×

நாங்க மறந்துட்டோம் கட்சிங்கதான் மறக்கல: கோத்ரா முஸ்லிம்கள் நெத்தியடி

குஜராத் மாநிலத்தில் கடந்த 2002ம் ஆண்டு கோத்ராவில் சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு சிலர் தீ வைத்தனர். இதில், 59 கரசேவகர்கள் கருகி பலியாகினர். இதைத் தொடர்ந்து வெடித்த கலவரத்தில் 1000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இந்தியாவின் மிகப்பெரிய மதக்கலவரமான கோத்ரா சம்பவத்தை பற்றி பேசும்போது இன்றும் கூட லேசான பதற்றம் ஏற்படத்தான் செய்கிறது. கோத்ரா பகுதியானது பஞ்ச்மகால் மக்களவை தொகுதியின் கீழ் வருகிறது. கோத்ராவின் மக்கள்தொகை 1.90 லட்சம். இதில், 40 சதவீதம் பேர் முஸ்லிம்கள்.

இம்மக்களவை தொகுதியில் உள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 17 லட்சம். இதில், 2.18 லட்சம் பேர் முஸ்லிம்கள். கோத்ரா கலவரம் நடந்து 17 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், தேர்தல் பிரசாரங்களில் இவ்விஷயத்தை பற்றி அரசியல் கட்சிகள் பேசுவது இப்போதும் வழக்கமாக உள்ளது.
ஆனால், பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களோ அரசியலுக்கு அப்பாற்பட்டு நிற்கின்றனர். ‘தங்கள் அமைதியாக வாழ்வதற்கு பாஜ அரசுதான் காரணம்’ என்பதே அவர்களில் பெரும்பாலானோரின் கருத்தாக உள்ளது. இங்கு வசிக்கும் முஸ்லிம் மக்கள் வணிகர்களாகவே உள்ளனர்.

போலன் பஜார் பகுதியில் ஆட்டோமொபைல் கடை வைத்திருக்கும் ஹாஜி பரூக் கேஷ்ரி கூறுகையில், ‘‘2002க்கு பிறகு எந்த கலவரமும் இங்கு நடந்ததில்லை. இங்கு அமைதியும், வளர்ச்சியும் இணைந்து கிடைக்கிறது. சாலை வசதி, சுகாதாரம், குடிநீர் என அடிப்படை வசதிகள் செய்து தரப்படுகின்றன. எங்களின் கோரிக்கையை அரசியல் தலைவர்கள் உடனுக்குடன் கேட்டு நிவர்த்தி செய்கின்றனர். இந்து-முஸ்லிம்கள் இடையே நல்லுறவு நீடிக்கிறது. இந்த அமைதியுடன் கூடிய தொழில் வளர்ச்சிதான் எங்களுக்கு தேவை’’ என்றார்.

கோத்ரா ரயில் நிலையத்தின் எதிரே வெற்றிலை கடை நடத்தி வரும் முகமது ஹூசேன் கூறுகையில், ‘‘2002 அசம்பாவிதத்தை பற்றி இப்போதெல்லாம் யாருமே பேசிக் கொள்வதில்லை. எல்லாம் சுமூகமாக இருக்கும்போது எதற்காக தேவையின்றி அதைப் பற்றி நாங்கள் சிந்திக்கப் போகிறோம்?’’ என்றார். தங்களின் தொழிலுக்கு பாஜ அரசுதான் அவசியம் என பெரும்பாலானோர் கூறினாலும், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுக்கும் முஸ்லிம்களின் ஆதரவு இருக்கத்தான் செய்கிறது.

குஜராத்தில் நாளை வாக்குப்பதிவு நடக்க உள்ள 25 மக்களவை தொகுதிகளில் பஞ்ச்மகாலும் ஒன்று. 25 தொகுதியும் தற்போது பாஜ வசம் உள்ளது. இம்முறை பாஜ சார்பில் சீட்டிங் எம்பி பிரபத்சின் சவுகானுக்கு பதிலாக எம்எல்ஏ ரத்தன்சின் சவுகானுக்கு சீட் தரப்பட்டுள்ளது. காங்கிரஸ் சார்பில் மூத்த தலைவர் வி.கே.காந்த் போட்டியிடுகிறார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Godhra Muslims Netiati , We, Party, Marocalla, Godhra Muslims, Netathi
× RELATED பிரசாரத்தில் வெறுப்புணர்வை தூண்டும்...