று முன்தினம் மாலை நடந்தது.  விழாவிற்கு டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் தலைமை தாங்கி பயிற்சி பெற்ற துணை காவல் கண்காணிப்பாளர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர் பயிற்சி முடித்த துணை காவல் கண்காணிப்பாளர்கள் அனைவரும் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் தலைமையில் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். சிறப்பாக பயிற்சியில் ஈடுபட்டவர்களுக்கு  நினைவுப் பரிசு வழங்கினார்.  மேலும் பயிற்சியின் போது ஒட்டுமொத்தமாக சிறந்து விளங்கிய பெண் துணை காவல் கண்காணிப்பாளர் லிஷா ஸ்டெபில்லா தெரெஸ்க்கு தங்க பதக்கம் வழங்கி டி.ஜி.பி. நினைவுப் பரிசாக வாள் வழங்கி கவுரவித்தார். அதேபோல்  பயிற்சியில் சிறந்து விளங்கிய துணை கண்காணிப்பாளர்களுக்கு பதக்கங்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

பயிற்சி முடித்த 27 துணை காவல் கண்காணிப்பாளர்களில் 19 பேர் பொறியியல் பட்டம் படித்தவர்கள், 3 பேர் முதுகலை பட்டதாரிகள், ஒருவர் சித்த மருத்துவர், ஒருவர் சட்டம் படித்தவர், 4 பேர் பட்டதாரிகள். மொத்தம் 52  வாரங்கள் கொண்ட பயிற்சியில் சட்டங்கள், தடய அறிவியல், நுண்ணறிவு, அந்நிய ஊடுருவல், அடிப்படை தீவிரவாதம், கணினி குற்றங்கள், நீச்சல், கராத்தே, யோகா, நவீன ஆயுதங்களை கையாளுதல், குதிரையேற்றம் உள்பட  பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டன. நிகழ்ச்சியில் தமிழ்நாடு காவல் உயர் பயிற்சி மையத்தின் கூடுதல் டி.ஜி.பி. அமரேஷ் புஜாரி, தமிழ்நாடு காவல் உயர் பயிற்சி மையத்தின் டி.ஐ.ஜி. மகேந்தர் குமார் ரத்தோட், எஸ்பி சாந்தி  உள்பட உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் தமிழக டிஜிபி டி.கே.ராஜேந்திரன் பேசியதாவது: கணினி வழி குற்றங்கள், பெண்கள், குழந்தைகள் சார்ந்த குற்றங்களை மிகுந்த கண்டிப்போடும், கவனத்தோடும் கையாள வேண்டும். தமிழக காவல்துறைக்கு நவீன  உபகரணங்கள் வழங்கப்படுகிறது. அதனை அனைவரும் மனதில் கொண்டு பாரம்பரியமிக்க தமிழக காவல் துறையின் நற்பெயரை மேலும் சிறப்பிக்கும் வகையில் செயலாற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Sub-Inspectors Training Completion Ceremony ,women ,crimes ,DGP ,TG Rajendran , Deputy Inspectors, Training Complex, Women's Crimes, DGP DK Rajendran
× RELATED புதுச்சேரியில் விஷவாயு தாக்கி 3...