×

திருப்பரங்குன்றம், சூலூர் உள்ளிட்ட 4 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

சென்னை: அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டாபிராம், சூலூர் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்தார். சூலூர் தொகுதியில் பொங்கலூர் பழனிசாமி, அரவக்குறிச்சியில் செந்தில் பாலாஜி, ஒட்டாபிராம் தொகுதியில் எம்.சி.சண்முகய்யா மற்றும் திருப்பரங்குன்றம் தொகுதி திமுக வேட்பாளராக டாக்டர் சரவணனும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் ஏப்ரல் 18ம் தேதி மக்களவை தேர்தல்

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் ஏப்ரல் 11ம் தேதி தொடங்கி மே 19ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா கடந்த மார்ச் 10ம் தேதி டெல்லியில் அறிவித்தார். அதன்படி, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2வது கட்டமாக தேர்தல் நடைபெறும் என்றும், அப்போது தமிழகத்தில் உள்ள 39 மக்களவை மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் ஒரு மக்களவை தொகுதி என 40 தொகுதிக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 18ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

ஏப்ரல் 18ம் தேதி 18 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல்

அன்றைய தினமே, தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டமன்ற தொகுதியில் 18 தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் நடைபெறும் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று தொகுதிகளில் தேர்தல் தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளதால் இடைத்தேர்தல் அறிவிக்கப்படவில்லை என்று தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்தது. இந்நிலையில், சூலூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ கனகராஜ் கடந்த மார்ச் 21ம் தேதி மாரடைப்பால் மரணம் அடைந்தார். இதையடுத்து சூலூர் தொகுதியும் காலியானதாக தமிழக அரசின் சட்டப்பேரவை செயலாளர் தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதினார்.

காலியாக உள்ள 4 சட்டமன்ற தொகுதிக்கு மே 19ம் தேதி இடைத்தேர்தல்

அதனால், தமிழகத்தில் 4 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டிய சூழல் ஏற்பட்டது.  தமிழகத்தில் காலியாக உள்ள அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், சூலூர் ஆகிய 4 தொகுதிக்கும் தற்போது நடைபெறும் தேர்தலுடன் சேர்த்தே இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்று திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன.  இந்த பரபரப்பான சூழலில், தமிழகத்தில் காலியாக உள்ள அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், சூலூர் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிக்கும் மே 19ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அதிரடியாக அறிவித்துள்ளது.மே 19ம் தேதிதான் 7வது கட்ட (இறுதிகட்ட) தேர்தல் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

இந்நிலையில் அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டாபிராம், சூலூர் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்தார்.

*அரவக்குறிச்சி தொகுதியில் திமுக வேட்பாளராக செந்தில்பாலாஜி போட்டியிடுகிறார். தினகரனின் அமமுகவில் இருந்து திமுகவில் சேர்ந்த செந்தில் பாலாஜிக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

*திருப்பரங்குன்றம் தொகுதியில் ஏற்கனவே போட்டியிட்ட திமுக வேட்பாளராக டாக்டர் சரவணன் மீண்டும் போட்டியிடுவதாக அறிவிப்பு

*ஒட்டப்பிடாரம் தொகுதி திமுக வேட்பாளராக எம்சி சண்முகையா அறிவிப்பு

*சூலூர் தொகுதி இடைத்தேர்தலுக்கான திமுக வேட்பாளராக பொங்கலூர் பழனிசாமி அறிவிப்பு

இடைத்தேர்தல் தொடர்பான முக்கிய தேதிகள்

*ஏப்ரல் 22ம் தேதி முதல் 29ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் நடைபெறுகிறது.

*ஏப்ரல் 30ம் தேதி மனுக்கள் மீது பரிசீலனை நடைபெறுகிறது..

*மே 2ம் தேதி மாலை வரை வேட்புமனுக்கள் வாபஸ் பெறலாம். அன்று மாலையே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது..

*மே மாதம் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று, மே 23ம் தேதி மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : DMK ,assembly constituencies ,Sulur , Aravakurichi, Tiruparankundram, Ottapram, Sulur, DMK, Candidates, Notification, Stalin, Senthil Balaji, MC Sunshataya
× RELATED 78.16 சதவீதம் வாக்குபதிவு