×

அஞ்சுகிராமம் அருகே பரபரப்பு: டாஸ்மாக் ஊழியருக்கு அரிவாள் வெட்டு... பணம் இல்லாத பையை பறித்து சென்றது கும்பல்

நாகர்கோவில்: அஞ்சுகிராமம் அருகே டாஸ்மாக் ஊழியரை அரிவாளால் வெட்டி பணம் இல்லாத பையை பறித்து சென்ற கும்பல் யார்? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். நாகர்கோவில் வடசேரி ஆறாட்டு ரோடை சேர்ந்தவர் நம்பி(44). அஞ்சுகிராமம் அருகே மருங்கூர் டாஸ்மாக் கடையில் உதவி விற்பனையாளராக உள்ளார். அதே கடையில் லெட்சுமிபுரம் அருகே உள்ள கோணங்காடு பகுதியை சேர்ந்த கதிரேசன் விற்பனையாளராகவும், ராஜா விற்பனை மேற்பார்வையாளராகவும் உள்ளார். இவர்கள் நேற்று டாஸ்மாக் கடையில் விற்பனை முடிந்து தனித்தனி பைக்குகளில் வீட்டிற்கு வந்துகொண்டு இருந்தனர். முன்னால் நம்பி பைக்கில் சென்றுகொண்டு இருந்தார். பின்னால் கதிரேசன், அதனை தொடர்ந்து ராஜா ஆகியோர் வந்துகொண்டு இருந்தனர். கதிரேசன் பைக்கில் ஒரு பை வைத்திருந்தார். இரவிபுதூர் இடகரை புலமாடசாமி கோயில் அருகே அவர்கள் வந்து கொண்டு இருந்தனர். அப்போது சாலையோரம் உள்ள புதரில் மறைந்து இருந்த 3 பேர் கதிரேசன் பைக்கை வழிமறித்தனர்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தவர் பைக்கை நிறுத்தினார். உடனே அவர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் கதிரேசனை சரமாரியாக அரிளாவால் வெட்டிவிட்டு, அவர் வைத்திருந்த பையை பறித்துக்கொண்டு தப்பிச்சென்றனர். படுகாயம் அடைந்த கதிரேசன் நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். கதிரேசனிடம் இருந்து பறித்து சென்ற பையில் பணம் ஏதும் இல்லை. டாஸ்மாக் ஊழியர்களை கண்காணித்து வந்த கும்பல் கடையில் விற்பனை செய்த பணத்தை கொண்டுவருவார்கள், பறித்து செல்லலாம் என்று திட்டமிட்டு இருந்தது தெரியவந்தது.  ஆனால் டாஸ்மாக் ஊழியர்கள் கடையில் விற்பனையான பணத்தை லாக்கரில் வைத்ததால் பணம் தப்பித்தது. இது குறித்து நம்பி அஞ்சுகிராமம் காவல்நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பெண்ணிடம் செயின் பறிப்பு
அஞ்சுகிராமம்  அருகே லீபுரம் அம்மனாக்காவிளை பகுதியை சேர்ந்தவர் ராமசந்திரன். இவரது  மனைவி லீலா(40). தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் வேலைபார்த்து  வருகிறார். நேற்று ேவலை முடிந்து, வீட்டிற்கு நடந்து சென்றுகொண்டு  இருந்தார். அப்போது பைக்கில் வந்த ஒருவர் லீலா கழுத்தில் கிடந்த 2 பவுன்  செயினை பறித்தார்.  இதனால்  லீலா செயினை பிடித்துக்கொண்டு திருடனுடன் போராடினார். அப்போது ஒரு துண்டு  லீலா கையிலும், மற்றொரு துண்டு அந்த நபரின் கையிலும் சிக்கியது. கையில்  கிடைந்த 10 கிராம் எடைகொண்ட நகையுடன் அந்த நபர் தப்பிச்சென்றார். இது  குறித்து லீலா அஞ்சுகிராமம் போலீசில் புகார் செய்தார். போலீசார்  வழக்குபதிவு செய்து மர்ம நபரை தேடி வருகிறார்கள்.

ரூ1 லட்சம் தப்பியது
மருங்கூர் டாஸ்மாக் கடையில் சரக்கு விற்ற பணம் ரூ.1 லட்சத்தை விற்பனையாளர்கள் நம்பி, கதிரேசன் ஆகியோர் கடையில்  உள்ள லாக்கரில் வைத்து பூட்டி சென்றுள்ளனர். இதனால் விற்பனையாளர்கள் கொண்டு சென்ற பையில் பணம் இல்லை. ஆகவே கொள்ளையர்களுக்கு அந்த பணம் இல்லாமல் போய்விட்டது. ஆகவே ரூ.1 லட்சம் பணம் தப்பியது  குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Anchagram , Anchagram, Taskmak employee, cut the sickle
× RELATED அஞ்சுகிராமம் அருகே பெண்ணிடம் செயின் பறிப்பு