×

வேலூர், தி.மலை மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் சரிவு: குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

வேலூர்: தமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டம் குறித்து, மாநில நில மற்றும் நீர்வள ஆதார விவர குறிப்பு மையம் ஒவ்வொரு மாதமும் ஆய்வு மேற்கொண்டு வருகிறது. இதற்காக 3,280 பகுதிகளில் உள்ள திறந்தவெளி கிணறுகள் மற்றும் 1,559 ஆழ்துளை கிணறுகள் மூலம் நிலத்தடி நீர்மட்டம் குறித்து ஆய்வு நடத்தப்படுகிறது. அதன்படி, கடந்த மாதம் நடத்தப்பட்ட ஆய்வில் ஈரோடு, கோவை, திருப்பூர், திருநெல்வேலி, தேனி, தூத்துக்குடி ராமநாதபுரம், மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. வேலூர், திருண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவள்ளூர் உள்ளிட்ட 19 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது. இதில், வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதத்துடன் இந்த ஆண்டு மார்ச் மாதம் ஒப்பிடும்போது திருவண்ணாமலை மாவட்டத்தில் 15 அடியும், வேலூர் மாவட்டத்தில் 10 அடி வரை நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது. இதுகுறித்து நில மற்றும் நீர்வள ஆதார பிரிவு அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் கடந்த ஆண்டு பருவமழை பொய்த்ததாலும், நிலத்தடி நீர் பயன்பாடு அதிகரித்ததாலும் தமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டம் ஒவ்வொரு மாவட்டத்திலும் படிப்படியாக குறைந்து வருகிறது.

அதன்படி, வேலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் நடத்தப்பட்ட ஆய்வில் 22 அடியில் கிடைத்த நிலத்தடி நீர், இந்த ஆண்டு மார்ச் மாத ஆய்வின் போது 32 அடியில் கிடைக்கிறது. அதேபோல், திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாத ஆய்வில் 14 அடியில் கிடைத்த நிலத்தடி நீர் மட்டம், இந்த ஆண்டு மார்ச் மாதம் 29 அடிக்கு சென்றுள்ளது. கடந்த ஆண்டு எதிர்பார்த்த அளவு வடகிழக்கு, தென்மேற்கு பருவமழை பெய்யவில்லை. இதனால் வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ள நீர்நிலைகளில் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது. வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் குடிநீர் கேட்டு சாலை மறியல் போராட்டங்கள் நடந்து வருகின்றன. கோடைகாலமான ஏப்ரல், மே மாதங்களில் குடிநீர் தேவை அதிகரிப்பால், குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதற்காக வீடுகள், அரசு, தனியார் அலுவலகங்களில் மழைநீர் சேகரிப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Vellore ,Thunderstorms ,Thalassery District , Vellore, Thunderstorm, Thalassery, Drinking Water
× RELATED பைக் மீது லாரி மோதி வாலிபர் பலி 2 பேர்...