வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாமல் வாக்களித்த நடிகர் சிவகார்த்திகேயன் மீது நடவடிக்கை? தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பேட்டி

சென்னை: வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாமல் நடிகர் சிவகார்த்திகேயன் வாக்களித்தது தவறான நடவடிக்கையாகும். அவரை வாக்களிக்க அனுமதித்த தேர்தல் அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சிவகார்த்திகேயன் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி கூறினார். இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு சென்னை, தலைமை செயலகத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: மதுரை தொகுதியில் பதிவான வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை அருகே, வாக்குப்பதிவு அன்று பயன்படுத்தப்பட்ட டைரி உள்ளிட்ட பொருட்களை பாதுகாப்பாக வைத்திருந்த ஸ்டோர் ரூமுக்குள் சென்றதாக பெண் தாசில்தார் ஒருவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், அந்த அறை சீல் வைக்கப்பட்டிருந்ததா, இல்லையா, போலீசார் இருந்தார்களா, இல்லையா என்பது உள்ளிட்ட தேர்தல் ஆணையம் கூறியிருந்த கைடுலைன்கள் அனைத்தும் முறையாக பின்பற்றப்பட்டதா என்பது பற்றி விசாரணை நடத்த சென்னையில் இருந்து கூடுதல் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பாலாஜி 2 நாட்களுக்கு முன் மதுரை சென்றிருந்தார். அவர், இன்று (நேற்று) சென்னை திரும்பியுள்ளார். அவர் தனது அறிக்கையை என்னிடம் உடனடியாக அளிப்பார். மேலும், தேர்தல் ஆணையமும் இந்த பிரச்னையில் நிறைய கேள்விகள் கேட்டுள்ளது. இதுபற்றி இறுதி அறிக்கை தேர்தல் ஆணையத்துக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டு, தவறு செய்தவர்கள் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழகம் முழுவதும் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு குறித்து, அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள், மாவட்ட எஸ்பி உள்ளிட்டவர்களுடன் இன்று மாலை 4 மணிக்கு வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தப்படும். அப்போது, தேர்தல் டிஜிபியும் உடன் இருப்பார். தமிழகத்தில் தர்மபுரியில் 8 வாக்குச்சாவடியிலும், திருவள்ளூர், கடலூரில் தலா ஒரு வாக்குச்சாவடியிலும் மறுதேர்தல் நடத்துவது குறித்து எந்த அறிவிப்பும் இந்திய தேர்தல் ஆணையம் இன்னும் அறிவிக்கவில்லை.  நடிகர் சிவகார்த்திகேயனிடம் வாக்காளர் அடையாள அட்டை இருந்தது. ஆனால் அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை என்பது சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் சிவகார்த்திகேயன் விருகம்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட சாலிகிராமம் வாக்குச்சாவடியில் ஓட்டுப்போட்டுள்ளார். அவர் ஓட்டுப்போட்டது தவறான நடவடிக்கையாகும். ஓட்டுபோட அனுமதி அளித்த வாக்குச்சாவடி அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாமல், சிவகார்த்திகேயன் ஓட்டு போட்டுள்ளதால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்று கேட்கிறீர்கள். அதுவும் தவறான நடவடிக்கைதான். இதுகுறித்தும் விசாரிக்கப்படும். அதேபோன்று, நடிகர் காந்த் ஓட்டு போடவில்லை. அதேநேரம் அவரது கைவிரலில் மை வைக்கப்பட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட பல இடங்களில் தேர்தல் ஆணையம் சார்பில் வழங்கப்பட்ட பூத்சிலிப் ஒழுங்காக வழங்கப்படவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அதை கருத்தில் கொண்டு, தமிழகத்தில் வருகிற மே 19ம் தேதி நடைபெறும் திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, சூலூர் தொகுதியில் நடைபெறும் இடைத்தேர்தலுக்கு முன்னதாக ஒரு வாரத்துக்கு முன் அனைவருக்கும் பூத் சிலிப் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

10 ஆயிரம் ஓட்டு காணாமல் போனதா?
தமிழக தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ நிருபர்களிடம் கூறியதாவது, கன்னியாகுமரி தொகுதியில் கடந்த  2018ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்டபோது  14.47 லட்சம் வாக்காளர்கள் இருந்தனர். பின்னர் ஜனவரி 1ம் தேதி 18 வயது  நிறைவடைந்தவர்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்கலாம் என்று  கூறப்பட்டது. அதன்படி கூடுதலாக 37,371 பெயர் சேர்க்கப்பட்டு 14.77 லட்சமாக  வாக்காளர்கள் உயர்ந்தனர். அப்போது 7,671 பேர் பெயர் பட்டியலில் இருந்து  நீக்கப்பட்டிருந்தது. பின்னர் மீண்டும் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்  நடத்தப்பட்டது. இதில் கடந்த ஏப்ரல் 5ம் தேதி வரை 18,791 பெயர்கள்  சேர்க்கப்பட்டு, 2,371 பெயர் நீக்கப்பட்டது. அதன்படி கடந்த ஆண்டு  செப்டம்பர் முதல் கடந்த மாதம் ஏப்ரல் வரை 10 ஆயிரம் வாக்காளர்கள் பெயர்  இரட்டை பதிவு, மரணம் அடைந்த காரணங்கள் நீக்கப்பட்டுள்ளது. தற்போது,  குறிப்பிட்ட சில பூத்களில் மட்டும் பெயர் நீக்கப்பட்டுள்ளதா என்றும்  விசாரணை நடத்த மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Sivakarthikeyan ,chief election officer ,Tamil Nadu , Voter list, actor Sivakarthikeyan, Chief Electoral Officer of Tamil Nadu
× RELATED வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு...