×

திராவிட இயக்கத்தின் கொள்கையை பிரதிபலிக்கிறது காங்கிரசின் தேர்தல் அறிக்கை சூப்பர் ஹீரோ:மு.க.ஸ்டாலின்

சேலம்: திராவிட இயக்கத்தின் ெகாள்கையை பிரதிபலிக்கும் காங்கிரசின் தேர்தல் அறிக்கை சூப்பர் ஹீரோ என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார். சேலம் சீலிநாய்க்கன்பட்டியில் நேற்று நடந்த மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: பிரசாரத்திற்காக வந்துள்ள ராகுல்காந்தியை இளம்தலைவர் என்று அழைப்பதை விட, பிரதமர் ராகுல்காந்தி என அழைப்பதே பொருத்தமாக இருக்கும். இதுவரை பிரசாரம் மேற்கொண்டதில், மக்களிடம் கண்ட, எழுச்சியை, உணர்ச்சியை வெளிப்படுத்த வேண்டுமென்றால், நாடும் நமதே, நாற்பதும் நமதே என்பதை ராகுல்காந்திக்கு உறுதியாக சொல்லிக்கொள்கிறேன். தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்பட 40 தொகுதியிலும் மிகப்பெரிய ஆதரவு வந்து கொண்டிருக்கிறது. நேரு குடும்பத்திலிருந்து வாரிசாக வந்திருக்கின்றீர்கள், நீடித்த நல்லாட்சியை தரவேண்டும்.

கடந்த 5 வருடமாக, பல கொடுமைகளை சகித்துக்கொள்ளும் நிலையில் மக்கள் உள்ளனர். அவர்களை காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். காங்கிரசின் தேர்தல் அறிக்கையை பார்த்தவுடன் உடனடியாக டெல்லிக்கு பறந்து சென்று வாழ்த்து சொல்ல வேண்டும், மாலை அணிவித்து பாராட்ட வேண்டும் என நினைத்தேன். திராவிட இயக்கத்தின் கொள்கைகளை பிரதிபலிப்பதாக, அந்த அறிக்கை உள்ளது.  திமுக தேர்தல் அறிக்கையை கடந்த 19ம் தேதி வெளியிட்டபோது, தேர்தலின் கதாநாயகனாக மட்டுமல்ல, கதாநாயகியாகவும் அமையும் என தெரிவித்திருந்தேன். திமுக ேதர்தல் அறிக்கை ஹீரோ என்றால், காங்கிரஸ் தேர்தல் அறிக்கை சூப்பர் ஹீரோவாக உள்ளது. மோடியின் தேர்தல் அறிக்கை ஜீரோவாக உள்ளது. திமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டதும் பல்வேறு விமர்சனங்கள், கருத்துக்கள் வந்தன. மத்திய அரசு நிறைவேற்ற வேண்டிய திட்டங்களை எப்படி மாநில அரசு செய்ய முடியும்? மு.க.ஸ்டாலின் தன்னை பிரதமராக எண்ணிக்கொண்டு, இதனை தெரிவிக்கிறாரா என விமர்சனம் வந்தது. மத்தியில் நாம் கை காட்டும் ஆட்சி தான் வரப்போகிறது. ராகுல்காந்தி பிரதமராவார் என்ற தைரியத்தில், நம்பிக்கையில் தான் தேர்தல் அறிக்கையில் அதனை குறிப்பிட்டேன்.

 விவசாயி எனக்கூறிக்கொள்ளும் எடப்பாடி ஒரு விஷவாயு. விவசாயி நாட்டை ஆளலாம். விஷவாயு நாட்டை ஆளக்கூடாது. இதேபோல், ஏழைத்தாயின் மகன் எனகூறிக்கொள்ளும் பிரதமர் மோடி, சாதாரண மக்களை பற்றி கவலைப்படவில்லை. ஏழை, பரம ஏழையாக மாறிக் கொண்டிருக்கிறார்கள். விஜய்மல்லையா, லலித்மோடி மற்றும் கார்ப்ரேட் கம்பெனிகள் கோடி, கோடியாக கொள்ளையடித்துவிட்டு, பறக்கின்றனர்.  கலைஞர் இல்லாத நிலையில் முதன்முதலாக இந்த தேர்தலை சந்திக்கிறோம். அவருக்கு அண்ணாவின் அருகில் 6 அடி நிலம் பெற, நாம் அனுபவித்த கொடுமை, பட்ட வேதனை, அனுபவித்த கஷ்டத்தை யாரும் மறந்திருக்க முடியாது. 6 அடி நிலம் கொடுக்க, இந்த கொள்ளைக்கார கூட்டம் தடுத்தது. பின்னர் நீதிமன்றம் சென்று, போராடி பெற்றோம். அவருக்கு இடம் தர மறுந்த இந்த அயோக்கியர்கள் நாட்டில் இருக்கலாமா? அவர்களை நாட்டை விட்டு விரட்டும் நாள் தான், வரும் ஏப்ரல் 18ம் தேதி.  இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

மோடி ஆட்சி துக்ளக் தர்பார்
கடலூர் மாவட்டம் சிதம்பரம் மக்களவை தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் திருமாவளவன் மற்றும் கடலூர் திமுக வேட்பாளர் ரமேஷ் ஆகியோரை ஆதரித்து சிதம்பரம் மேலவீதியில் நேற்று மாலை நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:  தமிழர்களுக்காக திருமாவளவன் சிந்தித்து, போராடி, வாதாடிக்கொண்டிருக்கிறார். எனவே அவர் மக்களவையில் சென்று முழங்கிட நீங்கள் ஆதரவு தர வேண்டும். இந்தியாவில் ஆட்சி மாற்றம் ஏற்படுகிறது என்றால், அதன் மூலம் தமிழகத்தில் இருக்கும் எடுபிடி ஆட்சியும் தானாக போய்விடும். எப்படி ஆட்சி நடக்க வேண்டும் என்பதற்கான அடையாளம்தான் திமுகவின் ஆட்சி. நான் போராட்டங்களை தூண்டிவிடுவதாக எடப்பாடி கூறுகிறார்.

ஜல்லிக்கட்டு போராட்டத்தில்  காவல்துறையினர் அத்துமீறினார்கள். ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தில் 13 பேரை சுட்டுக்கொன்றனர். கூடங்குளம், எட்டுவழிச்சலைக்கு எதிராக போராடியவர்களை சிறையில் அடைத்தார்கள். இந்த ஆட்சியில் குட்கா வியாபாரிகள் எல்லாம் குதூகலத்துடன் இருக்கிறார்கள்.   மோடியின் 5 ஆண்டுகால ஆட்சியில் 50 ஆண்டுகாலம் நாடு பின்னோக்கி சென்றுவிட்டது. துக்ளக் தர்பார் ஆட்சிதான் மோடியின் ஆட்சி. கருப்பு பணத்தை பிடிக்கிறேன் என்று சொல்லி திருடனை பிடிப்பதற்கு பதிலாக மக்களையெல்லாம் பிடித்து வைத்தவர்தான் மோடி. இவ்வாறு அவர் பேசினார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : MK Stalin ,Dravidian Movement ,Congress , Dravidian Movement, Policy, Congress, MK Stalin
× RELATED முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின்...