வாக்காளர் அடையாள அட்டை இருந்தும் பட்டியலில் பெயர் நீக்கப்பட்டவர்கள் வாக்களிக்க வாய்ப்பளிக்க வேண்டும்: தேர்தல் ஆணையத்திற்கு அரசியல் கட்சிகள் வலியுறுத்தல்

சென்னை: வாக்காளர் அடையாள அட்டை இருந்தும் வாக்களிக்க முடியாமல் திரும்பி சென்றவர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று அரசியல் கட்சி தலைவர்கள் தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தியுள்ளனர். தமிழகத்தில் கடந்த 18ம்தேதி நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில் வாக்காளர் அடையாள அட்டை இருந்தவர்களில் பலர் நம்மிடம்தான் அட்டை இருக்கிறதே என்று வாக்காளர் பட்டியலை சரிபார்க்க ஆர்வம் காட்டவில்லை.

இது தெரியாமல் ஒரு மணிநேரத்துக்கும் மேல் வரிசையில் வாக்காளர் அடையாள அட்டையுடன் காத்திருந்தவர்களின் பெயர்கள் பட்டியலில் இல்லை என்று தேர்தல் அதிகாரிகள் அறிவித்தனர். இதில் அதிர்ச்சியான விஷயம் என்னவென்றால் இவர்கள் அனைவரும் கடந்த தேர்தலில் அதே வாக்குசாவடியில் வாக்களித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த நம்பிக்கையில் வரிசையில் நின்றவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் அதிர்ச்சியில் உறைந்தனர். இந்த விவகாரம் விவகாரம் பூதாகரமாக வெடித்தது.

பாதிக்கப்பட்டவர்கள் அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு சில குடும்பத்தில், மனைவியின் பெயர் மட்டும் வாக்காளர் பட்டியலில் உள்ளது. பிள்ளைகள் மற்றும் குடும்ப தலைவரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது. சில குடும்பத்தில், அந்த குடும்பத்தின் தலைவர் பெயர் மட்டும் உள்ளது. மற்றவர்கள் பெயர்கள் ஒட்டுமொத்தமாக நீக்கப்பட்டுள்ளது.

இது ஆளுங்கட்சியினரின் சதியா அல்லது தேர்தல் ஆணையத்தின் அலட்சிய போக்கா என்பன போன்ற கேள்விகள் தற்போது விவாத பொருளாக மாறி வருகிறது. 40 ஆண்டுகளுக்கு மேலாக அதே பகுதியில் வசித்து வருகிறோம். பல தேர்தலில் இதே வாக்குச்சாவடி மையத்தில் வாக்களித்திருக்கிறோம்.
ஆனால் இந்த முறை மட்டும் வாக்காளர் அடையாள அட்டை இருந்தும், வாக்காளர் பட்டியலில் எங்கள் பெயர்களை யாரோ நீக்கியுள்ளனர்.

இது எப்படி நடந்தது?. கடந்த தேர்தலில் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருந்த பெயர்களை எப்படி நீக்க முடியும் என்றும், இது திட்டமிட்ட சதி என்று வாக்காளர்கள் தரப்பில் இருந்து குற்றம்சாட்டப்பட்டது. ஒவ்வொரு பகுதியிலும் நடந்த இதுபோன்ற குளறுபடிகள் பற்றி தேர்தல் அதிகாரிகள் கூறுகையில், ‘‘வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்த பணிகள் ஆண்டு தோறும் நடைபெறுகிறது.

அவ்வாறு நடைபெறும் போது வாக்காளர்கள் தங்கள் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளதா? என்பதை உறுதி செய்திருக்க வேண்டும். அப்படி செய்யாமல் கடைசி நேரத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என்றால் ஒன்றும் செய்ய முடியாது. வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாவிட்டால் அடையாள அட்டை இருந்தாலும் வாக்களிக்க முடியாது’’ என்றே தெரிவித்தனர்.

இந்த பிரச்னைக்கு தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையையும் எடுக்காததால், வாக்காளர்கள் இந்த பிரச்னையை யாரிடம் சென்று முறையிடுவது என்று தெரியாமல் உள்ளனர். தங்களது வாக்குரிமை பறிக்கப்பட்டிருக்கிறது என்ற குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றனர். இப்பிரச்னைக்கு தேர்தல் ஆணையம் உரிய பதில் தர வேண்டும் என்ற குரல் பாதிக்கப்பட்ட வாக்காளர்கள் மத்தியில் வலுத்து வருகிறது.

இதுபோன்ற தேர்தல் ஆணையத்தின் குளறுபடிகளால் தான் நாடாளுமன்ற தேர்தலில் வாக்குப்பதிவு சதவீதம் 71.87 ஆக குறைந்துவிட்டது என்று அரசியல் கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர். இப்பிரச்னைக்கு முடிவு கட்டும் வகையில், வாக்காளர் அடையாள அட்டை இருந்தும் வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்பட்டுள்ள வாக்காளர்களை முறைப்படி ஆய்வு செய்து அனைத்தும் சரியாக இருந்தால் அவர்களுக்கு தற்போது வாக்களிக்க வாய்ப்பளிக்க வேண்டும் என்று அரசியல் கட்சியினர் தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : voter ,nominees ,parties ,EC , Voter, identity card, list, name, election commission, political parties, assertion
× RELATED தமிழகத்தில் 6.13 கோடி வாக்காளர் : இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு