×

முத்துப்பேட்டை அருகே ஜாம்புவானோடை படகு துறை பாலத்தின் பில்லர், கைப்பிடி சுவர்கள் சேதம்

* புதுப்பிக்கப்படுமா? சுற்றுலா பயணிகள், மீனவர்கள் எதிர்பார்ப்பு

முத்துப்பேட்டை : முத்துப்பேட்டை அடுத்த ஜாம்புவானோடை படகு துறையில் உள்ள பழுதடைந்த பாலம் சீரமைக்கப்பட வேண்டும் என சுற்றுலா பயணிகள், மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். முத்துப்பேட்டை அடுத்த ஜாம்புவானோடை படகு துறையில் மீனவர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வசதிக்காக கரையிலிருந்து ஆற்றுக்குள் சுமார் 50அடி நீளமுள்ள பாலம் ஒன்று உள்ளது.  20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த பழமையான பாலம் தற்போது முற்றிலும் பொழிவிழந்து உள்ளது.

மேலும் பாலத்தின் தாங்கு பில்லர்கள், கைப்பிடி சுவர்கள் தூண்கள் முற்றிலும் சேதமாகி பல பகுதிகள் ஒவ்வொன்றாக இடிந்து விழுந்து வருகிறது. மேலும் தரை சிலாப்பு பகுதிகளும் விரிசல் ஏற்பட்டுள்ளது. பாலத்தின் பல பகுதி முற்றிலும் சிமெண்ட் பூச்சுகள் விழுந்து கம்பி தெரிந்து எலும்புக்கூடாக காட்சி அளிக்கிறது. இதில்தான் தினந்தோறும் கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் மீனவர்களும், அதேபோல் புகழ்பெற்ற காடான அலையாத்திக்காட்டுக்கு சுற்றுலா செல்லும் பயணிகளும் படகில் ஏற பயன்படுத்தி வருகின்றனர். அப்போது பாலத்தின் பகுதிகள் ஏதும் இடிந்து விழுந்தால் மிக பெரிய பாதிப்புகள் ஏற்படும்.

அதேபோல் கைப்பிடி சுவர்கள் தூண்கள் இடிந்து விழுந்துள்ளதால் சுற்றுலா செல்லும் பயணிகளுடன் வரும் குழந்தைகள் தவறி ஆற்றுக்குள் விழுந்து உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. அதேபோல் குறிப்பாக ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகம் இருக்கும்போது இந்த பழமையான பாலம் தண்ணீர் வேகத்தில் அடித்து சென்று எந்த நேரத்திலும் இடிந்துவிழும் நிலையில் உள்ளன. இதனை சீரமைப்பு செய்து புதுப்பிக்க வேண்டும் என்று மீனவர்களும் சுற்றுலா பயணிகளும் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ஆனால் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் யாரும் கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில் சமீபத்தில்  இதன் அருகே ஒரு கோடி மதிப்பீட்டில் மீன்பிடி தளம் கட்டப்பட்டது. அப்போது கூட இந்த பொழிவிழந்த பாலத்தை சீரமைக்க அதிகாரிகள் முன்வரவில்லை. எனவே மீனவர்கள் சுற்றுலா பயணிகள் நலன்கருதி இந்த பழுதடைந்த பாலத்தை சீரமைப்பு செய்து தரவேண்டும் அல்லது இதனை அகற்றிவிட்டு புதிய பாலம் கட்டித்தரவேண்டும் என்று இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : boat bridge ,Muthupettai ,
× RELATED முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி...