×

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை தீர்க்க புதிய திட்டம் செயல்படுத்துவேன்: திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு உறுதி

சென்னை: ஸ்ரீ பெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு தொகுதி முழுவதும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். நேற்று, காஞ்சி வடக்கு மாவட்டம், குன்றத்தூர் ஒன்றியம்,  அய்யப்பன்தாங்கல் ஊராட்சி பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் வீதி வீதியாக சென்று பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். மாவட்ட செயலாளர் தா.மோ.அன்பரசன் எம்எல்ஏ, கழக முன்னணி நிர்வாகிகள் மற்றும் தோழமை கட்சிகளை சேர்ந்த பகுதி நிர்வாகிகள் உட்பட  ஏராளமானோர் உடன் சென்று, உதயசூரியன் சின்னத்துக்கு வாக்கு சேகரித்தனர்.பிரசாரத்தின்போது டி.ஆர்.பாலு பேசியதாவது: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மக்கள் தொகை நாளுக்குநாள் அதிகரித்து வருவதாலும், வாகனங்கள் பெருகி விட்டதாலும், மக்கள் தினமும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கின்றனர். பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று  வரும் மாணவ மாணவியர், வேலைக்கு மற்றும் அத்தியாவசிய தேவைக்காக காலை, மாலை நேரங்களில் வெளியே செல்லும் பொதுமக்கள் நெரிசலில் சிக்கி அவதிப்படுகின்றனர்.

இதற்கு காரணம் தற்போது ஆட்சியில் உள்ளவர்கள் போக்குவரத்து நெரிசல் பிரச்னையை தீர்க்க எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. மக்கள் படும் வேதனையை கண்டுகொள்ளவில்லை. எனவே, பொதுமக்கள் போக்குவரத்து  நெரிசலில் சிக்காமல், எளிதாக சென்று வரும் வகையில் பல்வேறு திட்டங்கள் கொண்டுவர திட்டமிட்டிருக்கிறேன். குறிப்பாக, புதிய பாதைகள் அமைக்கப்படும், மெட்ரோ ரயில் பாதைகள் விரிவுபடுத்தி புதிதாக மூன்றாவது வழித்தட மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வருவேன். திருமங்கலத்தில் இருந்து அம்பத்தூர் வரை, கத்திப்பராவில் இருந்து  பூந்தமல்லி வரை மற்றும் மீனம்பாக்கம் பகுதியில் உள்ள மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து வண்டலூர் பூங்கா வரை நீட்டிக்க உள்ளேன். இதன் மூலம் பொதுமக்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் எளிதாக சென்று  வரமுடியும்.  அதுமட்டுமின்றி போக்குவரத்து நெரிசலில் பொதுமக்கள் சிக்காமல் இருக்க பல்வேறு சாலை, பாலப் பணிகள் அமைக்கப்படும். எனவே, பொதுமக்கள் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து பெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதியில் என்னை வெற்றிபெற செய்ய வேண்டும்.  இவ்வாறு அவர் பேசினார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : TR Baalu ,DMK , increase , traffic congestion, DMK candidat,e TR Baalu
× RELATED திமுக சார்பில் நீர்மோர் வழங்கல்