×

நான் ஓட்டுப்போட சென்ற போது இரட்டை இலை சின்னத்திற்கு ஓட்டுப்போட சொன்னார்கள்: தங்க தமிழ்ச்செல்வன் பேட்டி

சென்னை: நான் ஓட்டுப்போட சென்ற போது அங்கே இருந்த தன்னார்வலர்கள் ஓட்டுப்போட வரும் மக்களிடமும், வயதானவர்களிடமும் இரட்டை இலை சின்னத்திற்கு ஓட்டுப்போடுங்கள் என்று பரப்புரை செய்தார்கள் என அமமுக தேனி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி:தேர்தல் முடிந்த நேரத்தில் மதுரையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறைக்கு அருகில் இருந்த ஸ்டாக் ரூமில் பெண் அதிகாரி ஒருவர் உள்ளே சென்று வந்துள்ளார். அந்த அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். தேர்தல் வேலைகள் எல்லாம் முடிந்த பின்பு அதிகாரி ஒருவர் ஏன் அறைக்குள் செல்ல வேண்டும். அதிமுக தோல்வியின் விளிம்பில் உள்ளது. மூன்றடுக்கு பாதுகாப்பு மற்றும் சிசிடிவி கேமரா கண்காணிப்பை மீறி அந்த பெண் அதிகாரி எப்படி உள்ளே சென்றார்.

தவறு நடக்கவில்லை என்றால் பெண் அதிகாரியை ஏன் சஸ்பெண்ட் செய்ய வேண்டும். ஆளும்கட்சி தேர்தல் தோல்வியை சந்திக்கப் போகிறோம் என்ற பயத்தில் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். எனவே, தற்போது இரவு 10 மணி வரையில் தான் வேட்பாளர்களின் ஏஜென்ட்கள் வாக்குபதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு முன்பாக கண்காணிப்பு பணியில் இருக்கின்றனர். இதை 24 மணி நேரமாக மாற்றி, முழு நேரமும் வேட்பாளர்களின் ஏஜென்ட்கள் அறைகளின் முன்பு இருக்க தேர்தல் ஆணையம் அனுமதிக்க வேண்டும். இதுகுறித்து தலைமை தேர்தல் அதிகாரியிடம் மனு அளிக்க உள்ளோம். 24 மணி நேரமும் ஏஜென்ட்களை கண்காணிப்பு பணியில் இருக்க அனுமதிக்கவில்லை என்றால் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறைகளில் தவறு நடப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. அரசு நினைத்தால் அம்மியும் நகரும் என்ற பழமொழி உள்ளது.

இதேபோல், நான் ஓட்டுப்போட சென்ற போது கூட அங்கே இருந்த ஒழுங்குபடுத்துபவர்கள் தங்களுடைய  வேலைகளை செய்யாமல் ஓட்டுப்போட வந்தவர்களிடம் இரட்டை இலை சின்னத்திற்கு ஓட்டு போடுங்கள் என்று பிரசாரம் செய்தனர். இதுகுறித்து நான் மாவட்ட அதிகாரியிடம் புகார் செய்தேன். பின்பு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. 500 கோடி வரை பணப்பட்டுவாடா நடந்ததற்கான வீடியோ ஆதாரம் என்னிடம் உள்ளது. தேனி தொகுதியில் அதிமுகவுக்கு ஓட்டு போடாதவர்களிடம் இருந்து பணத்தை ஓபிஎஸ் தரப்பு திரும்ப கேட்டு வருகின்றனர். பாஜக, அதிமுக ஒரு தொகுதியில் கூட வெற்றிபெறாது.இவ்வாறு கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : interview ,Gold Thamilchelvan , Double leaf, thanga thamilselvan
× RELATED டிஎன்பிஎஸ்சி குரூப் 1 பதவிக்கு 2ம் கட்ட நேர்முக தேர்வு