×

திருப்பரங்குன்றம் அருகே சாலையில் கற்களை போட்டு விபத்து ஏற்படுத்தி கொள்ளை

* பைக்கில் வந்த வாலிபர் பரிதாபச்சாவு * வாட்ஸ் அப்பில் வைரலாகும் வீடியோ

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் அருகே சாலையில் கற்களை போட்டு தனியார் நிறுவன ஊழியரை, விபத்துக்குள்ளாக்கி கொன்ற சம்பவம் வாட்ஸ் அப்பில் வைரலாக பரவி வருகிறது.மதுரையில் உள்ள தனியார் ஸ்கேன் சென்டரில் பணிபுரிந்தவர் பாஸ்கரன் (55). இவர் திருப்பரங்குன்றம் மெயின் ரோட்டில் திருநகர் பகுதியை கடந்த 23ம் தேதி நள்ளிரவு டூவீலரில் கடந்து சென்றார். அப்போது சாலையில் கிடந்த கற்களில் மோதி படுகாயத்துடன் கீழே விழுந்தார். அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி 24ம் தேதி காலை பாஸ்கரன் இறந்தார். இதுதொடர்பாக  பாஸ்கரன் மனைவி தேவி கொடுத்த புகாரின்பேரில் திருநகர் போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து விசாரித்து வந்தனர்.அப்பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்ததில், சம்பவத்தின்போது ஒருவர் சாலையில் ஒவ்வொரு கல்லாக போடுகிறார். பின்னர் அருகில் உள்ள பாலத்தின் திண்டில் படுத்துக் கொள்கிறார்.

அப்போது அவ்வழியாக டூவீலரில் வந்த பாஸ்கரன், கற்களில் மோதி கீழே விழுகிறார். உடனே அந்த நபர் ஓடிச்சென்று பாஸ்கரனின் செல்போன் மற்றும் உடைமைகளை தூக்கிச்சென்று மறைவிடத்தில் வைக்கிறார். பின்னர்  ஒன்றும் தெரியாதது போல பாஸ்கரனை மீட்டு ஆம்புலன்ஸில் எடுத்துச் செல்லும்போது அங்கு நிற்கிறார்.இதுதொடர்பாக திருநகர் போலீசார் விசாரித்தபோது, கற்களை சாலையில் பரப்பிய வாலிபர், மதுரை தனக்கன்குளம், திருவள்ளுவர் நகர், பர்மா காலனியை சேர்ந்த ராஜா (38) என்பது தெரிந்தது.
இவர், மனைவியோடு கோபித்துக் கொண்டு வெளியூர் செல்வதற்காக, திருப்பரங்குன்றம் மெயின் ரோட்டில் நின்று கொண்டிருந்தார். அவ்வழியாக சென்ற வாகனங்களை நிறுத்த முயற்சித்தபோது, யாருமே நிறுத்தவில்லை.  இதனால் கோபமடைந்த அவர், சாலையோரத்தில் கிடந்த கற்களை போட்டு வாகனங்களை நிறுத்த முயற்சித்துள்ளார். அப்போது பணி முடிந்து வீட்டுக்கு சென்ற பாஸ்கரன், கல்லில் மோதி நிலைதடுமாறி கீழே விழுந்து விபத்திற்குள்ளானார். சிகிச்சை பலனின்றி பாஸ்கரன், இறந்ததை தொடர்ந்து ராஜா கைதானார். இதுதொடர்பான சிசிடிவி காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : road ,Tiruparankundram ,accident , Thiruparankundram,road, Accidental ,robbery
× RELATED 5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி