வேதாந்தா நிறுவனத்துக்கு எச்சரிக்கை ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்க தடை: மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்

புதுடெல்லி: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி கோரிய வேதாந்தா நிறுவனத்தின் மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், தொடர்ந்து மனுதாக்கல் செய்தால் அபராதம் விதிக்கப்படும் எனவும்  எச்சரித்துள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதாக கூறி, ஆலையை உடனே மூட வேண்டும் என்று கடந்த ஆண்டு மே 22ம் தேதி பொதுமக்கள் மிகப்பெரிய போராட்டத்தை நடத்தினார்கள்.இதையடுத்து ஆலையை மூட தமிழக அரசு உடனடியாக அரசாணை பிறப்பித்து சீல் வைத்தது. மேலும் குடிநீர் இணைப்பு, மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழக அரசின் அரசாணைக்கு எதிராக வேதாந்தா  நிறுவனம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது. இதை விசாரித்த தீர்ப்பாயம், ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடையில்லை என்று தீர்ப்பு வழங்கியது.

எனவே, தமிழக அரசு தரப்பில், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், உச்ச நீதிமன்றமே விசாரித்து ஒரு இறுதி உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டது. இதையடுத்து வழக்கை  பல கட்டங்களாக விசாரித்த உச்ச நீதிமன்றம், தமிழகத்தில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்க முடியாது என தீர்ப்பு வழங்கியது. தேவைப்பட்டால் உயர் நீதிமன்றத்தை அணுகும்படியும் கூறியிருந்தது.  அதையடுத்து வேதாந்தா நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நிலுவையில் உள்ளது.இந்நிலையில், ேவதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி ரோகிந்தன் பாலிநாரிமன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான பிரதான வழக்கு உயர்  நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் போது, உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்வது ஏன்?, இதுபோன்று மீண்டும் மனுதாக்கல் செய்தால் கடும் அபராதம் விதிக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்த நீதிபதிகள், வேதாந்தா  நிறுவனம் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED மூளைகாய்ச்சல் பலி நிலவரம் குறித்து...