×

பஸ் இல்லாததால் கோயம்பேட்டில் 10 மணிநேரம் சிக்கிய 10 ஆயிரம் பேர் பஸ் கேட்டு தர்ணா நடத்தியவர்கள் மீது2 முறை லத்திசார்ஜ் நடத்திய அவலம்

* நள்ளிரவில் போலீசார் கோரதாண்டவம், பயணிகள் கை, கால் உடைப்பு
* கர்ப்பிணிகள், குழந்தைகள் நிலா வெளிச்சத்தில் தூங்கிய அவலம், பலர் வாக்குபதிவை தவறவிட்டனர்

சென்னை,: கோயம்பேடு பஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் மாலை 7 மணி முதல் காலை 5 மணிவரை பஸ் கிடைக்காமல் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பத்து மணிநேரம் காத்திருந்தனர். இதில் கர்ப்பிணிகள், குழந்தைகள், இளைஞர்கள் அவதிப்பட்டனர். இதனால் தர்ணாவில் ஈடுபட்டவர்களை போலீசார் ஈவு இரக்கமின்றி 2 முறை லத்திசார்ஜ் நடத்தி கலைத்தனர். இதில் பலரின் கை, கால்கள் உடைந்தது. பலர் உரிய நேரத்தில் ஊருக்கு சென்று வாக்களிக்க முடியாத நிலை ஏற்பட்டது.
 
தமிழகத்தில் நேற்று நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது இதற்காக மாநிலம் முழுவதும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. மேலும் வெள்ளிக்கிழமை புனித வெள்ளி என தொடர்ச்சியாக 5 நாட்கள் விடுமுறை என்பதால் சொந்த ஊர்களுக்கு சென்று வாக்களிக்க கடந்த 2 நாட்களாக கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் மக்கள் குவிந்தனர். பயணிகளின் வசதிக்காக அரசு போக்குவரத்து கழகம் சார்பில், கூடுதலாக 1,500 பஸ்கள் இயக்கப்பட்டன. இந்த நிலையில், முன்பதிவு செய்யாமல் வெளியூர் செல்லும் அரசு பஸ்களுக்காக நேற்று முன்தினம் இரவு ஏராளமான மக்கள் கோயம்பேடு பஸ் நிலையத்தில் குவிந்தனர். ஆனால் அவர்களுக்கு போதிய பஸ் வசதி ஏற்பாடு செய்து தரப்படவில்லை.

இதுகுறித்து பயணிகள் கேட்டபோது அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் உரிய விளக்கம் அளிக்கவில்லை. நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு வந்தவர்களுக்கு நேற்று காலை 5 மணி வரையிலும் பஸ்கள் கிடைக்கவில்லை. நேரம் செல்ல செல்ல கூட்டம் அதிகரித்துகொண்டே சென்றது. இதனால், கர்ப்பிணிகள், பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள் சோர்வடைந்தனர். சிலர், பயணத்தை ரத்து செய்துவிட்டு வீட்டுக்கு திரும்பி சென்றனர். இந்நிலையில் பஸ்சுக்கு காத்திருந்த அனைத்து பயணிகளும் திடீரென மறியலில் ஈடுபட்டனர். ‘உரிய பஸ் வசதி செய்து தர வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர். இதனால், அங்கு பரபரப்பு பதற்றம் ஏற்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்ததும் போலீசார் விரைந்து வந்தனர். மறியல் செய்த மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால், போலீசாரின் பதிலில் திருப்தியடையாத மக்கள் வாக்குவாதம் செய்தனர், இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. போலீசார் திடீரென லத்திசார்ஜ் நடத்தினர். இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பாவி பயணிகள் அங்கிருந்து சிதறி ஓடினர். இந்த லத்திசார்ஜில் 10க்கும் அதிகமான பயணிகள் காயம் அடைந்தனர். பலரின் கை, கால்கள் உடைந்தது. ஆயிரம் பேருக்கும் மேல் 10 பத்துமணிநேரம் வரை காத்திருந்தனர். அப்படியும் பஸ்கள் வராததால் பொதுமக்கள் மீண்டும் தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் ஆவேசம் அடைந்த போலீசார் மீண்டும் லத்திசார்ஜ் நடத்தினர். அப்படியும் பஸ்கள் வரவில்லை. இதனால் பலர் 10 மணிநேரத்துக்கும் மேலாக காத்திருந்தனர்.

ஆம்னி பஸ்களும் கிடைக்கவில்லை. சிறப்பு ரயில்களும் ஏற்பாடு செய்யாத காரணத்தால் பயணிகள் குழந்தைகள், முதியோருடன் அவதிப்பட்டனர்.
இதுகுறித்து வெளியூர் செல்ல காத்திருந்த பயணிகள் கூறுகையில், ‘’நாங்கள் அனைவரும் ஓட்டு போடுவதற்காக வெளியூர் செல்ல நேற்று முன்தினம் இரவு 7 மணியில் இருந்து காத்திருக்கிறோம். நேற்று நள்ளிரவு 2 மணியாகியும் பஸ்களை இயக்குவதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்யவில்லை. காலை 5 மணியாகியும் பஸ்கள் வரவில்லை. இதுகுறித்து அதிகாரிகள் உரிய விளக்கமும் அளிக்கவில்லை. அதிகாரிகளின் மெத்தனப் போக்கை கண்டித்து மறியலில் ஈடுபட்டால் போலீசார் தடியடி நடத்துகின்றனர்’’ என்றனர்.

இதன்பிறகு காலை நிலைமை ஓரளவுக்கு சகஜமானது. பொதுமக்கள் பலர் இரவு பஸ் கிடைக்காததால் வீட்டுக்கு சென்றுவிட்டு நேற்று காலை வந்து பஸ் பிடித்து ஊர்களுக்கு சென்றனர். பலர் பஸ் கிடைக்காமல் பஸ் டாப் மீது ஏறி ஆபத்தான பயணம் மேற்கொண்டனர். மேலும் பலர் பஸ் கிடைக்காமல் வீடு திரும்பினர். சென்னை மட்டுமல்லாது, தாம்பரம், வண்டலூர், கோவை, சேலம், ஓசூர் உள்ளிட்ட மாநிலம் முழுவதுமே இந்த நிலை நீடித்தது. நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில், தேர்தல் ஆணையம் சார்பில் பல முன்னேற்பாட்டில் குறைபாடுகள் இருந்தது. இதில், கோயம்பேடு சம்பவம் ஒரு கரும்புள்ளியாக அமைந்துவிட்டது.

சென்னையில் இருந்து 7 லட்சம் பேர் படையெடுப்பு

தமிழகத்தில் 38 மக்களவை மற்றும் 18 சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் நேற்று நடந்தது. வாக்களிப்பதற்கு ஏற்றார் ேபால் தொடர்ச்சியாக
5 நாட்கள் விடுமுறை வேறு வந்தது. இதனால், சென்னையில் வசிக்கும் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை, விருதுநகர் உள்ளிட்ட தென்மாவட்டங்களை சேர்ந்தவர்கள் மற்றும் கோவை, சேலம், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்தவர்கள் தங்களுடைய சொந்த பந்தங்களுடன் சொந்த ஊர்களுக்கு கடந்த செவ்வாய் கிழமை இரவே புறப்பட்டு செல்ல தொடங்கினர்.

செவ்வாய்க்கிழமை ஊர்களுக்கு செல்லாதவர்கள் புதன் கிழமை சொந்த ஊர்களுக்கு படையெடுத்தனர். அவர்கள் கடைசி நேரத்தில் கிடைத்த பஸ், ரயில்களில் அடித்து, பிடித்து ஏறி ஊர்களுக்கு சென்ற காட்சியை காண முடிந்தது. பஸ், ரயில்களில் இடம் கிடைக்காதவர்கள் கிடைத்த இடங்களுக்கு பஸ்களில் சென்று மாறி, மாறி தங்களுடைய ஊர்களுக்கு சென்றனர். நேற்று காலை வரை அவர்கள் சொந்த ஊர்களுக்கு சென்ற காட்சியை காணமுடிந்தது.மொத்தத்தில் சென்னையில் இருந்து சுமார் 7 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றதாக கூறப்படுகிறது.

ஏப்ரல் 21 வரை சிறப்பு பஸ்கள்

தமிழ்நாடு விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:பொதுத்தேர்தல், சித்ரா பவுர்ணமி, மதுரை சித்திரை திருவிழா, புனித வெள்ளி ஆகிய பண்டிகைகளை முன்னிட்டு ஏப்ரல் 17 முதல் 21ம் தேதி வரை 5 நாட்கள் தொடர் விடுமுறை ஆகும். இதையொட்டி சென்னை கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் இருந்து வெளியூர்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டது. திட்டமிட்டபடி ஏப். 16ம் தேதி 2,950 பஸ்கள், கூடுதலாக 850 பஸ்கள் இயக்கப்பட்டன.

அதேபோல் ஏப். 17ம் தேதி  2,950 பஸ்கள் தவிர கூடுதலாக 1,510 பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டு விடியற்காலை வரை பஸ்கள் இயக்கப்பட்டன. இதனால் தேர்தலுக்கு முந்தைய நாளில் 2.40 லட்சம் பயணிகள் அரசு பஸ்களில் பயணம் செய்துள்ளனர். சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு ஏப்ரல் 18ம் தேதி(நேற்று) மதியம் 2 மணி முதல் இன்று மாலை வரை திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. ஏப்.19ம் தேதியில் இருந்து 21ம் தேதி வரை வெளியூர் சென்றுள்ள பயணிகள் சென்னை, மதுரை, கோவை திரும்ப சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Lathikaar ,dancers ,Koyambedu , Bus, Koyambedu, 10 hours, chickens, 10 thousand people, darna, lathicharge, hail
× RELATED நடனமாடியபடி கிரிவலம் சென்று வழிபாடு சென்னை நாட்டிய குழுவினர்