×

வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு திட்டமிட்ட சதியா? முத்தரசன் சந்தேகம்

திருத்துறைப்பூண்டி: வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஏற்பட்ட கோளாறு திட்டமிட்ட சதியா என இந்திய கம்யூ. மாநில செயலாளர் முத்தரசன் சந்தேகம் எழுப்பி உள்ளார். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வேளூர் உதவி பெறும் தொடக்கப் பள்ளி வாக்குச்சாவடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வாக்களித்த பின் நிருபர்களிடம் தெரிவித்ததாவது: இந்த தேர்தல் ஆட்சி மாற்றத்திற்கான, அரசியல் மாற்றத்திற்கான தேர்தல். மதசார்பற்ற கூட்டணியின் அனைத்து தொகுதி வேட்பாளர்களும் வெற்றி பெறுவார்கள். வாக்குசாவடிகளில் இருக்கிற தோழர்களின் உற்சாகமும், வாக்கு சாவடிகளுக்கு பொதுமக்கள் உற்சாகமாக வந்து வாக்களிப்பதும் நம்பிக்கையூட்டுவதாக உள்ளது. முதல் வாக்காக எனது வாக்கை பதிவு செய்து இருக்கிறேன் நிச்சயமாக எங்களது அணி மகத்தான வெற்றி பெறும்.

காலை 7 மணிக்கு வாக்குபதிவு தொடங்கி ஒன்றே முக்கால் மணி நேரம் கடந்தும் தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் வாக்கு பதிவு இயந்திரங்கள் குளறுபடி காரணமாக வாக்கு பதிவு பரவலாக நடைபெறவில்லை. பல்வேறு பகுதிகளிலும் வாக்கு பதிவு இயந்திரங்கள் கோளாறாக இருப்பது கவலையளிக்கிறது. அது இயல்பாக நடைபெற்ற கோளாறா அல்லது திட்டமிட்டு கோளாறு செய்து வைத்து விட்டார்களா? என சந்தேகமாக உள்ளது. இந்த தேர்தலில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு ஆதரவாக அலை வீசிக் கொண்டிருக்கிற நிலையில் வாக்கு பதிவு இயந்திரங்களில் கோளாறு மிகுந்த கவலையளிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Polling, engine, disorder, conspiracy, muthrasan, suspect
× RELATED அண்ணாமலை ஒரு புள்ளிவிவர ராஜா: அதிமுக...