×

நடத்தாத பாடத்தின் செமஸ்டர் தேர்வு விடைத்தாள்களை திருத்துவதில் தன்னாட்சி கல்லூரி ஆசிரியர்களுக்கு முன்னுரிமை

* சென்னை பல்கலைக்கழகத்தில் விநோதம்
* பிற கல்லூரி ஆசிரியர்கள் குற்றச்சாட்டு

சென்னை: சென்னை பல்கலைக்கழகத்தில் நடத்தாத  பாடத்துக்கான விடைத்தாள்களை திருத்த தன்னாட்சி கல்லூரி ஆசிரியர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளதாக தனியார் கல்லூரி ஆசிரியர்கள் குற்றம்சாட்டினர்.
செமஸ்டர் தேர்வு விடைத்தாள்களை திருத்துவதில் தன்னாட்சி கல்லூரி ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட முன்னுரிமையால் தங்களுக்கான வாய்ப்பு மறுக்கப்படுவதாக தனியார் கல்லூரி ஆசிரியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் மேலும் கூறியதாவது:சென்னை பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டம் என்பது சென்னை பல்கலைக்கழகத்தின்கீழ் செயல்படும் அரசுக்கல்லூரிகள், பல்கலைக்கழக கல்லூரிகள், தனியார் கல்லூரிகள் பின்பற்றுகின்றன. அந்த கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்களையே குறிப்பிட்ட பாடத்திட்டத்தின் விடைத்தாள்களை திருத்த அனுமதிக்க வேண்டும். தன்னாட்சி அதிகாரம் பெற்ற கல்லூரிகளின் பாடத்திட்டம், சென்னை பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தில் இருந்து சற்று வேறானது.

ஒரே பெயரில் பாடம் இருந்தாலும் அதன் பாடத்திட்டம் வேறாக இருக்கும். அவ்வாறு வேறு பாடத்திட்டத்தை பின்பற்றினால் மட்டுமே அவை தன்னாட்சி அதிகாரம் பெற்ற கல்லூரிகளாக இருக்க முடியும்.ஆனால் சென்னை பல்கலைக்கழகத்தில் குறிப்பிட்ட பாடத்திட்டத்தில் பாடம் நடத்தாத தன்னாட்சி அதிகாரம் பெற்ற கல்லூரி ஆசிரியர்களை விடைத்தாள் திருத்துவதில் சப் இன்விஜிலேட்டராக நியமிக்கின்றனர். ஒரே கல்வித்தகுதி பெற்ற இரு ஆசிரியர்களை அரசுக்கல்லூரியாக இருந்தாலும் சரி, தனியார் கல்லூரியாக இருந்தாலும் சரி ஒரே மாதிரியாகவே நடத்த வேண்டும் என்று தனியார் கல்லூரி வரைமுறை சட்டம் சொல்கிறது. ஆனால் சென்னை பல்கலைக்கழகத்தில் தன்னாட்சி அதிகாரம் பெற்ற கல்லூரி ஆசிரியர் முதல் முன்னுரிமையும், தனியார் கல்லூரி ஆசிரியருக்கு இரண்டாம் முன்னுரிமையும் வழங்கி வருகின்றனர். சென்னை பல்கலைக்கழகத்தில் முறை பல ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வருகிறது.

வேலூர் திருவள்ளூவர் பல்கலைக்கழகத்தில், உரிய பாடத்திட்டத்தில் பாடம் நடத்திய ஆசிரியர்கள் மட்டுமே விடைத்தாட்களை திருத்த அனுமதிக்கின்றனர். இதுதொடர்பாக சென்னை பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு கடிதம் எழுதியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இவ்வாறு தனியார் கல்லூரி ஆசிரியர்கள் குற்றம்சாட்டினர். இதுதொடர்பாக சென்னை பல்கலைக்கழக நிர்வாகப்பிரிவு உயரதிகாரி ஒருவரை தொடர்புகொண்டபோது, அவர் கூறியதாவது: தன்னாட்சி அதிகாரம் பெற்ற கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு  பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டம் தெரியும். அவர்களால் அதில் பாடம் நடத்த  முடியும். தன்னாட்சி அதிகாரம் பெற்ற கல்லூரிகளில் பாடத்திட்டத்தை  வடிவமைப்பதில் கூட, பல்கலைக்கழகத்தின் பிரதிநிதி இருப்பார். அவர்களுக்கு  முன்னுரிமை அளிக்கப்படுவதில்லை மாதக்கணக்கில் விடைத்தாள் திருத்தும் பணியை மேற்கொள்ள முடியாது. அதனால் குறிப்பிட்ட கால அவசாத்துக்குள் விடைத்தாள் திருத்தும் பணியை முடித்து தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும். அதனால் விடைத்தாள் திருத்தும் பணிக்கு வர யார் தயாராக இருக்கிறார்களோ அவர்களை வைத்து விடைத்தாளை திருத்துகிறோம் என்றார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : authors ,college teachers , Semester Exam, autonomous college teachers
× RELATED 12ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி...