×
Saravana Stores

இடைத்தேர்தலுக்கு மட்டும் முக்கியத்துவம் எம்பி தேர்தலை தொங்கலில் விட்டதால் அதிமுக மீது பாஜ தலைமை அதிருப்தி? மோடி ‘விசிட்’டுக்கு பிறகு கூட்டணி தலைவர்கள் ‘கிலி’

சென்னை: அதிமுக தலைமை சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு மட்டும் முக்கியத்துவம் செலுத்தி வருகிறது. எம்பி தேர்தலை அக்கட்சி தொங்கலில் விட்டுள்ளது. இதனால் பாஜ தலைமை அதிருப்தியடைந்து இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், 18 சட்டசபை தொகுதிகளுக்கும் வரும் ஏப்ரல் 18ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதையொட்டி பிரதான கட்சியாக இருக்கும் திமுகவும், அதிமுகவும் தனித்தனியான கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறது. இதில், அதிமுகவானது தேமுதிக, பாஜ, பாமக உள்ளிட்ட கட்சிகளுடன் சேர்ந்து கூட்டணி அமைத்துள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் உள்ளன.

இந்நிலையில் அதிமுக தலைமை நாடாளுமன்ற தேர்தலை விட, சட்டமன்ற தேர்தலுக்கு மட்டும் முக்கியத்துவம் காட்டுவதாக குற்றச்சாட்டு உள்ளது. இதற்கு, சட்டமன்ற தேர்தலில் பாதி அளவிற்கு வெற்றி பெற்றால் மட்டுமே ஆட்சியை தொடர முடியும் என்பதாகும். இல்லாவிட்டால் ஆட்சி கவிழ்ந்துவிடும். இதனால், சம்மந்தப்பட்ட தேர்தலுக்கு மட்டும் அக்கட்சியினர் தீவிரமாக வேலைசெய்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால் இடைத்தேர்தலில் எப்படியும் அதிமுக தோற்கடிக்கச்செய்து, அதன்மூலம் வெற்றிக்கனியை ருசிக்க வேண்டும் என்பதில் திமுகவும் உறுதியாக இருக்கிறது.

இதற்கான பணிகளை அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலினும் முடுக்கி விட்டுள்ளார். இதனால், இடைத்தேர்தல் களம் சூடுபிடித்து காணப்படுகிறது. மற்றொருபுறம் பல்வேறு தரப்பினரும் நடத்தும் கருத்து கணிப்பு முடிவுகள் அதிமுக கூட்டணிக்கு எதிராகவும், திமுக கூட்டணிக்கு சாதகமாகவும் இருக்கிறது. இந்நிலையில் அதிமுகவின் இடைத்தேர்தலுக்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்கும் முடிவு, அக்கட்சியில் கூட்டணி வைத்திருக்கும் தேமுதிக, பாமக, பாஜ உள்ளிட்ட கட்சிகளை அதிருப்தியடைச்செய்துள்ளது.

மேலும் இந்த தகவல் பாஜவின் தலைமையைச்சென்றடைந்துள்ளது. அவர்களும் அதிமுகவின் முடிவைக்கண்டு அதிர்ச்சிக்குள்ளாகியிருப்பதாக நீண்ட நாட்களாக பேசப்பட்டு வருகிறது. மேலும் நாடாளுமன்ற தேர்தலிலும் கவனம் செலுத்துங்கள் என்று கட்டளையிடப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் ஏப்ரல்-9ம் தேதி கோவையில் பிரதமர் மோடி பங்கேற்ற கூட்டம் நடந்தது. இதில் பாஜவினர் கலந்து கொண்ட நிலையில் அதிமுக, தேமுதிக, பாமகவை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் சிலர் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது.

ஏற்கனவே இடைத்தேர்தலுக்கு மட்டும் முக்கியத்துவம் காட்டுவதால் அதிருப்தியில் இருக்கும் பாஜ தலைமைக்கு, பிரதமர் பங்கேற்ற கூட்டத்திலையே முக்கிய பிரமுகர்கள் ஆர்வமாக பங்கேற்காதது மேலும் கோபத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. பாஜ தலைமை கோபமடைந்திருப்பது அதிமுக தலைவர்கள் மட்டும் அல்லாது பாமக, தேமுதிக தலைவர்களின் காதை எட்டியிருக்கிறது. இதனால், அவர்கள் கலக்கமடைந்திருப்பதாக கூறப்படுகிறது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : election ,BJP ,AIADMK ,visit ,Modi ,leaders ,MB Alliance , Elections, Importance, MB Election, Pongal, AIADMK, Bhaj, Disappointment
× RELATED அரியானா சட்டப்பேரவை தேர்தல் முடிவு...