சென்னை: பெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு நேற்று காலை காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம், பெரும்புதூர் தெற்கு ஒன்றியம் பகுதியில் வீதி வீதியாக சென்று பொதுமக்களிடம் உதயசூரியன் சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார்.
காஞ்சி வடக்கு மாவட்ட செயலாளர் தா.மோ.அன்பரசன் எம்எல்ஏ, மாவட்ட அவை தலைவர் துரைசாமி, ஒன்றிய கழக செயலாளர்கள் கோபால், கருணாநிதி மற்றும் தோழமை கட்சி நிர்வாகிகள் ஏராளமானவர்கள் உடன் சென்று பிரசாரம் செய்தனர்.
அப்போது, பொதுமக்கள் மத்தியில் டி.ஆர்.பாலு பேசியதாவது: மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி மத்தியில் ஆட்சிக்கு வந்தால் மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியம் வழங்க ஏற்பாடு செய்யப்படும். ஜிஎஸ்டி வரி 28 சதவீதம் வரை உள்ளதால் ஏற்படும் கடும் பாதிப்பை போக்கிட வரி விகிதம் குறைக்கப்படும். மின்சார வயர்கள் பூமிக்கு அடியில் செல்லும் வகையில் மாற்றி அமைக்கப்படும். பெரும்புதூரில் புதிய தொழிற்சாலைகள் அமைக்கப்படும்.
பெரும்புதூரில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும். பிள்ளைப்பக்கத்தில் ₹600 கோடியில் உள்நாட்டு துறைமுகம் அமைக்கப்படும். பெரும்புதூரில் ராஜிவ்காந்தி இளைஞர் வளர்ச்சி மத்திய பல்கலைக்கழகம் மற்றும் ராஜிவ்காந்தி நினைவு அருங்கட்சியகம் அமைக்கப்படும். சுங்குவார் சத்திரத்தில் கழிப்பறை வசதியுடன் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும்.தலைவர் கலைஞர், முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் அவர்களால் துவக்கி வைக்கப்பட்ட மதுரவாயல் - சென்னை துறைமுகம் பறக்கும் சாலை திட்ட பணிகள் விரைந்து முடிக்கப்படும். அனைத்து பகுதி மக்களுக்கும் குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படும். மதுரவாயல் பிள்ளைப்பாக்கம் இடையே 8 வழிப்பாதை அமைக்கப்படும்.இதுபோன்று பொதுமக்களுக்கு பயன்படக்கூடிய திட்டங்களை செயல்படுத்த வருகின்ற 18ம் தேதி பொதுமக்கள் அனைவரும் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து எங்களை அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி