×

ஆசிய தடகளப் போட்டியில் தங்கப்பதக்கம் கோமதி மாரிமுத்துக்கு திமுக ரூ.10 லட்சம்: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

* வெள்ளிப்பதக்கம் வென்ற
ஆரோக்கிய ராஜீவுக்கு ரூ.5 லட்சம்

சென்னை: ஆசிய தடகளப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற கோமதி மாரிமுத்துக்கு ரூ.10 லட்சமும், வெள்ளிப்பதக்கம் வென்ற ஆரோக்கிய ராஜீவுக்கு ரூ.5 லட்சமும் வழங்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட  அறிவிப்பு: தமிழகத்திற்கும், இந்தியாவிற்கும் பெருமை தேடித் தரும் வகையில் தோஹா ஆசிய தடகளப் போட்டியில் 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தங்கம் வென்று சாதனை படைத்த கோமதி மாரிமுத்துக்கும், அதே போட்டியில்  ஆண்கள் மற்றும்  பெண்களுக்கான 4x400 மீட்டர் தொடர்  ஓட்டப் பந்தயத்தில் வெள்ளிப்பதகம் வென்று சாதனை புரிந்திருக்கும் ஆரோக்கிய ராஜீவ்க்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். விளையாட்டுத்துறையில் இந்த இருவரும் நிகழ்த்தியுள்ள சாதனைகளை ஊக்குவித்து, உற்சாகப்படுத்தும் வகையில்  கோமதி மாரிமுத்துக்கு பத்து லட்சம் ரூபாய் நிதியும், ஆரோக்கிய ராஜீவ்வுக்கு ஐந்து லட்சம் ரூபாய் நிதியும் திராவிட முன்னேற்றக்கழகத்தின் சார்பில்  வழங்கப்படுகிறது. இந்தியாவிற்கான இவர்களின் சாதனைகள் மென்மேலும் தொடர வேண்டும் என்று வாழ்த்துகிறேன். இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

காங்கிரஸ் ரூ.5 லட்சம்
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்ட அறிக்கையில், ‘‘ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவுக்கு முதலாவது தங்க பதக்கத்தைப் பெற்றுத் தந்தவர் தமிழகத்தைச் சேர்ந்த ஓட்டப் பந்தய வீராங்கனை கோமதி. இவர் சொந்த ஊரான திருச்சி அருகே உள்ள முடிகண்டம் என்ற கிராமத்தில் கூலித் தொழிலாளியான மறைந்த மாரிமுத்து என்பவருக்கு மகளாக பிறந்தவர். எந்தவித பொருளாதார ஆதரவும் இல்லாமல் கடுமையான உழைப்பின் மூலமாக இந்த பதக்கத்தைப் பெற்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்திருக்கிறார். தமிழக வீராங்கனை கோமதி பதக்கத்தை வென்று பெருமை சேர்த்ததை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக பாராட்டுகிறேன். மேலும் அவர் பல விருதுகளை பெற வேண்டுமென்று வாழ்த்துகிறேன். இவரை ஊக்கப்படுத்துகிற வகையில் தமிழ்நாடு காங்கிரஸ் அறக்கட்டளை சார்பாக ரூபாய் 5 லட்சம் வழங்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்’’ என கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : DMK ,Gomti Marumam ,announcement ,MK Stalin ,competition ,Asian Athletics , DMK, Gomati Marimuthu,, MK Stalin,
× RELATED திமுக ஒன்றிய செயலாளர்கள் ஆலோசனை கூட்டம்