×

வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் தாசில்தார் நுழைந்த விவகாரம் மதுரை கலெக்டர் அதிரடி மாற்றம்: தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: வாக்கு எண்ணிக்கை மையத்தில் பெண் தாசில்தார் நுழைந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காத மதுரை கலெக்டரை உடனடியாக மாற்ற வேண்டும் என்றும், அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மதுரை மக்களவை தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள்  மதுரை அரசு மருத்துவக்கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளன. அந்த மையத்துக்குள் தாசில்தார் சம்பூர்ணம் ஏப்ரல் 20ம் தேதி அத்துமீறி நுழைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தெரிந்ததும், மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசன், அமமுக வேட்பாளர் டேவிட் அண்ணாத்துரை ஆகியோர் மறியல் போராட்டம் நடத்தினர். பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். விவகாரம் விஸ்வரூபம் ஆனதைத் தொடர்ந்து, பெண் தாசில்தார் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.  இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தின் முதன்மை செயலாளர் அந்தஸ்து அதிகாரி  தலைமையில் சிறப்பு  குழு அமைத்து விசாரிக்க கோரி அத்தொகுதி மார்க்சிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல் செய்த மனுவில், தேர்தல் ஆணைய விதிகளை மீறும் வகையில் செயல்பட்ட மதுரை மாவட்ட கலெக்டரை கொண்டு வாக்கு எண்ணிக்கை நடைமுறைகளை நடத்தினால் நியாயமாக இருக்காது என்பதால் அவரை இடமாற்றம் செய்ய வேண்டும்.  

 வாக்கு எண்ணிக்கை மையங்களில் எவரும் சட்டவிரோதமாக நுழைவதை தடுக்க 39 தொகுதிகளிலும் உள்ள வாக்கு எண்ணிக்கை மையங்களிலும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரின் மூன்றடுக்கு பாதுகாப்பை வழங்க வேண்டும். மதுரை தொகுதி தபால் ஓட்டுகளை எண்ணுவதற்கு ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவரை சிறப்பு பார்வையாளராக நியமிக்க வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் மூத்த வக்கீல் என்.ஆர்.இளங்கோ, வக்கீல்கள் அருண், நீலகண்டன் ஆகியோர் ஆஜராகினர்.  மூத்த வக்கீல் என்.ஆர்.இளங்கோ வாதிடும்போது, ‘‘தாசில்தாரர் உள்பட மூன்று பேரும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைத்துள்ள அறைக்குள் நுழையவில்லை.  இருந்தபோதிலும் தேர்தல் தொடர்பான ஆவணங்கள் வைத்திருந்த அறையில்நுழைந்து ஆவணங்களை எடுத்துச் சென்றது தேர்தல் ஆணைய விதிகளை மீறிய செயலாகும். எனவே, தாசில்தார் யாருடைய உத்தரவின் அடிப்படையில் அங்கு சென்றார் என்பது குறித்து விசாரிக்க உத்தரவிட வேண்டும்’’ என்று வாதிட்டார்.

 தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வக்கீல் நிரஞ்சன் வாதிடும்போது, ‘‘மதுரை கலெக்டரின் உதவியாளரான உதவி தேர்தல் அதிகாரியின் அறிவுறுத்தலின்பேரில்தாசில்தார் வாக்கு எண்ணிக்கை மையத்துக்குள் வந்துள்ளார் என்பது கூடுதல் தலைமைத் தேர்தல் அதிகாரி நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. அங்கிருந்து எந்த ஆவணங்களும் எடுக்கப்படவில்லை.  ஜெராக்ஸ் மட்டும் எடுக்கப்பட்டுள்ளது என்பதும்  விசாரணையில் தெரியவந்துள்ளது. மதுரை மக்களவை தொகுதி வாக்கு எண்ணிக்கை மையத்தில் பாதுகாப்பு குறைபாடுகள் உள்ளது என்பது கண்டறியப்பட்டுள்ளது.  இந்த விவகாரம் தொடர்பாக தமிழக  தலைமைத் தேர்தல் அதிகாரி அனுப்பிய பரிந்துரை அடிப்படையில், தேர்தல் ஆணையம் 2 நாட்களில் முடிவெடுக்கவுள்ளது’’ என்றார்.இதைக்கேட்ட நீதிபதிகள்: கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி அளித்த அறிக்கையில் எந்த விவரங்களும் இல்லை. குறிப்பிட்ட நேரத்துக்குள் கலெக்டர் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?தேர்தல் ஆணைய வக்கீல்: தாசில்தார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.  ஒழுங்கு நடவடிக்கை எடுத்து மக்கள் மனதில் நம்பிக்கை ஏற்படுத்துவதே தேர்தல் ஆணையத்தின் நோக்கம்.நீதிபதிகள்: வாக்கு எண்ணும் மையத்தில், பாதுகாப்பு குறைபாடுகள் உள்ளன என்று கூறுவது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. தாசில்தார் நுழைந்ததற்கு யாரெல்லாம்  பொறுப்பு?. கலெக்டரின் உதவியாளர் மீது என்ன நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டது?  கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி அளித்த அறிக்கையில் கலெக்டரின் உதவியாளர் குறித்து எதுவும் குறிப்பிடாதது ஏன்? தேர்தல் ஆணைய விதிகளின்படி, மாவட்ட தேர்தல் அதிகாரியான மாவட்ட ஆட்சியர், தினமும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைத்துள்ள அறைக்கு சென்று பார்வையிட வேண்டும். அவ்வாறு மதுரை தேர்தல் அதிகாரி சென்று பார்வையிட்டாரா?தேர்தல் ஆணைய வக்கீல்: தலைமை தேர்தல் அதிகாரி அனுப்பிய பரிந்துரையை ஆய்வு செய்து முடிவெடுக்க 2 நாட்கள் அவகாசம் வழங்க வேண்டும்.

நீதிபதிகள்: எந்த விவரங்களும் இல்லாத நிலையில் எதை வைத்து முடிவெடுக்கப் போகிறார்கள்? மற்ற மையங்களின் நிலை என்ன?தேர்தல் ஆணைய வக்கீல்: 38 மையங்களிலும் ஏற்கனவே மூன்றடுக்கு பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.நீதிபதிகள்: வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் யார் வேண்டுமானாலும் நுழைய முடிகிறது என்றால் பாதுகாப்பே இல்லை என்றுதானே அர்த்தம். மதுரை மையத்திற்குள் தாசில்தாருடன் சென்றவர்களே, தங்களை யார் என பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் கேட்கவில்லை என வாக்குமூலம் கொடுத்துள்ளதிலிருந்தே பாதுகாப்பு முழுமையாக இல்லை என்று தெரியவில்லையா? பாதுகாப்பு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படாததில் இருந்து தாசில்தார் உள்ளிட்டோரை வேண்டுமென்றே அத்துமீற அனுமதிக்கப்பட்டுள்ளது தெரியவருகிறது. கலெக்டரின் உதவியாளர் அறிவுறுத்தியதால் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தாசில்தாரிடம் அடையாள அட்டையை கேட்காமல் உள்ள அனுப்பியுள்ளனர். தாசில்தார் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டருக்கு உத்தரவிட்ட தலைமை தேர்தல் அதிகாரி மற்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடாதது ஏன்?தேர்தல் ஆணைய வக்கீல்: தலைமை ேதர்தல் அதிகாரி “ போஸ்ட்மேன்” போன்றவர்தான். தேர்தல் ஆணையத்தின் உத்தரவுகளை தேர்தல் அதிகாரிகளுக்கு அனுப்பிவைப்பார். தகவல்களை பறிமாறும் வேலை மட்டுமே அவருக்குத் தரப்பட்டுள்ளது.

