×

ஆண் 4 லட்சம்; பெண் 2.50 லட்சம் என விலை நிர்ணயித்து 30 ஆண்டுகளாக குழந்தை விற்பனையில் ஈடுபட்ட நர்ஸ் கைது: வாட்ஸ் அப் ஆடியோவால் ராசிபுரம் போலீசில் சிக்கினார்

ராசிபுரம்: ராசிபுரத்தில், குழந்தைகள் விற்பனை புகார் தொடர்பாக விருப்ப ஓய்வு பெற்ற செவிலியர் உதவியாளர் மற்றும் அவரது கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியை மையமாக வைத்து, கடந்த 2 நாட்களாக வாட்ஸ்அப்பில் ஒரு ஆடியோ வைரலாக பரவியது. அந்த ஆடியோவில் பேசும் பெண் ஒருவர், ஆண் குழந்தை வேண்டுமா? பெண் குழந்தை  வேண்டுமா? கருப்பு அல்லது சிவப்பு நிறத்தில் வேண்டுமா? என கூறுவது பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த ஆடியோவில் பேசும் பெண், `குழந்தைக்கு முன் பணம் கொடுத்தால் உடனடியாக கிடைத்து விடும். கருப்பாக இருந்தால்  ஒரு விலை, சிவப்பாக இருந்தால் ஒரு விலை, அமுல் பேபி போல் இருந்தால் ஒரு விலை நிர்ணயித்துள்ளேன். 30 ஆண்டுகளாக குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு குழந்தைகளை விற்று வருகிறேன். ஆண் குழந்தை ₹4 லட்சம்  முதல் ₹4.50 லட்சத்திற்கும், பெண் குழந்தை ₹2.50 லட்சம் முதல் ₹3.50 லட்சத்திற்கும் விற்று வருகிறேன். இதனை வெளியில் கூற வேண்டாம். ராசிபுரம் நகராட்சியிலேயே 45 நாட்களில் குழந்தைக்கான பிறப்பு சான்றிதழ்  பெற்று தந்து விடுவேன். இதற்கு ₹70 ஆயிரம் வரை செலவாகும், என கூறுகிறார். திருமணமாகி பல ஆண்டுகளாக குழந்தை இல்லாத தம்பதிகளை குறிவைத்தும், ஏழ்மை நிலையில் உள்ள பெற்றோர்களை குறிவைத்தும்,  குழந்தைகள் வாங்கி விற்கப்படுகிறது. தவறான நடத்தையால் பிறக்கும் குழந்தைகளை வாங்கியும், இந்த கும்பல் விற்று வருவதாக தகவல் வெளியானது.

இதுகுறித்து ராசிபுரம் காவல்நிலையத்தில், சுகாதாரத்துறை உதவி இயக்குனர் ரமேஷ்குமார் ஒரு புகார் தெரிவித்தார். இதன்பேரில், ராசிபுரம் போலீசார்   விசாரணை நடத்தியதில், குழந்தைகள் விற்பனையில் ராசிபுரம்  தட்டாங்குட்டை காட்டுக்கொட்டாய் காட்டூரில் வசித்து வரும் அமுதவள்ளி(50) என்பவருக்கு தொடர்பிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, அவரை ராசிபுரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் வைத்து விசாரித்தனர். இதில்,  குழந்தை விற்பனையில் ராசிபுரம் நகர கூட்டுறவு சங்கத்தில் உதவியாளராக பணியாற்றி வரும் அவரது கணவர் ரவிச்சந்திரன்(53) என்பவரும் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்தது. ஆடியோவில் இருப்பது அமுதவள்ளியின் குரல்  தான் என்பதும் தெரியவந்தது. உடனே, அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், குழந்தை விற்பனையில் பலருக்கு தொடர்பிருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர். அவர்கள் குறித்தும் விசாரித்து  வருகின்றனர்.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது: புகாருக்குள்ளான அமுதவள்ளி சேலம், பள்ளிபாளையம் உள்ளிட்ட இடங்களில் தற்காலிகமாக பணியாற்றி விட்டு, கடந்த 2012ம் ஆண்டு ராசிபுரம் அரசு மருத்துவமனையில் பெண் செவிலியர்  உதவியாளராக பணியாற்றிய போது, விருப்ப ஓய்வு பெற்றவர். விசாரணையில் சேலத்தைச் சேர்ந்த ஒரு தம்பதியின் குழந்தையை வாங்கி, ஓமலூரில் உள்ள ஒருவருக்கு விற்றதாக அமுதவள்ளி தெரிவித்துள்ளார். ஒரு  குழந்தையை, ஒரு தம்பதி விற்பனை செய்யும்போது, பெயர் மாற்றம் செய்ய வேண்டும். அதேபோல், வாங்குவோரும் பெயர் மாற்றம் செய்து தத்தெடுத்துக் கொள்ள வேண்டும். இதனை முறையாக பதிவு செய்த பின்னரே,  குழந்தையை கைமாற்றி கொடுத்ததாக கூறியுள்ளார். மேலும் விசாரணை நடக்கிறது.

ஆம்புலன்ஸ் டிரைவரும் கைது
கொல்லிமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெறும் பிரசவங்கள் குறித்து, அங்கு ஆம்புலன்ஸ் டிரைவராக பணியாற்றி வரும் முருகேசன், அமுதவள்ளிக்கு உடனுக்குடன் தகவல் தெரிவித்து வந்துள்ளார். இதன்பேரில்,  குழந்தை பிரசவித்த பெண்களை அணுகி, அவர்களது ஏழ்மையை பயன்படுத்தி, குழந்தைகளை வாங்கி அமுதவள்ளி விற்பனை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, விற்பனைக்கு உடந்தையாக இருந்ததாக,  முருகேசனை ராசிபுரம் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Nurse ,baby , 4 lakhs male ,price , girl , 2.50 lakh, Child , Nurse arrested , sale,Audio, rasipuram ,police
× RELATED கணவர் இறந்த நிலையில் ஆறாவதாக பிறந்த...