×

வடக்கு மத்திய மும்பை தொகுதியில் வெற்றி பெற சகோதரர் சஞ்சய்தத்தின் நட்சத்திர செல்வாக்கை நம்பி இருக்கும் பிரியா தத்

வடக்கு மத்திய மும்பை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் பிரியா தத் தேர்தலில் வெற்றி பெற தனது சகோதரரும் பாலிவுட் நடிகருமான சஞ்சய் தத்தின் நட்சத்திர செல்வாக்கையே பெரும்பாலும் நம்பியிருக்கிறார். அதே சமயத்தில் இந்த தொகுதியில் போட்டியிடும் பாஜ.வைச் ேசர்ந்த பூனம் மகாஜன், இரண்டாவது முறையாக எம்.பி. ஆகிவிட முடியும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்.

மகாராஷ்டிராவில் நான்காம் கட்டமாக நாளை 17 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. மும்பையில் உள்ள 6 மக்களவைத் தொகுதிகளும் இதில் அடங்கும். வடக்கு மத்திய மும்பை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக பழம்பெரும் நட்சத்திர தம்பதி சுனில் தத்-நர்கீஸ் தத்தின் மகள் பிரியா தத் நிறுத்தப்பட்டுள்ளார். இவரை எதிர்த்து பாஜ சார்பில் அக்கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான மறைந்த பிரமோத் மகாஜனின் மகள் பூனம் மகாஜன் போட்டியிடுகிறார்.

சுனில் தத் கடந்த 2005ம் ஆண்டு மரணமடைந்தார். அதன் பிறகு அவருடைய மகள் பிரியா தத் தனது தந்தையின் தொகுதியான வடமேற்கு மும்பை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கடந்த 2009ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பிரியா தத் வடக்கு மத்திய மும்பை தொகுதியில் பாஜ வேட்பாளர் மகேஷ் ராம்ஜெத்மலானியை எதிர்த்து போட்டியிட்டு 1.74 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த தொகுதி அதுவரை காங்கிரசின் கோட்டையாகவே கருதப்பட்டு வந்தது.

ஆனால் 2014ம் ஆண்டு தேர்தலில் பாஜ வேட்பாளராக பூனம் மகாஜன் களமிறக்கப்பட்டார். இவர் முதன் முறையாக தேர்தலில் போட்டியிட்டாலும் மோடி அலை காரணமாக பிரியா தத்தை 1.86 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இதைத் தொடர்ந்து பாஜ.வில் பூனம் மகாஜனின் செல்வாக்கு உயர்ந்தது. அவர் கட்சியின் இளைஞரணி தலைவராக நியமிக்கப்பட்டார்.

அதே சமயத்தில் தேர்தலில் தோல்வியடைந்த பிரியா தத் கடந்த ஆண்டு செப்டம்பரில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் பதவியை ராஜினாமா செய்தார். அடுத்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்றும் அவர் அறிவித்தார். எனினும் மீண்டும் தேர்தல் களத்தில் பிரியா தத் குதித்துள்ளார். பிரிவினை சக்திகளிடம் இருந்து நாட்டை பாதுகாக்கவே தாம் தேர்தலில் போட்டியிடுவதாக அவர் கூறியிருக்கிறார்.

இந்த தேர்தலில் வெற்றிபெற தனது சகோதரர் சஞ்சய் தத்தின் நட்சத்திர அந்தஸ்தையே பெரும்பாலும் அவர் நம்பி இருக்கிறார். அதே சமயத்தில் பூனம் மகாஜன் மோடி அரசின் சாதனைகள் பற்றியும் கடந்த ஐந்து ஆண்டுகளில் தொகுதிக்கு தான் செய்த வேலைகள் குறித்தும் பிரசாரம் செய்துள்ளார். மீண்டும் எம்.பி. ஆகிவிடமுடியும் என்ற நம்பிக்கையில் அவர் இருக்கிறார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Priya Dutt ,Sanjayat ,constituency ,North Central ,Mumbai , North, Central Mumbai, Block, Success, Brother Sanjita, Priya Dutt
× RELATED தென் சென்னை தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் இடிதாங்கி பொருத்தம்..!!