நடிகர் சிவகார்த்திகேயனின் ஓட்டு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் : சத்யபிரதா சாஹூ விளக்கம்

சென்னை : தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 18ம் தேதி நடைபெற்ற மக்களவை தேர்தலின் போது வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் வாக்காளர் அடையாள அட்டை இருந்தும் வாக்களிக்க முடியாமல் பலர் ஏமாற்றம் அடைந்தனர். இவர்களில் நடிகர் சிவகார்த்திகேயனும் ஒருவர் ஆவார். ஆனால் தேர்தல் அதிகாரிகளுடன் பேசியதையடுத்து சென்னை வளசரவாக்கம் வாக்குச்சாவடியில் வாக்காளர் அடையாள அட்டையை காட்டி வாக்களிக்க நடிகர் சிவகார்த்திகேயன் அனுமதிக்கப்பட்டார். இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், வாக்காளர் பட்டியலில் பெயல் இல்லாமல் வாக்களித்த நடிகர் சிவகார்த்திகேயனின் ஓட்டு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

விதிகளை மீறி சிவகார்த்திகேயன் வாக்களித்த போதும் அவர் வாக்கு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்றும், யாருக்கு வாக்களித்தார் என்பது தெரியாதபோது ஒருவாக்கை மட்டும் எண்ணாமல் விட முடியாது என அவர் கூறியுள்ளார். மேலும் வெற்றி, தோல்வி குறித்து முடிவுகள் வெளியாகும்போது தேர்தல் ஆணையத்தின் உத்தரவு பின்பற்றப்படும் என சத்யபிரதா சாஹூ கூறியுள்ளார். வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாமலேயே சிவகார்த்திகேயன் வாக்களித்தது குறித்து திருவள்ளூர் மாவட்ட தேர்தல் அதிகாரி அறிக்கை அளித்துள்ளதாக தெரிவித்த அவர், விதிமுறையை மீறி சிவகார்த்திகேயனை வாக்களிக்க அனுமதித்த அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

மேலும் விதியை மீறி ஒருவாக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்கப்படும் என சத்யபிரதா சாஹூ கூறியுள்ளார். நடிகர் ஸ்ரீகாந்த் வாக்களித்தாரா இல்லையா என்பது குறித்து தெளிவுபடுத்தும்படி அறிக்கை கேட்கப்பட்டுள்ளதாகவும், நடிகர் ஸ்ரீகாந்த் வாக்களித்தது போல் வீடியோ உள்ளதால் அறிக்கை கேட்கப்பட்டுள்ளது என்றும் அவர் விளக்கமளித்துள்ளார். தேர்தல் பணியின் போது உயிரிழக்கும் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகை ரூ.15 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும், மதுரை விவகாரம் குறித்து தலைமை தேர்தல் ஆணையத்துக்கு இன்று அறிக்கை அனுப்பப்படும் என்றும் அவர் தகவல் அளித்துள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Sivakarthikeyan ,Satyabrata Sahu , Actor Sivakarthikeyan,Satyabrata Sahoo,Lok Sabha election,Election Commission
× RELATED சிவகார்த்திகேயனுடன் சண்டைபோடும் நடிகை