×

விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளதா? நோட்டா குறித்து தேர்தல் ஆணையம் அறிக்கை தாக்கல்: ஐகோர்ட்டில் வழக்கு முடித்துவைப்பு

சென்னை: தமிழகம் முழுவதும் நோட்டா குறித்த விழிப்புணர்வை  முழுமையாக ஏற்படுத்தியிருப்பதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் காஞ்சிபுரத்தை சேர்ந்த நிர்மல்குமார் என்பவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: தேர்தலில் யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்பதற்காக நோட்டா  கொண்டு வரப்பட்டது. இந்த நோட்டா குறித்து முழுமையாக விழிப்புணர்வை தேர்தல் ஆணையம் ஏற்படுத்தவில்லை. இதனால் வாக்காளர்கள் வாக்களிக்க விரும்பவில்லை என்றாலும் ஏதேனும் ஒரு வேட்பாளருக்கு தங்களுடைய வாக்குகளை செலுத்த மறைமுகமாக கட்டாயப்படுத்தப்படுகிறார்கள்.

இது சுதந்திரமாக மக்கள் வாக்களிக்க வேண்டும் என்ற தேர்தல் விதிகளுக்கு எதிராக அமைந்து விடுகிறது. இது குறித்து தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் கிடைத்த தகவலில், முதல் தலைமுறை வாக்காளர்களுக்கு நோட்டா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த விளம்பர தூதர் யாரையும் நியமிக்கவில்லை என்றும்,  தேர்தல் ஆணைய இணையதளத்தில் கூட நோட்டா குறித்த விவரங்கள் மாநில மொழிகளில் இடம்பெறவில்லை வாக்காளர் உதவுமைய எண்கள், மொபைல் செயலிகளிலும் நோட்டா செயல்பாடுகள் குறித்து விவரங்கள் இல்லை என்று தெரியவந்தது.
இவ்வாறு நோட்டா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த தேர்தல் ஆணையம் தவறிவிட்டது. இதன் காரணமாக தான் ஊழல்வாதிகள், குற்றவாளிகள் தேர்தலில் வெற்றி பெற்று வருகின்றனர்.

எனவே நோட்டா குறித்து  விழிப்புணர்வை அதிகமாக விளம்பரப்படுத்துமாறு தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணிய பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணைய தரப்பில் ஆஜரான வக்கீல் நிரஞ்சன், நோட்டா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்த விவரங்களை தாக்கல் செய்தனர். அந்த அறிக்கையில் நடைப்பெற உள்ள மக்களவை தேர்தலில் நோட்டா குறித்து பேருந்து நிலையங்கள், திரையரங்கம் ஆகிய இடங்களில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.

பேருந்துகள், மார்கெட், உணவகங்களிலும் நோட்டா குறித்த துண்டுப் பிரசுரங்கள் வினியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரை மக்கள் அதிகம் கூடும் மெரினா கடற்கரை, கோயம்பேடு, பெசன்ட்நகர் கடற்கரை ஆகிய இடங்களில் பெரிய அளவிலான எல்இடி திரையில் விழிப்புணர்வு விளம்பரங்கள்  காட்டப்படுகின்றன. தமிழகம் முழுவதும் 32 மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், அனைத்து தாலுகா அலுவலகங்கள் மூலம் மொபைல் வேன் மூலம் விளம்பரப்படுத்தப்படுகிறது.

தெற்கு ரயில்வே, மெட்ரோ மூலமும் விளம்பரப்படுத்துவதோடு, போட்டிகள், கலைநிகழ்ச்சிகள், மற்றும் மாரத்தான் மூலம் வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர். முதல் தலைமுறை வாக்காளர்களுக்கு நோட்டா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த விளம்பர தூதர் யாரையும் நியமிக்கவில்லை என்றும்,  தேர்தல் ஆணைய இணையதளத்தில் கூட நோட்டா குறித்த விவரங்கள் மாநில மொழிகளில் இடம்பெறவில்லை வாக்காளர் உதவுமைய எண்கள், மொபைல் செயலிகளிலும் நோட்டா செயல்பாடுகள் குறித்து விவரங்கள் இல்லை.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Noda ,Election Commission ,High Court , Awareness, nota, election commission, report
× RELATED திமுக தேர்தல் விளம்பரங்களுக்கு...