×

சித்ரா பௌர்ணமி: சதுரகிரியில் குவிந்த பக்தர்கள்

*தண்ணீரின்றி கடும் அவதி

வத்திராயிருப்பு : வத்திராயிருப்பு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் சித்திரை பௌர்ணமியை ஒட்டி ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு சென்றனர். ஆனால் அங்கு தண்ணீர் இல்லாததால் பக்தர்கள் கடும அவதிக்குள்ளாகினர். விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் உள்ளது. அமாவாசை, பௌர்ணமிக்கு தலா மூன்று நாட்கள், பிரதோஷத்திற்கு ஒரு நாள் என பக்தர்கள் சுவாமி தாிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.

இடைப்பட்ட விடுமுறை நாட்களில் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவதில்லை. கடந்த 17ம் தேதி பிரதோஷத்திற்கு திறந்து விடப்பட்டு இன்றுடன் 4 நாட்கள் அனுமதி முடிவடைகிறது. நேற்று அதிகாலை சித்திரை பௌர்ணமியை ஒட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் தாணிப்பாறை வனத்துறை கேட் முன்பு குவிந்ததை அடுத்து வனத்துறை கேட் திறக்கப்பட்டது. பக்தர்களின் உடமைகளை வனத்துறையினர் சோதனை செய்து அனுப்பினர்.

தாணிப்பாறையிலிருந்து கோயிலுக்கு செல்லும் வழியில் உள்ள ஓடைகளில் தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடக்கின்றன. சுந்தரமகாலிங்கம் கோயில் பகுதியிலும் பக்தர்களுக்கு தேவையான குடிநீர் பற்றாக்குறையான நிலையிலேயே உள்ளது. இதனால் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் கடைகளில் வாங்கிச் செல்லும் தண்ணீர் பாட்டில்களில் வனத்துறையினர் ரூ.10 வாங்கிக் கொண்டு ஸ்டிக்கர் ஒட்டி அனுப்புகின்றனர். அந்த பாட்டில்களை திரும்ப கொண்டு வந்து வனத்துறையினரிடம் கொடுத்தால் ஸ்டிக்கரை எடுத்துவிட்டு ரூ.10 திரும்ப கொடுக்கின்றனர்.

கோயிலுக்குச் செல்லும் பக்தா்கள் வெயிலையும் பொருட்படுத்தாமல் கைக்குழந்தை மற்றும் பொியவர்கள், முதியவர்கள் என ஆயிரக்கணக்கானோர் சித்திரை ெபளர்ணமி சிறப்பு பூஜைக்காக சென்று வந்தனர். கோடை விடுமுறை என்பதால் பக்தர்களின் கூட்டம் அதிகரித்துள்ளது. கோயிலுக்கு சென்று வரக்கூடிய பக்தா்கள் குடிப்பதற்கு வழியில்லாமல் மிகுந்த அவதிப்பட்டனர். கோயிலுக்கு செல்லும் இடங்களில் குடிநீர் வசதியை கோவில் நிர்வாகம் செய்ய வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை
விடுத்துள்ளனர்.

சித்திரை பௌர்ணமியை ஒட்டி இரவில் சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கும், சந்தனமகாலிங்கம் சுவாமிக்கும் பால், பழம் பன்னீர், இளநீா் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்றன. இதனையடுத்து சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார். பக்தர்கள் பலர்  மொட்டை உள்ளிட்ட நேர்த்திக்கடன் செலுத்தினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செயல் அலுவலர் சிவராமசூாியன் செய்திருந்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Chitra Poornima: Devotees Who Have Been Sacred , chithra Pournami,Sathuragiri ,large number,Devotees
× RELATED மருத்துவ கடைநிலை ஊழியர்களுக்கு 3...