×

அரசியலில் அசத்துவாரா அழகு தேவதை நஸ்ரத் ஜகான்!

பெங்கால் திரைப்பட நட்சத்திரமும் பிரபல மாடல் அழகியுமான நஸ்ரத் ஜகான் (29 வயது), எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் மேற்குவங்கத்தின் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தை சேர்ந்த பசிராத் தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். கொல்கத்தாவை சேர்ந்த நஸ்ரத் ‘அவர் லேடி குயின் ஆப் மிஷன்ஸ்’ பள்ளியிலும், பவானிபூர் கல்லூரியிலும் (பி.காம்) படித்தவர். 2010ல் ‘மிஸ் கொல்கத்தா’ அழகிப் போட்டியில் பட்டம் வென்றவர், அடுத்த ஆண்டிலேயே ஷோட்ரு என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். இதுவரை 20 படங்களில் நடித்துள்ள இவரை, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடந்த மாதம் தங்கள் கட்சியின் வேட்பாளராக அறிவித்தது பலரையும் ஆச்சரியத்துக்குள்ளாக்கியது. சமூக வலைத்தளங்களில் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டாலும், அதையெல்லாம் ஒதுக்கித் தள்ளிவிட்டு மிகுந்த தன்னம்பிக்கையுடன் வாக்காளர்களை சந்தித்து ஓட்டு கேட்டு வருகிறார். போகும் இடமெல்லாம் இவரது பிரசாரம் ஆட்டம்...பாட்டம்...கொண்டாட்டமாக களைகட்டுகிறது. இளம் வயது வாக்காளர்களை வெகுவாகக் கவர்ந்துள்ள நஸ்ரத், திரிணாமுல் ஆதரவுடன் வெற்றிக் கனியை வெகு எளிதாகப் பறிப்பார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

தனது வெற்றி வாய்ப்பு குறித்து கூறுகையில், ‘மக்களவை தேர்தலில் போட்டியிடுவேன் என்று கனவு கூட கண்டதில்லை. எதிர்பாராமல் கிடைத்த இந்த வாய்ப்பு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. முதல்வர் மம்தா என் மீது வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்றுவேன். திரிணாமுல் கட்சி வேட்பாளர்களில் 41 சதவீதம் பேர் பெண்கள் என்பது மிகவும் பெருமையாக உள்ளது. எனக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது பற்றி விமர்சிப்பவர்கள், பெண்களை இழிவுபடுத்துவதை வழக்கமாகக் கொண்டவர்கள் தான். அவர்களது கருத்துக்களை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. பெண்களுக்கு அதிக மதிப்பு அளிக்கப்பட வேண்டும் என்பதே எங்களின் விருப்பம். ஆன்லைனில் கண்டபடி எழுதும் இவர்கள்... முதலில் தங்களின் தாய், சகோதரிகளை மதிக்க கற்றுக் கொள்ளட்டும். அப்படி மதித்தால் தான் எங்களைப் போன்றவர்களுக்கும் மதிப்பு கொடுப்பார்கள். நாங்கள் நடிக்கும் திரைப்படங்களை பிரபலப்படுத்துவதற்காக மக்களை நேரில் சந்தித்த அனுபவம் நிறைய உள்ளது. ஒரு அரசியல் தலைவராக, இப்போது அவர்களின் நல்வாழ்வுக்காக குரல் கொடுக்கவும் செயலாற்றவும் உள்ளேன்.

சிறு வயதில் இருந்தே எதிர்ப்புகளையும், சவால்களையும் சந்தித்து வருகிறேன். எதிர்மறையான விமர்சனங்களை முறியடித்து, மக்களின் ஆதரவுடன் அமோக வெற்றியைப் பெற முடியும் என்ற நம்பிக்கை உள்ளது’ என்கிறார் உற்சாகமாக. பாஜக, காங்கிரஸ் கடும் நெருக்கடி கொடுத்தாலும், தொகுதியில் இஸ்லாமிய வாக்காளர்கள் கணிசமாக உள்ளதால் நஸ்ரத்தின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்கிறார்கள் திரிணாமுல் தொண்டர்கள்.
திரிணாமுல் கட்சி வேட்பாளர்களாக இம்முறை நஸ்ரத், மிமி சக்ரவர்த்தி, சதாப்தி ராய், மூன் மூன் சென், தீபக் அதிகாரி என ஐந்து திரைப்பட நட்சத்திரங்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சதாப்தி ராய், மூன் மூன் சென், தேவ் ஆகியோர் 2014 மக்களவை தேர்தலில் வென்று எம்.பி. ஆனவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த முறை வெற்றி பெற்ற நட்சத்திரங்கள் தபஸ் பால், சந்தியா ராய்க்கு மறுபடி வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Nazriya Jagan , politics, Nazrath Jagan,
× RELATED மழையில் நெல் மூட்டைகள் சேதம்; உணவு...