×

இரட்டை வேடம் போடும் பாஜகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் சம்பந்தப்பட்டவர் பாஜ வேட்பாளர்: கே.எஸ்.அழகிரி அறிக்கை

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் மராட்டிய மாநிலம் மலேகான் நகரில் 2008ம் ஆண்டு செப்டம்பர் 29ம் தேதி நடந்த குண்டு வெடிப்புகளின் பின்னணியில் இந்துத்வா அமைப்புகளின் தீவிரவாத பிரிவினர் சம்பந்தப்பட்டிருப்பது உறுதி  செய்யப்பட்டது. இந்த குண்டு வெடிப்பு வழக்கில் இந்துத்வா அமைப்பை சேர்ந்த சாத்வி பிரக்யாசிங் தாகூர் மற்றும் ஓய்வு பெற்ற ராணுவ மேஜர் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் 2014ல் பாஜ ஆட்சி அமைந்தவுடன் மலேகான் குண்டு வெடிப்பு வழக்கிலிருந்து பிரக்யாசிங் தாகூரை விடுவிக்க அரசு வழக்கறிஞரான ரோகினி சலியன் மீது அழுத்தம் தர ஆரம்பித்தனர்.  இந்த வழக்கில் நீதிபதி முன்னால் பிரமாணம் செய்து சாட்சி சொன்னவர்கள் பிறழ் சாட்சிகளாக மாற நிர்ப்பந்திக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து பிரக்யா சிங் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.  இத்தகைய பயங்கரவாத செயலில்  ஈடுபட்ட சாத்வி பிரக்யாசிங் தாகூரை, போபால் மக்களவை தொகுதியில் வேட்பாளராக பாஜ நிறுத்தியிருக்கிறது.  

 இந்த நடவடிக்கையின் அடிப்படையில் பயங்கரவாதத்தை பாதுகாக்கும் செயலை பாஜ செய்திருக்கிறது.  ஒருபக்கம் பயங்கரவாத எதிர்ப்பு. இன்னொரு பக்கம் பயங்கரவாதிகளுக்கு பாதுகாப்பு. இத்தகைய இரட்டை வேடம் போடுகிற  பாஜவையும், மோடியையும் மக்கள் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும்.  பயங்கரவாதிகள் எந்த மதத்தை சார்ந்தவராக இருந்தாலும் பாரபட்ச விசாரணையின் அடிப்படையில் சட்டத்தின்படி தண்டிக்க வேண்டியது அரசின் பொறுப்பாகும்.  அந்த அடிப்படை கடமையைக் கூட செய்யாத ஒருவர் இந்த  நாட்டின் பிரதமராக நாம் பெற்றிருப்பது வெட்கக்கேடானதாகும். அவருக்கு இந்த நாடாளுமன்றத் தேர்தலில் உரிய பாடத்தை மக்கள் புகட்டுவார்கள். எனவே, பிரதமர் மோடி அணிந்திருக்கும் பயங்கரவாத எதிர்ப்பு முகமூடி  கிழித்தெறியப்பட்டு விட்டது. அவரது இரட்டை வேடம் கலைந்து விட்டது. அவரை யார் என்று அறிந்து கொள்வதற்கு இதைவிட வேறு சான்று தேவையில்லை.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : KS Abhigari ,BJP ,Malegaon , double role, BJP candidate, KS Azhagiri report
× RELATED தேர்தல் பணிமனையில் பாஜவினர் மோதல்: பாஜ...