×

நாமக்கல் அருகே நூதன முயற்சி: குப்பை கொட்டுபவர்களை கண்காணிக்க சிசிடிவி கேமரா...ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை

நாமக்கல்: நாமக்கல் அருகே, பொது இடங்களில் குப்பை கொட்டுபவர்கள் சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்கப்படுவார்கள் என ஊராட்சி  நிர்வாகம் விளம்பர பலகை வைத்து எச்சரிக்கை விடுத்துள்ளது. வீடு புகுந்து கொள்ளையடிக்கும் திருடர்கள், ஜவுளி கடை, நகைக்கடை மற்றும்  பல்வேறு வர்த்தக நிறுவனங்களில் நடைபெறும் திருட்டு சம்பவங்களை கண்காணிக்கவும், குற்றங்கள் நடைபெறாமல் கண்காணிக்கவும் சிசிடிவி  கேமராக்கள் பொருத்துவது தற்போது அதிகரித்து வருகிறது. இது தொடர்பான விழிப்புணர்வு, பொதுமக்கள் மத்தியிலும் அதிகமாக ஏற்பட்டுள்ளது.  இந்நிலையில் நாமக்கல் அருகே, பொது இடங்களில் குப்பை கொட்டுவதை கண்காணிக்க, சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளதாக ஊராட்சி  நிர்வாகம் விளம்பர பேனர்களை கட்டிவைத்து பொதுமக்களை எச்சரித்து வருகிறது.

இதுகுறித்த விவரம் வருமாறு:  நாமக்கல் அருகே வகுரம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட மாருதி நகர், பொன்விழா நகர் பகுதியில் ஏராளமான  குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியில் சேகரமாகும் குப்பைகளை அள்ள, போதுமான துப்புரவு பணியாளர்களை ஊராட்சி நிர்வாகம்  நியமிக்கவில்லை. இதன் காரணமாக பொன்விழா நகரிலுள்ள பிள்ளையார் கோயில் அருகில் பொதுமக்கள் மூட்டை, மூட்டையாக குப்பைகளை வீசி  செல்வது வாடிக்கையாகி விட்டது. இதனால், அந்த பகுதியில் துர்நாற்றம் ஏற்பட்டு, சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வந்தது. வெளி நபர்கள், அந்த  இடங்களில் குப்பை கொட்டுவதை முழுமையாக தடுக்க முடியவில்லை. இதனால், திணறிப் போன ஊராட்சி நிர்வாகம், தற்போது கோயில்  அருகாமையில் 2 இடங்களில் ஒரு விளம்பர பலகை வைத்துள்ளது.

அதில், இந்த பகுதியில் குப்பை கொட்ட தடை செய்யப்பட்டுள்ளது. குப்பை கொட்டும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். சிசிடிவி  கேமரா மூலம் கண்காணிக்கப்படுகிறது என அறிவிப்பு பலகை வெளியிட்டுள்ளது. இந்த விளம்பர பலகை அந்த பகுதி மக்களை வியப்பில்  ஆழ்த்தியுள்ளது. அதேநேரம் அந்த பகுதியில் மூட்டை, மூட்டையாக குப்பை போடுவதும் தற்போது தடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் கூறுகையில், ‘‘கிராமப்புறங்களில் குப்பைகளை அகற்ற தூய்மை காவலர்கள் என்ற புதிய பணியிடம்  ஏற்படுத்தப்பட்டது. ஆனால், இதற்கு போதுமான எண்ணிக்கையில் பணியாளர்கள் கிடைக்கவில்லை. இருப்பினும் இருக்கிற பணியாளர்களை  வைத்துக்கொண்டு குப்பைகளை அள்ளி வருகிறோம். நாமக்கல் நகராட்சி பகுதியில் வசிக்கும் மக்களும், ஆண்டவர் நகர் மற்றும் சுற்றுப்புற பகுதியில்  வசிக்கும் பொதுமக்களும், பொன்விழா நகரில் பொது இடங்களில் குப்பை கொட்டி வருகிறார்கள். அதை தடுக்கவே, இந்த அறிவிப்பு பலகை  வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் குப்பைகளை பொது இடங்களில் கொட்டாமல், ஊராட்சி நிர்வாகத்துக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்,’ என்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : trash dumpers , Namakkal, Innovation, Garbage, CCTV Camera, Panchayat Administration, Advertising Board
× RELATED மக்களவை தேர்தலில் பூத் ஏஜெண்டாக...