×

தேர்தல் என்றாலே திருவிழா: அது அந்தக்காலம்

தேர்தல் வந்தாலே நமக்கு தனி உற்சாகம் வந்து விடும்.  அதிலும் வாக்குப்பதிவு தினம் திருவிழா போல் களைக்கட்டும். காரணம் என்ன தெரியுமா? சுதந்திரத்திற்கு முன்பு எல்லோருக்கும் ஓட்டுரிமை கிடையாது. விடுதலைக்கு  பிறகு எல்லாேருக்கும் கிடைத்த அந்த உரிமையால் வந்த உற்சாகம்தான் அது. அதுதான் தலைமுறை தலைமுறையாக தொடர்கிறது. நாம்தான் நாட்டை வழிநடத்தப்போகிறவை தேர்ந்தெடுக்க போகிறோம் என்ற மனநிறைவு  தரும் மகிழ்ச்சி. அதனால்தான்  அந்தக் காலத்தில்  ஊரே உற்சாகத்தில் இருக்கும். குடும்பம், குடும்பமாக சென்று வாக்களிக்க செல்வார்கள். ஆம் ஓட்டு இல்லாத வாண்டுகள் கூட அப்பா, அம்மாவுடன் ஒட்டிக் கொள்ளும்.அதனால் வாக்காளர்கள்  மட்டுமல்ல, அவர்கள் வீட்டு பிள்ளைகளையும் சீவி சிங்காரித்து அழைத்துச் செல்வார்கள்.
வாக்குச்சாவடிக்குள் பிள்ளைகளை அனுமதிக்க போலீஸ்காரர்கள் கெடுபிடிகள் காட்டுவார்கள். ‘பிள்ளை ஓட்டு போடறத பாக்கணுமா... கொஞ்சம் விடுங்களேன்’ என்று பெற்றோர்கள் கேட்பார்கள். நல்ல போலீஸ்காரர்கள் உடனே  தலையாட்டி விடுவார்கள். கெடுபிடி ஆட்கள் ‘பிள்ளைகள் அழுது அடம்  பிடிப்பதை பார்த்து மனமிரங்குவார்கள்.

ஆக எப்படியானாலும் பிள்ளைகள் அப்பா, அம்மா கையைப் பிடித்துக் கொண்டு சாவடிக்குள்  சென்றுவிடுவார்கள்.உள்ளே போனதும் பிள்ளைகளும் விரலில் மை வைக்கச் சொல்லி கேட்பார்கள். பல பெற்றோர்கள் வாக்குச்சீட்டில் முத்திரை போடும் போது மட்டும் பிள்ளைகளை ஓரம் கட்டி விடுவார்கள். காரணம் ‘யாருக்கு  ஓட்டுப் போட்டோம்’ என்பதை ஊரெல்லாம் சொல்லிவிடக் கூடாது’ என்ற முன்னச்சரிக்கை உணர்வுதான்.அப்படியும் வாக்குப் பெட்டியில் ஓட்டை போடும் உரிமையை பெற்றோர்களிடம் இருந்து பிள்ளைகள் பறித்து விடுவார்கள்.  அதுவும் பெற்றோர்களுக்கு அலாதி சுகம்தான். இப்படி பெற்றோர்களுக்கு மட்டுமல்ல வயதான  பெற்றோர்களை அரவணைத்து, தூக்கிச் சென்று ஜனநாயக கடமையை ஆற்ற வைத்த பிள்ளைகளுக்கும் உற்சாகம் ஊற்றெடுக்கும்.ஓட்டுப் போட்டுவிட்டு வெளியில் வந்தால் நீண்ட நாட்களுக்கு பிறகு சந்திக்கும் உறவு, நட்புகளுடன் கலகலப்பு. வீடு திரும்ப நேரமானலும் ஓட்டுப் போட்ட உற்சாகம் அந்த ஒருநாள் மட்டுமல்ல அடுத்த வரும் நாட்களுக்கும் நீளும்.   அந்தகால உற்சாகம் உங்களுக்கும் கிடைக்க இன்று மறக்காமல் வாக்களியுங்கள்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : election , election , festival, that's it
× RELATED நகர்புறங்களில் வசிக்கும் மக்கள்...