×

பெண்களுக்கு ரூ.2 ஆயிரம், சேலை, ஸ்வீட் பாக்ஸ் போடியில் ஓபிஎஸ் 2 வது மகன் தலைமையில் பணப்பட்டுவாடா: திருமண மண்டபத்தை திமுக, அமமுக முற்றுகை

போடி: தேனியில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் ேமாடி பங்கேற்கும் கூட்டத்திற்கு ஆள்சேர்க்க தலைக்கு ரூ.2 ஆயிரம் பட்டுவாடா செய்யப்பட்ட திருமண மண்டபத்தை திமுக, அமமுகவினர் 3 மணிநேரம் முற்றுகையிட்டனர். பணப்பெட்டியுடன் ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப் உள்ளிட்ட அதிமுகவினர் தப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. தேனி மக்களவை தொகுதியில் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்குமார் போட்டியிடுகிறார். இவருக்கு வெற்றி வாய்ப்பு இல்லையென்ற ரகசிய சர்வே முடிவு, அதிமுகவினர் வயிற்றில் புளி கரைத்துள்ளது. இதனால் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்தாவது வெற்றி பெற முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. வரும் 13ம் தேதி அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டம் தேனியில் நடக்கிறது.

இதற்கு ஆள் திரட்ட  நேற்று காலை போடி நூறு அடி சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் வரவழைக்கப்பட்டனர்.  ஒவ்வொரு பெண்ணுக்கும் தலா ரூ.2 ஆயிரம் ரொக்கம், அதிமுக சின்னம் பொறித்த சேலை, ஸ்வீட் பாக்ஸ் வழங்கப்பட்டது.
இதுகுறித்த தகவலறிந்த போடி திமுக முன்னாள் எம்எல்ஏ லட்சுமணன்,  நகரச் செயலாளர் செல்வராஜ், அமமுக நகர செயலாளர் ஞானவேல் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் திருமண மண்டபத்தை முற்றுகையிட்டனர். அப்போது துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் இரண்டாவது மகன் ஜெயபிரதீப், பணப்பட்டுவாடா செய்து கொண்டிருந்தார். மண்டபத்தில் எதிர்க்கட்சியினர் உள்ளே நுழைந்ததும், ஜெயபிரதீப்பும், அதிமுக நகரச் செயலாளர் பழனிராஜூம் பணப்பெட்டியை அருகில் உள்ள வீடுகளில் பதுக்கி விட்டு தப்பியோடி விட்டதாக கூறப்படுகிறது.

தகவலறிந்த பறக்கும்படை அதிகாரி வெளியப்பன் தலைமையில் குழு மண்டபத்திற்கு வந்தது. ஆனால், அவர்கள் பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டவர்களை காப்பாற்றும் நோக்கில்  செயல்பட்டனர். இதனால், திமுக, அமமுகவினர் அவர்களை முற்றுகையிட்டனர். போடி டிஎஸ்பி ஈஸ்வரன் தலைமையிலான போலீசார் திமுக, அமமுகவினருடன் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பணம் கொடுத்தவர்களை பிடிக்க வேண்டிய பறக்கும் படையும், போலீசும் தப்பவிட்டதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டினர். சுமார் 3 மணிநேரமாக முற்றுகை போராட்டம் நடத்திய எதிர்க்கட்சியினர், அதன் பின் கலைந்து சென்றனர். இதனால், போடியில் பெரும் பரபரப்பு நிலவியது.

‘தேர்தல் ஆணையம் தலையிட வேண்டும்’போடி திமுக முன்னாள் எம்எல்ஏ லட்சுமணன் கூறுகையில், போடியில் உள்ள திருமண மண்டபத்தில் மகளிர் குழுக்கள் 3 ஆயிரம் பேருக்கு துணைமுதல்வர் ஓபிஎஸ்சின் மகன் ஜெயபிரதீப் தலைமையில் அதிமுகவினர் தலா 2 ஆயிரம் ரூபாய் ரொக்கம், சேலை, ஸ்வீட் பாக்ஸ் கொடுத்தனர். இதுகுறித்த தகவல் தெரிந்தவுடன் மண்டபத்தை முற்றுகையிட்டோம். ஆனால் அவசர, அவசரமாக பணமூட்டைகளை வெளியே வீசி எறிந்து விட்டார்கள். தேர்தல் ஆணைய அதிகாரிகள், போலீசார் ஓபிஎஸ்சிற்கு கைக்கூலியாக செயல்படுகின்றனர். ஆளுங்கட்சியின் தவறுகளுக்கு துணைபோகிறார்கள். போடி பகுதியில் நடக்கும் பணப்பட்டுவாடாவை இந்திய தேர்தல் ஆணையம் தலையிட்டு தடுத்து நிறுத்த வேண்டும் என்றார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : women ,marriage hall ,OBS ,DMK , Girl, Rs.2000, sari, sweet box, ops, 2nd son, DMK, ammus siege
× RELATED உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்ற...