×

தரங்கம்பாடியில் கடற்கரை சாலை விரைவில் சீரமைக்கப்படுமா? சுற்றுலா பயணிகள் கோரிக்கை

தரங்கம்பாடி :  நாகை மாவட்டம், தரங்கம்பாடியில் வாகனங்கள் நிறுத்திமிடத்திலிருந்து கடற்கரைக்கு வரும் சாலையை சீர் செய்ய வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாகை மாவட்டம் தரங்கம்பாடி கடற்கரைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வாகனங்களை நிறுத்த நவீன வாகனங்கள் நிறுத்துமிடம் கட்டப்பட்டுள்ளது. அங்கிருந்து கடற்கரைக்கு வரும் சாலை குறுகலாகவும், மிகவும் சேதமடைந்தும் சுற்றுலா பயணிகள் நடந்து வர முடியாத அளவிற்கு ஜல்லி பரவிக்கிடக்கின்றன. சாலை படுமோசமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் வாகனங்கள் நிறுத்துமிடத்தில் வாகனங்களை நிறுத்தாமல் சுற்றுலாப் பயணிகளுக்கு இடையூறாக டேனிஷ் கோட்டைக்கு எதிரேயே வாகனங்களை நிறுத்தி விடுகின்றனர்.

எனவே அந்த சாலையை அகலப்படுத்தி தார் சாலை அமைத்து சுற்றுலா பயணிகளுக்கு வசதி செய்து கொடுக்குமாறு சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து கோவையிலிருந்து தரங்கம்பாடிக்கு சுற்றுலா வந்துள்ள மணிகண்டன் என்பவர் கூறியதாவது நாங்கள் குடும்பத்துடன் வேன் மூலம் தரங்கம்பாடிக்கு வந்தோம். இங்குள்ள அழகான கடற்கரையை பார்த்து ரசித்தோம்.  மேலும் டேனிஷ் கோட்டையையும் சுற்றிப்பார்த்தோம். வாகன நிறுத்துமிடத்தில் வாகனத்தை நிறுத்த முடியாத அளவிற்கு கடற்கரைக்கு செல்லும் பாதை மிகவும் மோசமாக உள்ளது. எனவே சுற்றுலாத் துறை இந்த பாதையில் கவனம் செலுத்தி சீர் செய்து தர வேண்டும் என்று கூறினார். தரங்கம்பாடிக்கு வரும் சுற்றுலா பயணிகள் பெரும்பாலும் இதே கருத்தைக் கூறிவருவதால் விரைவில் அந்த பாதை சீர் செய்யப்படுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : road ,Tranganpadi , Tranquebar, beach road, tourists
× RELATED குமுளி மலைச்சாலையில் வந்த போது பிரேக்...