×

தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகளுக்கு 1407 கோடி நன்கொடை : ஆர்டிஐ மனுதாரர் தகவல்


இந்தூர்: அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்க ரூ.1407.09 கோடிக்கு தேர்தல் பத்திரங்கள் வாங்கப்பட்டது எனவும், இவற்றில் 99.8 சதவீதம் ரூ.10 லட்சம் மற்றும் ரூ.1 கோடி மதிப்பிலான பத்திரங்கள் எனவும்  ஆர்டிஐ மனு  மூலம் தெரியவந்துள்ளது.
அரசியல் கட்சிகளுக்கு தனி நபர் மற்றும் நிறுவனங்கள் நன்கொடை அளிப்பதில் வெளிப்படைதன்மையை கொண்டு வர, வங்கியில் இருந்து பெறப்படும் தேர்தல் பத்திரம் மூலம் நன்கொடை அளிக்கும் முறையை மத்திய அரசு  கடந்தாண்டு கொண்டு வந்தது. இதன்படி ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா ரூ.1000, ரூ.10 ஆயிரம், ரூ.1 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.1 கோடி என 5 விதமான தேர்தல் பத்திரங்களை விற்றது. கடந்தாண்டு மார்ச் முதல் இந்தாண்டு ஜனவரி  24ம் தேதி வரை நன்கொடையாளர்கள் எவ்வளவு மதிப்புக்கு தேர்தல் பத்திரங்கள் வாங்கினர் என்ற விவரத்தை தெரிவிக்கும்படி மத்தியப் பிரதேசம் இந்தூரைச் சேர்ந்த சமூக சேவகர் சந்திரசேகர் கவுட் என்பவர் கேட்டிருந்தார்.

இதற்கு ஸ்டேட் வங்கி அளித்துள்ள பதிலில் கூறியிருப்பதாவது:நன்கொடையாளர்கள் ரூ.10 லட்சம் மதிப்புள்ள தேர்தல் பத்திரங்களை 1,459, ரூ.1 கோடி மதிப்புள்ள பத்திரங்கள் 1,258, ரூ.1 லட்சம் மதிப்புள்ள பத்திரங்கள் 318, ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள பத்திரங்கள் 12, ரூ.1000 மதிப்புள்ள  பத்திரங்கள் 24 ஆகியவற்றை பெற்றனர். மொத்தம் ரூ.1,407.09 கோடிக்கு நன்கொடையாளர்கள் தேர்தல் பத்திரங்களை வாங்கினர். இவற்றில் 99.8 சதவீதம் ரூ.10 லட்சம் மற்றும் ரூ.1 கோடி மதிப்பிலான பத்திரங்கள். ரூ.1,395.89  கோடி அளவிலான தேர்தல் பத்திரங்களை அரசியல் கட்சிகள் பணமாக்கி கொண்டன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. எந்தெந்த கட்சிகள் எவ்வளவு தேர்தல் பத்திரங்களை பணமாக்கின என்ற விவரத்தை ஆர்டிஐ சட்டத்தின் விதி விலக்கு பிரிவுப்படி தெரிவிக்க முடியாது என ஸ்டேட் வங்கி கூறிவிட்டது. அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் பத்திரம் மூலம் நன்கொடை அளிக்கப்படுவதை நிறுத்தி வைக்க உத்தரவிட வேண்டும் என ஜனநாயக சீர்திருத்தம் என்ற அமைப்பின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டது. இதற்கு  மறுப்பு தெரிவித்த உச்சநீதிமன்றம், தேர்தல் பத்திரங்கள் மூலம் பெற்ற நன்கொடை விவரத்தை மூடி முத்திரையிட்ட உறையில் வைத்து தேர்தல் ஆணையத்திடம் அரசியல் கட்சிகள் தெரிவிக்க வேண்டும் என கடந்த வாரம்  உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.   



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : parties ,RTI , election ,, Rs 1407 crore ,donation
× RELATED போலீசாரிடம் தகராறு: 5 பேர் கைது