நீதிபதிகள்: அவரால் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியவில்லை என்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. இப்படி இருந்தால் தேர்தலை எப்படி ஒழுங்காக நடத்த முடியும்?தேர்தல் நடத்தை அமலில் இருக்கும்போது, எல்லா அரசு அதிகாரிகளும் உங்கள் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறார்கள். அப்படியிருக்கும்போது உங்களுக்கு அதிகாரம் இல்லேன்னு எப்படி சொல்வீர்கள்?அந்த அதிகாரம் இல்லை என்றால் அது வேண்டுமென நீங்கள் ஏன் குரல் எழுப்பவில்லை? தொகுதி தேர்தல் அதிகாரிக்கு உள்ள அதிகாரம், தலைமை தேர்தல் அதிகாரிக்கு இல்லையா? தொகுதி தேர்தல் அதிகாரிகள் எது செய்தாலும் கண்டுகொள்ளாமல் தலைமை தேர்தல் அதிகாரி இருந்துவிடுவாரா? மனுதாரர் தரப்பு மூத்த வக்கீல் என்.ஆர்.இளங்கோ: மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர் வாக்கு எண்ணிக்கையை நடத்தினால் அது நியாயமாக இருக்காது.நீதிபதிகள்: மனுதாரர் தரப்பு கேள்விக்கு தேர்தல் ஆணையம் என்ன பதில் சொல்கிறது? கண்ணுக்குமுன் ஆதாரங்கள் உள்ளபோது ஆணையம் நடவடிக்கை எடுக்கும்வரை காத்துக்கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. இப்போதே இடைக்கால உத்தரவை நாங்கள் பிறப்பிக்கிறோம்.இவ்வாறு வாதம் நடந்தது. இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு: தேர்தல் ஆணையமே வாக்கு எண்ணிக்கை மையங்களில் பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டுள்ளது என்று கூறியிருப்பது அதிருப்தியை ஏற்படுத்துகிறது. தேர்தல் ஆணையம் இதுபோன்ற தவறுகள் செய்யும் பட்சத்தில் நீதிமன்றம் இதில் தலையிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. எனவே தவறு செய்த மதுரை மாவட்ட கலெக்டர் நடராஜன், மதுரை மேற்கு சட்டசபை தொகுதி தேர்தல் அதிகாரியான கலெக்டரின் நேர்முக உதவியாளர் குருசந்திரன், போலீஸ் உதவி கமிஷனர் (குற்றப்பிரிவு) மோகன்தாஸ், ஆகியோர் தாசில்தார் சம்பூர்ணம், மாநகராட்சி ஊழியர்கள் சூர்யபிரகாசம், ராஜபிரகாஷ், சிவராமன் ஆகியோரை மின்னணு வாக்கு எந்திரங்கள் உள்ள மையத்துக்குள் அனுமதிக்க காரணமாக இருந்துள்ளனர்.

இவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த அதிகாரிகளை எல்லாம் கூண்டோடு இடமாற்றம் செய்ய வேண்டும். இவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட இருந்தோம்.ஆனால், இந்த அதிகாரிகள் அனைவர் மீதும் சட்டப்படி துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும், கலெக்டர் உள்ளிட்டோரை இடமாற்றம் செய்து விட்டதாகவும் தேர்தல் ஆணையத்தின் வக்கீல் கூறினார். மேலும், மதுரை கலெக்டர் நடராஜனை அப்பதவியில் இருந்து மாற்றி விட்டு, அதற்கு பதில் எஸ்.நாகராஜன் கலெக்டராக நியமித்துள்ளதாகவும், அதேபோல, புதிய உதவி தேர்தல் அதிகாரியாக சாந்தகுமார் என்பவரை நியமித்துள்ளதாகவும் அவர் கூறினார்.இதை பதிவு செய்துக் கொள்கிறோம். அதேநேரம், இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட மதுரை முன்னாள் மாவட்ட கலெக்டர் நடராஜன் உள்ளிட்டோர் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை இந்திய தேர்தல் ஆணையம் எடுக்க வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் அந்த உத்தரவில் கூறியுள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Madras Collector ,center ,Tasildar ,Election Commission ,Chennai High Court , Tashildar's ,vote count, Madurai, Collector ,Transfer
× RELATED ஈஷா யோக மைய நிறுவனர் சத்குரு வாக்களித்தார்