×

தபால் வாக்குச்சீட்டுகள் 70% பேருக்கு கிடைக்கவில்லை: ஜாக்டோ ஜியோ புகார்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில், தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் 70 சதவீதம் பேருக்கு தபால் வாக்குச்சீட்டு கிடைக்கவில்லை என ஜாக்டோ ஜியோ சார்பில் நேற்று கலெக்டரிடம் புகார் மனு அளித்தனர். திருவண்ணாமலை மாவட்டத்தில், தேர்தல் பணியில் ஈடுபடும் 11,515 அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கடந்த 7ம் தேதி 2ம் கட்ட தேர்தல் பயிற்சி வகுப்பு நடந்தது. மாவட்டம் முழுவதும் 8 இடங்களில் நடந்த பயிற்சி வகுப்பின்போது, தபால் வாக்குச்சீட்டுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், தேர்தல் பயிற்சி வகுப்பில் பங்கேற்ற பெரும்பாலான அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு தபால் வாக்குச்சீட்டுகள் வழங்கப்படவில்லை. படிவம் 12 மற்றும் 12ஏ ஆகியவற்றை முறையாக பூர்த்தி செய்து, வாக்காளர் அடையாள அட்டை நகலை இணைத்து அளித்தும், வாக்குசசீட்டுகள் கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்தனர். தொகுதி மாறி சென்று விட்டது, சம்பந்தப்பட்ட தாலுகா அலுவலகங்களில் நேரில் பெற்றுக்கொள்ளுங்கள் என அதிகாரிகள் தரப்பில் விளக்கம் அளித்தனர். அதன்படி, தாலுகா அலுவலகங்களிலும் கடந்த 2 நாட்களாக தபால் வாக்குச்சீட்டுகள் வழங்கவில்லை.
இந்நிலையில், ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் நிர்வாகிகள் ஒருங்கிணைந்து, திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று, கலெக்டர் கே.எஸ்.கந்தசாமியை சந்தித்து மனு அளித்தனர்.

அதில், தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களில் 70 சதவீதம் பேருக்கு இதுவரை தபால் சீட்டுகள் வழங்கவில்லை. அதனை முறையாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தங்களுடைய தபால் வாக்குச்சீட்டுகள் தவறாக பயன்படுத்தப்படுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.  எனவே, அனைத்து அலுவலர்களுக்கும் தபால் வாக்குச்சீட்டுகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். வரும் 13ம் தேதி நடைபெறும் 3வது கட்ட தேர்தல் பயிற்சி வகுப்புக்குள், தபால் வாக்குச்சீட்டுகள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Postal, ballot, 70%, Zakto Geo, Complaint
× RELATED இஸ்லாமியர்கள் குறித்து அவதூறு...