×

பொம்மிடி அருகே பாமகவினர் தாக்கினர் வாக்குச்சாவடி அதிகாரி புகாரில் பஞ்சாயத்து செய்யும் போலீஸ்: கலெக்டரிடம் முறையீடு

தர்மபுரி: பொம்மிடி அருகே தேர்தல் நாளன்று வாக்குச்சாவடி அலுவலர் மீது தாக்குதல் நடத்திய பாமகவினர் மீது நடவடிக்கை எடுக்கும்படி அவர் போலீசில் புகார் கொடுத்துள்ளார். ஆனால் போலீசார் வழக்குபதிவு செய்யாமல் பஞ்சாயத்து செய்யவே, பாதிக்கப்பட்டவர் கலெக்டர் அலுவலக புகார் பெட்டியில் தனது மனுவை போட்டுள்ளார். தர்மபுரி மாவட்டம் பொம்மிடி அருகே குக்கல்மலை பகுதியை சேர்ந்தவர் மணிவண்ணன் (42). இவர் அதே பகுதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில், ஆசிரியராக பணியாற்றி வருகிறார். கடந்த 18ம் தேதி நடந்த மக்களவை தேர்தலையொட்டி, வாக்குச்சாவடி நிலை அலுவலராக அவர் பணியாற்றும் பள்ளியிலேயே நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் வாக்குப்பதிவு நடந்து கொண்டிருந்தபோது, மாலை 4 மணியளவில் வாக்குச்சாவடி அருகே பாமகவை சேர்ந்தவர்கள் இடையே திடீர் வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டனர். வாக்குச்சாவடியில் இருந்து 100 மீட்டருக்குள் சம்பவம் நடந்ததால், இதனை மணிவண்ணன் தனது செல்போனில் வீடியோ எடுத்தார். இதை பார்த்த அவர்கள், மணிவண்ணனிடம் எப்படி வீடியோ எடுக்கலாம் எனக்கேட்டு தகராறு செய்து அவரை சரமாரியாக தாக்கினர்.

இதையடுத்து மணிவண்ணன் மறுநாள் (19ம் தேதி) பொம்மிடி போலீசில் புகார் அளித்தார். அதில், வாக்குப்பதிவு நடந்தபோது, அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் விதமாக சிலர் பிரச்னை செய்தனர். அமைதியை ஏற்படுத்தமுயன்றபோது, வாக்குச்சாவடி நிலை அலுவலர் என்றும் பாராமல் என் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தினர். எனவே எனது உடைமைக்கும் உயிருக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும். மேலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

ஆனால், போலீசார் புகார் மனுவை பெற்றுக்கொண்டு வழக்கு ஏதும் பதியாமல் சமரச முயற்சியில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதையடுத்து நேற்று முன்தினம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த மணிவண்ணன் தனது புகார் மனுவை கலெக்டர் அலுவலக புகார் பெட்டியில் போட்டுள்ளார். தேர்தல் அதிகாரியை கட்சியினர் தாக்கிய சம்பவம் ஆசிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Pumpkin attacker ,Pommyadi , Pumpkin, mask, attack, voting, officer, complainant, collector, appeal
× RELATED பொம்மிடி அருகே வேப்பாடி ஆற்றின் குறுக்கே அணை