×

பெருங்களத்தூரில் தனியார் நிறுவனத்துக்கு வசதியாக ஜிஎஸ்டி சாலையில் புதிதாக சிக்னல் அமைக்க எதிர்ப்பு

„ * நெரிசலுக்கு வழிவகுக்கும் என குற்றச்சாட்டு „                 
*  ஆய்வாளர் மீது பொதுமக்கள் சரமாரி புகார்


தாம்பரம்: தனியார் நிறுவனத்துக்கு வசதியாக பெருங்களத்தூர் ஜிஎஸ்டி சாலையில் புதிதாக சிக்னல் அமைப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இவ்வாறு  புதிய சிக்னல் அமைப்பதால் போக்குவரத்து நெரிசலுக்கு வழிவகுக்கும் எனவும், சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள்  கோரிக்கை விடுத்துள்ளனர்.   சென்னை மற்றும் சுற்றுவட்ட பகுதிகளில் உள்ள பெரும்பாலான பொதுமக்கள் தென்மாவட்டங்களில் உள்ள தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கும் மற்றும்  தென்மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வந்து சேருவதற்கு பெருங்களத்தூர் பேருந்து நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர்.  இந்த பேருந்து நிலையம் பெருங்களத்தூர் ஜிஎஸ்டி சாலையில் அமைத்துள்ளது. மேலும் பெருங்களத்தூர் பகுதியில் உள்ள மென்பொருள் நிறுவனம், ரயில் நிலையத்திற்கு என  தினமும் இங்கு ஏராளமான பொதுமக்கள் வந்து செல்வதால் இப்பகுதி எப்போதும் பரபரப்பாகவும், போக்குவரத்து நெரிசலுடனும் காணப்படும்.இதனால், பெருங்களத்தூர் பகுதியை கடந்து செல்வதற்கே குறைந்தது அரைமணி நேரம் ஆகும். இந்நிலையில் பெருங்களத்தூர் பகுதியில் போக்குவரத்து நெரிசலை  குறைப்பதற்காக கடந்த 2017ம் ஆண்டு ஜூன் மாதம் அப்போதைய போக்குவரத்து ஆய்வாளர் ஜெயவேல் பேருந்து நிலையம் அருகில் இருந்த சிக்னலை வாகனங்கள் கடந்து  செல்ல முடியாதபடி மூடினார்.  இதனால் பெருங்கொளத்தூர் மற்றும் பீர்க்கன்காரணை பகுதிகளில் இருந்து தாம்பரம் மார்க்கமாக செல்லும் வாகனங்கள் வண்டலூர் மேம்பாலம் வழியாக வலதுபுறம் திரும்பி  தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றன.இதற்கு 2 கி.மீ., தூரம் அலைய வேண்டியுள்ளதால், மூடப்பட்ட சிக்னலை மீண்டும் திறக்கவேண்டும் என பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சினர் சாலை மறியல்  போராட்டங்களில் ஈடுபட்டனர்.அதனை தொடந்து அப்போதைய தெற்கு காவல் இணை ஆணையர் அன்பு, பரங்கிமலை காவல் துணை ஆணையர் கல்யாண், தெற்கு போக்குவரத்து காவல் இணை ஆணையர்  பாவனீஸ்வரி, தெற்கு போக்குவரத்து காவல் துணை ஆணையர் அரவிந்தன், பீர்க்கன்காரனை காவல் நிலைய உதவி ஆணையர் பழனிசெல்வம் தலைமையில் பொதுமக்களிடம்  மற்றும் அரசியல் கட்சியினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.


பின்னர் அடைக்கப்பட்ட சிக்னலில் இருசக்கர வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் நடந்து செல்வதற்கு பாதை திறந்து விடுவதாகவும், கனரக வாகனங்கள் வண்டலூர் மேம்பாலம்  வரை சென்று சுற்றி வர அனுமதிப்பதாகவும் காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அதற்கு பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர்களும் சம்மதம் தெரிவித்தனர்.இதனால் பெருங்களத்தூர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் குறைந்து பொதுமக்கள் மற்றும் வாகனஓட்டிகள் எளிதாக சென்று வந்தனர். விபத்துகளும் குறைந்தது. இந்நிலையில்  தேர்தலையொட்டி அனைத்து துறை அதிகாரிகளும் இடமாற்றம் செய்யப்பட்டனர். இதில் தாம்பரம் போக்குவரத்து ஆய்வாளராக இருந்த ஜெயவேல் நுங்கம்பாக்கத்திற்கு  மாற்றப்பட்டார்.அவருக்கு பதில் ஆனந்தஜோதி என்பவர் புதிதாக தாம்பரம் போக்குவரத்து ஆய்வாளராக நியமிக்கப்பட்டார். இவர், பெருங்களத்தூர் பஸ் நிலையம் அருகே உள்ள மென்பொருள்  நிறுவனத்தின் வசதிக்காக அந்த நிறுவனத்தின் நுழைவாயில் எதிரில் புதிதாக ஒரு சிக்னலை திறக்க முயற்சி மேற்கொண்டு வருகிறார். மேலும், இதுதொடர்பாக மேலிடத்தில் பேசி அனுமதி பெற்றதாகவும், சம்மந்தப்பட்ட நிறுவனத்திடம் ஆய்வாளர் ஆனந்தஜோதிக்கு கொடுக்க வேண்டியதை கொடுத்துவிட்டதாகவும்  கூறப்படுகிறது. தேர்தல் பணி முடிந்து மீண்டும் இடமாற்றம் செய்யப்படுவதற்குள் தனியார் நிறுவனத்தின் நுழைவாயில் எதிரில் கனரக வாகனங்கள் செல்லும் அளவிற்கு சிக்னல் அமைத்து  கொடுப்பதாக அவர்கள் உத்தரவாதம் கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘‘பெருங்களத்தூர் ஜிஎஸ்டி சாலையில் ஏற்கனவே போக்குவரத்து மிகுந்து காணப்படும் நிலையில், தற்போது, தனியார் நிறுவன  வாகனங்கள் சாலையை கடப்பதற்கு வசதியாக சிக்னல் அமைக்கப்பட்டால், போக்குவரத்து பாதிக்கப்பட்டு கடும் நெரிசல் ஏற்படும்.  குறிப்பாக, பண்டிகை நாட்கள் முதல் சாதாரண நாட்கள் வரை என தினமும் மோசமான சூழ்நிலை ஏற்பட்டு விபத்துகளும் அதிகரிக்கும். எனவே, போக்குவரத்து நெரிசலை  கருத்தில் கொண்டு, சம்மந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகள் இதுகுறித்து ஆய்வு செய்து, மேற்கண்ட பகுதியில் சிக்னல் அமைப்பதை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க  வேண்டும். இல்லையெனில் பெரிய அளவில் போராட்டங்களை நடத்துவோம்,’’ என்றனர்.

அடாவடி வசூல் வேட்டை
ஆய்வாளர் ஆனந்தஜோதி மீது ஏற்கனவே பணியில்  மெத்தனம், வசூல்வேட்டை உள்ளிட்ட ஏகப்பட்ட புகார்கள் உள்ளன. பெருங்களத்தூரில் இருந்து  குரோம்பேட்டை வரை  அவரது கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் என்பதால், மேற்கண்ட பகுதிகளில் ஷேர் ஆட்டோக்கள், சரக்கு வாகனங்கள் என வசூல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்.  பெருங்களத்தூரில் இருந்து  குரோம்பேட்டை வரை ஜிஎஸ்டி சாலையில் ஆம்னி பேருந்துகள், ஷேர்  ஆட்டோக்கள் என எதுவாக இருந்தாலும் கொடுக்க வேண்டியதை  கொடுத்துவிட்டு  எங்கு வேண்டுமானாலும் நிறுத்திக்கொள்ளாமல் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதனால் பெருங்களத்தூர் முதல் குரோம்பேட்டை வரை தினமும் அதிகப்படியான   போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : company ,GST road ,Perungalathur , set ,new signal , GST road, conveniently, private company,Perungalathur
× RELATED ஆவின் பால் பாக்கெட்டுகளில்...