×

3 நாள் விடுமுறை அறிவிப்பு எதிரொலி புதுச்சேரி மதுக்கடைகளில் அலைமோதிய கூட்டம்

புதுச்சேரி: நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு 3 நாள் மதுக்கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் நேற்றிரவு புதுச்சேரி உள்ள மதுக்கடைகளில் கூட்டம் அலைமோதியது. இதனிடையே மாநில எல்லைகளிலும் கெடுபிடியாக சோதனை நடைபெற்று வருகின்றன. புதுவையில் நாடாளுமன்ற தேர்தல், தட்டாஞ்சாவடி இடைத் தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடாவை தடுக்க தேர்தல் பறக்கும் படை தீவிர ரோந்துப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இதனிடையே நேற்று புதுச்சேரி கருவடிக்குப்பத்தில் உள்ள ஒரு தனியார் மதுக்கடையில் அரசியல் பிரசாரத்தில் ஈடுபடுவோருக்கும், வாக்காளர்களுக்கும் டோக்கன்கள் வழங்கப்பட்டு சரக்கு சப்ளை செய்யப்படுவதாக தேர்தல் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து தேர்தல் பறக்கும் படையினர், கலால்துறையினர் அங்கு விரைந்து சென்று சம்பந்தப்பட்ட மதுக்கடையை சோதனையிட்டனர். அப்போது அங்கு டோக்கன்களுக்கு மதுபானங்கள் விநியோகம் செய்யப்பட்டது உறுதியானது. இதையடுத்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், கலால்துறையினர் அந்த மதுக்கடையை மூடி அதிரடியாக சீல் வைத்தனர். இதுதொடர்பாக அதன் உரிமையாளரிடம் கலால்துறை தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது. இதனிடையே புதுச்சேரி புதிய பஸ்நிலையம், காட்டேரிக்குப்பம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ரோந்துப் பணிகளில் ஈடுபட்டிருந்த போலீசார், தமிழக பகுதிகளுக்கு மதுபாட்டில்களை கடத்த முயன்ற 2 பேரை கைது செய்துள்ளனர்.

அவர்களிடமிருந்து கடத்தல் மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் அவை அனைத்தும் கலால்துறை வசம் ஒப்படைக்கப்பட்டன. பிரசாரத்தின் கடைசி நாளான இன்றும் புதுச்சேரி முழுவதும் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மாநில எல்லையான கனகசெட்டிகுளம், கோரிமேடு, மதகடிப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் கெடுபிடியாக வாகன சோதனை நடைபெற்று வருகின்றன. தேர்தலை முன்னிட்டு இன்று முதல் தொடர்ந்து 3 நாட்கள் மதுக்கடைகளை மூடுவதற்கு கலால் துறை உத்தரவிட்டிருந்த நிலையில் நேற்று நள்ளிரவு வரை அனைத்து மதுக்கடைகளில் கூட்டம் அலைமோதியது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : alumni meeting , Puducherry, liquor shop, parliamentary elections, payments,
× RELATED வேதாரண்யம் அரசு மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு