×

கள்ளிக்குடி, திருச்சுழி, ராஜபாளையத்தில் பலத்த சூறாவளி : பல லட்சம் மதிப்புள்ள வாழை நாசம்

திருமங்கலம் / திருச்சுழி: கள்ளிக்குடி, திருச்சுழி, ராஜபாளையம் பகுதிகளில் வீசிய பலத்த சூறைக்காற்றால், பல லட்சம் மதிப்புள்ள வாழை மரங்கள் சேதம் அடைந்தன. மதுரை மாவட்டம், கள்ளிக்குடி தாலுகா திருமாலை சேர்ந்தவர் மாயாண்டி (48). விவசாயி. இவர் தனது தோட்டத்தில் வாழை, கொய்யா, மா உள்ளிட்டவை பயிரிட்டுள்ளார். வாழை மரங்கள் இன்னும் இரண்டு மாதத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை இந்த பகுதியில் வீசிய பலத்த சூறைக்காற்றில் பல மரங்கள் கீழே விழுந்து சாய்ந்தன. இதே கிராமத்தை சேர்ந்த பூமணிக்கு சொந்தமான ஒரு ஏக்கர் வாழையும் காற்றில் சேதமடைந்தது. இந்த கிராமத்தில் மட்டும் சுமார் 3 லட்ச ரூபாய் மதிப்புள்ள வாழை மரங்கள் சேதமடைந்துள்ளன. இதே போல் கொய்யா, மாவும் சேதமடைந்துள்ளன.

விவசாயி மாயாண்டி கூறுகையில், திருமால் கிராமத்தில் மட்டும் 3 லட்ச ரூபாய் மதிப்புள்ள வாழை மரங்கள் சூறைக்காற்றில் சேதமடைந்துள்ளன. வறட்சி காலத்தில் மிகவும் கஷ்டப்பட்டு வாழை விவசாயத்தில் ஈடுபட்டுள்ளோம். இன்னும் இரண்டு மாதத்தில் அறுவடைக்கு தயாரான நிலையில் தற்போது இந்த சேதம் விளைந்துள்ளது. அதிகாரிகள் எங்கள் நிலங்களை பார்வையிட்டு சேத விபரங்களை சேகரித்து உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும்’’ என்றார். விருதுநகர் மாவட்டம், திருச்சுழி பகுதியில் நேற்றுமாலை திருச்சுழி, வடப்பாலை, அகத்தாகுளம், குருந்தகுளம், வீரசோழன் பகுதிகளில் கருமேகத்துடன் சாரல் மழை பெய்தது. சற்று நேரத்தில் சூறாவளி காற்றுடன் பலத்த மழையாக மாறியது. சூறாவளி காற்றில் வாழை, பனை, வேம்பு உள்பட ஏராளமான மரங்கள் சாய்ந்தன.

அகத்தாகுளத்தை சேர்ந்த தங்கம் என்பவருடைய நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த 150க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் வேரோடு சாய்ந்தன. குருந்தகுளம் வேலுச்சாமி என்பவருடைய 300 வாழையும், இதே ஊரைச் சேர்ந்த நாகரத்தினம் என்பவருடைய 300க்கும் மேற்பட்ட வாழை மரங்களும், வடப்பாலையைச் சேர்ந்த லட்சுமணபெருமாளின் தோட்டத்தில் குலை தள்ளிய நிலையில் இருந்த 900க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ந்து சேதமடைந்து வீணாகின. பெரும்பாலான விவசாயிகள், கடன் வாங்கி வாழை நட்டனர். தற்போது முற்றிலும் சேதமடைந்தால் கவலையடைந்துள்ளனர். சேதமடைந்த வாழை மரங்களை வருவாய்த்துறையினர் கணகெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதேபோல் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் நேற்றுமாலை பெய்த பலத்த மழையால் அந்த பகுதியில் வாழை மரங்கள் ஒடிந்து விழுந்து சேதமடைந்தன.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Cyclone ,Tiruchuri ,Rajapalayam , Kallikudi, Tiruchuli, Hurricane, Banana trees
× RELATED ரெமல் புயலால் அசாமில் கனமழை, வெள்ளம்: 6 பேர் உயிரிழப்பு