×

ராசிபுரம் குழந்தை விற்பனை விவகாரத்தில் மேலும் 3 பேர் கைது முக்கிய நகரங்களில் குழந்தைகளை விற்க புரோக்கர்களாக செயல்பட்ட பெண்கள்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்

நாமக்கல்: ராசிபுரத்தில் நடந்த குழந்தைகள் விற்பனை விவகாரத்தில், முக்கிய நகரங்களில் பெண்களே புரோக்கர்களாக செயல்பட்ட திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக ஈரோட்டை சேர்ந்த 2 பெண்கள் உள்பட மேலும் 3 பேரை, ேபாலீசார் கைது செய்துள்ளனர்.  நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை மையமாக வைத்து, பெண் ஒருவர் பேசும் குழந்ைதகள் விற்பனை குறித்த ஆடியோ உரையாடல்,  வாட்ஸ்அப்பில் வைரலானது. இதுகுறித்து, நாமக்கல் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் ரமேஷ்குமார் கொடுத்த புகாரின்பேரில், போலீசார் விசாரணை நடத்தி, ராசிபுரத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற செவிலியர் உதவியாளர் அமுதவள்ளி(50), ராசிபுரம் நகர கூட்டுறவு சங்கத்தில் உதவியாளராக பணியாற்றும் அவரது கணவர் ரவிச்சந்திரன்(53) ஆகியோரை கைது செய்தனர். விசாரணையை தொடர்ந்து, கொல்லிமலை அரசு  ஆரம்ப சுகாதார நிலைய ஆம்புலன்ஸ்  டிரைவர் முருகேசனையும் கைது செய்தனர்.  

போலீசாரின் தொடர் விசாரணையில் அமுதவள்ளிக்கு பல பெண் புரோக்கர்கள் இருந்துள்ளனர். முக்கிய நகரங்களில் தனக்கு தெரிந்த பெண்களை புரோக்கர்களாக நியமித்து குழந்தைகளை விற்பனை செய்துள்ளார். இதில் ஒருவரான ஈரோட்டை சேர்ந்த புரோக்கர் பர்வீனிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவர்  மேலும் பல பெண்களை அடையாளம் காட்டியுள்ளார். இதையடுத்து ஈரோடு சென்ற தனிப்படை போலீசார், ஹசீனா, நிஷா,  அருள்சாமி ஆகிய 3 பேரை கைது செய்துள்ளனர். கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் கொல்லிமலை, தர்மபுரி,  ராசிபுரம் ஆகிய  பகுதிகளில் 8 குழந்தைகளை வாங்கி, குழந்தை  இல்லாத நபர்களுக்கு ₹3 லட்சம்  முதல் ₹6 லட்சத்திற்கு அமுதவள்ளி விற்பனை செய்துள்ளார். தற்போது அந்த குழந்தைகள் சேலம்,  நாமக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரியில் வளர்ந்து வருகிறது என்பது உள்ளிட்ட திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளது.  இதையடுத்து,  வளர்ப்பு பெற்றோர்களை நேரில்  சந்தித்து விசாரணை நடத்த, ராசிபுரம் தனிப்படை போலீசார் பல்வேறு ஊர்களுக்கு  சென்று விசாரணையை துரிதப்படுத்தியுள்ளனர். அமுதவள்ளி, குழந்தைகளை விற்பனை செய்யும்போது, பத்திரங்களில் எழுதி வாங்கி  உள்ளார். அதோடு குழந்தைகளுக்கு போலி பிறப்பு சான்றிதழும் தயாரித்து கொடுத்துள்ளார்.

 எனவே, முதற்கட்டமாக கடந்த 2 வருடங்களில் ராசிபுரம், கொல்லிமலைப் பகுதிகளில் எத்தனை குழந்தைகளுக்கு பிறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது? அது உண்மையான சான்றிதழ்தானா? என்பது குறித்து, சுகாதாரத்துறை உயரதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர். ராசிபுரம், கொல்லிமலையில் கடந்த 2 வருடங்களில் மட்டும் 4500 பிறப்புச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த வகையில் கொல்லிமலையில் வழங்கப்பட்ட 1,500 சான்றிதழ்கள், ராசிபுரத்தில் வழங்கப்பட்ட 3,000 சான்றிதழ்களின் உண்மை  தன்மை ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. மேலும் மாவட்டம் முழுவதும் 25 குழுவினர் ராசிபுரம், பள்ளிபாளையம், திருச்செங்கோடு, கொல்லிமலை பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் நேரடி விசாரணை நடத்தி வருகின்றனர். ஜி.ஹெச். ஊழியர்கள் 2 பேர் சிக்கினர்: மேலும் இந்த விவகாரத்தில், குமாரபாளையம்    அரசு மருத்துவமனையில், தற்காலிக துப்புரவு தொழிலாளர்களான பாண்டியன், ஜெயராஜ் ஆகியோரையும் நேற்று கைது செய்தனர். இவர்கள், ராசிபுரம் கும்பலிடம் இருந்து ஒரு பெண் குழந்தையை வாங்கி, கோவையை சேர்ந்த குழந்தை இல்லாத தம்பதிகு ₹2.50 லட்சத்துக்கு விற்றது தெரியவந்தது.

நெல்லை குழந்தைக்குசான்று தந்த ராசிபுரம் வக்கீல்
திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளத்தில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பிறந்த குழந்தைக்கு, பெற்றோர் பிறப்பு சான்றிதழ் கேட்டு, பேரூராட்சி அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளனர். விஏஓ விசாரணையின் போது, குழந்தை எங்கு பிறந்தது? என்பதற்கான சான்று கேட்டுள்ளார். அதற்கு அந்த தம்பதி, ராசிபுரம் நோட்டரி வக்கீல் ஒருவர் வழங்கிய சான்றை கொடுத்துள்ளனர். எனவே, அந்த  தம்பதி அமுதவள்ளியிடம் குழந்தையை வாங்கி இருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்துள்ளது. இதுகுறித்தும் சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் விசாரிக்கின்றனர்.

வாட்ஸ்அப்பில் பேசியவருக்கு போலீசார் செக்
ஆண் குழந்தைக்கு ஒரு ரேட், பெண் குழந்தைக்கு ஒரு ரேட், பிறப்பு சான்றிதழ் பெற்றுத்தர ஒரு ரேட் என்று குழந்தை விற்பனையில் கொடி கட்டி பறந்த அமுதவள்ளிக்கு, அரசுத்துறை உயரதிகாரிகள் சிலரும் பக்க பலமாக இருந்துள்ளனர். சில தினங்களுக்கு முன்பு, அமுதவள்ளியிடம் ஒருவர் தர்மபுரியில் இருந்து பேசுவதாக  கூறி, குழந்தைகள்  விற்பனை குறித்து கேட்டுள்ளார். இந்த ஆடியோதான், வாட்ஸ்அப்பில் பரவியது.  இதில் பேசியவர் யார் என்பதையும், அவர் எதனால்  வாட்ஸ்அப்பில் வெளியிட்டார் என்பதையும் போலீசார்  கண்டுபிடித்துள்ளனர். எனவே, இந்த  வழக்கில் அமுதவள்ளியிடம் செல்போனில் பேசி  வாட்ஸ்அப்பில் பரவ விட்டவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

குழந்தையை விற்பது கொல்லிமலையில் புதுசில்லை: அதிரவைத்தபெற்றோர்
கொல்லிமலையில் நேற்று, மாவட்ட தாய்சேய் நல அலுவலர் தேவி, கொல்லிமலை வட்டார சுகாதார மேற்பார்வையாளர் இளவேந்தன் ஆகியோர் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். இதில்  பவர்காடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 5ஆண்டுகளாக  குழந்தைகளின் பிறப்பு சான்றிதழ் விவரங்கள் சரிபார்க்கப்பட்டது. அப்போது 6  குழந்தைகளின் பிறப்புச்சான்றிதழ் பதிவு செய்யப்பட்டுள்ளதும், ஆனால், அந்த குழந்தைகள் மாயமானதும் தெரியவந்தது. இது அந்த குழந்ைதகள் விற்கப்பட்டதை உறுதி செய்துள்ளது. இதுகுறித்து சம்மந்தப்பட்ட குழந்ைதகளின்  பெற்றோரிடம் விசாரணை நடத்தியதில் அதிர வைக்கும் தகவல்கள்  கிடைத்துள்ளது.அதிகாரிகளிடம் பெற்றோர் கூறுகையில்,  ‘கொல்லிமலையில் குழந்தைகளை விற்பது புதிதல்ல. பல வருடங்களாக இது  நடந்து வருகிறது. இதுவரை நாங்கள் கொடுத்துள்ள அனைத்து குழந்தைகளும் பெண்  குழந்தைகள்.

ஆண் குழந்தைகளை நாங்கள் எப்போதும் விற்க மாட்டோம். முதல்  இரண்டுக்கு மேல் பெண் குழந்தைகள் பிறந்தால், யார் ேகட்டாலும் கொடுத்து  விடுவோம். எங்களிடமிருந்து அந்த குழந்தைகள் வறுமையில் வாடி வீணாவதை விட,  எங்காவது போய், நல்லமுறையில் வாழட்டும் என்ற எண்ணமே இதற்கு காரணம். அதே சமயம், எந்த  குழந்தையையும் நாங்கள் காசு வாங்கிக் கொண்டு விற்கவில்லை. எங்களிடமிருந்து இலவசமாக  வாங்கிச் சென்றவர்கள், அதை பணத்திற்கு விற்றிருக்கலாம்’ என்று  தெரிவித்துள்ளனர்.இதுபற்றி மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் ரமேஷ்குமார் கூறுகையில், ‘கொல்லிமலையில் உள்ள 14 ஊராட்சிகளிலும், 5 குழுக்களாக சென்று ஆய்வு நடத்த உள்ளோம். கடந்த 2 ஆண்டுகளில் குழந்தைகள் பிறந்த தேதி மற்றும் தடுப்பூசி போடப்பட்ட நாள் போன்றவற்றை துல்லியமாக ஆய்வு செய்யும்ேபாதுதான், எத்தனை குழந்தைகள் மாயமானது என்பது தெரியவரும்’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Women ,brokers ,Rasipuram ,cities ,children , arrested, Rasipuram, child sale ,case, major cities:
× RELATED உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்ற...