×

நிலக்கோட்டை தொகுதி இடைத்தேர்தலில் வாக்களிப்பதற்கு வரிசையில் நின்ற பெண்களிடம் அத்துமீறிய காவலர்

* தட்டிக்கேட்டவரையும் தாக்கினார்
* வாட்ஸ்அப்பில் வைரலாகும் வீடியோ

செம்பட்டி: நிலக்கோட்டை சட்டமன்ற இடைத்தேர்தலில் வாக்களிக்க வரிசையில் நின்ற பெண்களிடம் போலீஸ்காரர் ஒருவர் அத்துமீறி நடந்து கொண்ட வீடியோ வாட்ஸ்அப்பில் வைரலாகி வருகிறது. திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு மக்களவை தேர்தலுடன் கடந்த 18ம் தேதி நடைபெற்றது. நிலக்கோட்டை தாலுகா, நூத்தலாபுரம் அரசு ஆரம்பப் பள்ளி கட்டிடத்தில் (வாக்குச்சாவடி எண் 164, 165, 166) வாக்குப்பதிவு நடைபெற்றது. அங்கு ஆண்களும், பெண்களும் தனித்தனி வரிசையாக நின்றனர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த தங்கப்பாண்டி என்ற போலீஸ்காரர் அடிக்கடி உள்ளே சென்று வந்தார்.

அவர் உள்ளே செல்லும்போதும் வரும்போதும் வரிசையில் நின்ற பெண்களை கண்ட இடங்களில் கையை வைத்து சேட்டை செய்தார். இதை பெண்கள் வெளியில் சொல்ல முடியாமல் சங்கடப்பட்டுக்கொண்டு நின்றிருந்தனர். ஒருகட்டத்தில் நூத்தலாபுரம் ஊராட்சி விராலிப்பட்டியை சேர்ந்த பெண் ஒருவரின் கையை பிடித்து அவர் இழுத்தார். இதற்கு எதிர்வரிசையில் நின்ற அந்த பெண்ணின் கணவர் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த போலீஸ்காரர் தங்கப்பாண்டி, அந்த பெண்ணின் கணவரை கடுமையாக தாக்கினார். பின்னர் அவரை இழுத்துச் சென்றார். இதை கண்டித்து அவரது உறவினர்கள் போலீஸ்காரரை சூழ்ந்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.  பெண் பணியாளர் ஒருவர் வந்து சமாதானம் செய்தபின்பே போலீஸ்காரரை உறவினர்கள் விட்டனர். இது தொடர்பான வீடியோ தற்போது வாட்ஸ்அப்பில் வைரலாகி பரவி வருகிறது. நூத்தலாபுரம் மக்கள் கூறுகையில், ‘‘இதுபோன்று பொது இடத்தில் ஆண் காவலர் மிகவும் அநாகரிகமான முறையில் நடந்து கொண்டது வேதனையானது. அந்த காவலர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று தெரிவித்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : defender ,women ,constituency ,Nilkottai , Nilkottai, constituency, by-election, women, abusive, guards
× RELATED பெண் கைதிகள் சென்ற வேனில் தீ