×

அரிமளம், திருமயம் பகுதியில் நாட்டு மரங்களை கருக வைத்து நிலத்தடி நீரை உறிஞ்சி வாழும் தைல மரங்கள்

திருமயம்: அரிமளம், திருமயம் பகுதியில் உள்ள நிலத்தடி நீரை உறிஞ்சி வாழும் தைல மரங்களை அகற்ற எந்த ஒரு அரசியல் கட்சிகளும் வாக்குறுதி அளிக்காதது வேதனை அளிப்பதாக அப்பகுதி விவசாயிகள்  தெரிவித்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம், திருமயம் பகுதியை உள்ளடக்கிய  தைலமரக்காடு மாவட்டத்தின் மிகப் பெரிய சமவெளி காடு ஆகும். இது சுமார் 4.5 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட நிலையில் காட்டின் எல்லைப்பகுதியை சுற்றி 80க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. 70 ஆண்டுகளுக்கு முன்னர் அரிமளம், திருமயம் பகுதி காடுகள் அரசமரம், ஆலமரம், வீரமரம், பாலமரம், இளந்தைமரம் உள்ளிட்ட பழம் தரும் மரங்களால் சூழப்பட்டு இருந்தது. இதனால் குரங்கு, நரி, மான், காட்டுப்பன்றி, முயல் உள்ளிட்ட காட்டு விலங்குகள் அதிகளவில் வாழ்ந்து வந்தது. இதனிடையே காட்டுப்பகுதியில் மழை பெய்து பெருக்கெடுத்து வரும் மழை நீரை முறையான வாய்க்கால் அமைத்து கண்மாய், குளம், ஊரணிகளில் சேமித்து அப்பகுதி கிராம மக்கள் குடிக்க, விவசாயத்திற்கு நீரை பயன்படுத்தி வந்தனர்.

காடுகளில் மேய்ச்சல் நிலங்கள் அதிகம் இருந்ததால் அப்பகுதி விவசாயிகள் கால்நடைகள் வளர்ப்பதிலும் அதிக ஆர்வம் காட்டி வந்தனர்.  காலப்போக்கில் அரசு வனப்பகுதியை கைப்பற்றி பழம் தரும் மரங்களை சிறிது சிறிதாக அழிக்க தொடங்கியது. அப்போது அப்பகுதி விவசாயிகள் காடுகளை அழிப்பதால் மழை வளம் குறைந்து விவசாயம் பாதிக்கப்படுவதோடு நிலத்தடி நீர்மட்டம் குறைந்து கால்நடைகள், வன விலங்குகள் தண்ணீர், உணவு தட்டுப்பாட்டால் அழியும் நிலை ஏற்படும் என எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் அரசு கால்நடைகள் மேய்ச்சலுக்கு என ஒவ்வொரு கிராமத்திற்கும் செடி, கொடிகள் வளராத பயன்படாத நிலப்பகுதியை கால்நடை மேய்ச்சல் நிலங்களாக ஒதுக்கிவிட்டு காட்டை முற்றிலும் அழித்து தைல மரங்களை பயிரிட்டுள்ளது. தைலமரம் வளர பெரும்பாலும் நிலத்தடி நீரை எடுத்துக்கொள்வதால் இதற்கு தனிப்பட்ட கவனம் ஏதும் தேவையில்லை. அத்துடன் 5 ஆண்டுக்கு ஒரு முறை பயன்தரக்கூடியது.

இதனால் அரசு பழம் தரும் மரங்கள் நடுவதை தவிர்த்து தைல மரங்களை காடு முழுவதும் நடவு செய்துள்ளது. இதனால் வன விலங்குகளுக்கு போதுமான நீர், உணவு இல்லாமல் கிராமங்களுக்குள் வர தொடங்கியது. அப்போது பெரும்பாலான மான்கள் நாய்களுக்கு இறையாகி அழிய தொடங்கியது. மேலும் காட்டில் வாழும் குரங்குகள், மயில்கள் உணவின்றி குடியிறுப்பு பகுதிகள், விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை அழித்து வருகிறது. இந்நிலையில் காட்டில் உள்ள நீர் வெளியேறாமல் இருக்க  அதிகாரிகள் இயந்திரம் கொண்டு காட்டுப்பகுதியில் பள்ளம் வெட்டி மண்ணாலான தடுப்பு அணைகள் ஏற்படுத்தியுள்ளனர்.

இதனால் மழை நீர் காட்டை விட்டு வெளியேறுவது தடுக்கப்பட்டு காட்டில் பெய்யும் மழை நீரை நம்பியே இருந்த அரிமளம், திருமயம் பகுதி நீர் நிலைகள் நீரின்றி காய்ந்து போனது. தற்போது மழை காலம், வறட்சி காலம் என எந்த ஒரு பாகுபாடின்றி அனைத்து காலங்களிலும் அரிமளம், திருமயம் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள நீர் நிலைகள் நீரின்றி வறண்டு உள்ளது. இதனால் அப்பகுதியில் விவசாயம் பாதிக்கப்பட்டதோடு மக்கள், கால்நடைகள் குடிநீர் கிடைக்காமல் பெரும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே அரிமளம் காட்டில் இருந்து மழை நீர் வெளியேறும் நீர்வரத்து வாரிகளை அழித்து கட்டப்பட்டுள்ள அனைத்து தடுப்பணைகளையும் உடனே அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Arumalam ,village ,Tirumala , Arimalam, tirumayam, released trees
× RELATED காஞ்சிபுரம் அருகே கிழம்பியில் உள்ள...